என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.
காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இருந்தபோதும் தொடர்ந்து பற்றி எரிந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் நீங்கி உள்ளது.
நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப்பெரியாறு அணைக்கு 54 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது. 1576 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
இதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 177 கன அடி நீர் வந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 422 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3531 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.70 அடியாக உள்ளது. வரத்து 11 கன அடி. திறப்பு இல்லை.
ஆண்டிபட்டி 4.8, வீரபாண்டி 4.6, பெரியகுளம் 12, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 9, வைைக அணை 8.2, போடி 2.8, உத்தமபாளையம் 5.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 1.2, தேக்கடி 11.8, சண்முகாநதி 6.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பொழிந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
- டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.
அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-
அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.
தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.
இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.
5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. வானிலை மையம் ஏற்கனவே நேற்றும், இன்றும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது.
கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்டத்திலும் கள்ளக்கடல் எச்சரிக்கையால் நேற்று மீனவ கிராமங்களான கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல், உவரி உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இன்றும் 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
- மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.
- இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.
தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரிய பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
* மொத்தம் 1,635 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
* மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.
* மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்வதில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.
* தமிழ்நாட்டில் கல்விமுறை சிறந்தது என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏன் மாற்ற வேண்டும்?
* தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல - அது நமது வேர்கள், வரலாறு மற்றும் மதிப்புகளுடன் தொடர்புடையது.
* நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.
* இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.
* NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 300 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும்.
- மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை டன்னுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றது. தி.மு.க. இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் ஆதார விலையோடு சேர்த்து 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும். 2025-2026-ம் ஆண்டு கரும்பிற்கான ஆதார விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும். இரண்டையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
- 11-ம் திருவிழாவான நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
8-ம்திருவிழா அன்று காலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா, மதியம் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் பெரிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
தேரை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கதிரேசன் ஆதித்தன், தலைமை நீதித்துறை நடுவர் வசித்குமார்,திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் திருப்பதி மற்றும் குமரேச ஆதித்தன், ரெங்கநாத ஆதித்தன், டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், சிவபாலன் ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், சரவண ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், குமாரர் ராமசாமி ஆதித்தன், சேகர் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேச ஆதித்தன், ஹெக்கேவார் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் தெய்வானை அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணை பிளந்தது.

11-ம்திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம்திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி:
கோவை நகரில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான பானங்களை வாங்கி குடித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் சற்று மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து சாரல் மழை, பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இடியுடன் பெய்த கனமழைக்கு அவினாசி சாலை, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் அதில் மெல்ல ஊர்ந்து சென்றன.
திடீர் மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று திரும்பியோர் பலர் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. சிலர் மழைக்கு ஆங்காங்கே பாதுகாப்பாக ஒதுங்கி நின்றனர்.
இதேபோல் உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த திடீர் மழையால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை மாறியது. இரவிலும், அதிகாலையிலும் குளிர் தெரிந்தது. வெப்பணம் தணிந்து குளிர் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர், சேலாஸ், கொலகம்பை, வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, காட்டேரி, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக அங்குள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைக்கு, ஓட்டு பட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் சமுதாயக்கூடம் அருகே தடுப்பு சுவர் இல்லாததால் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள புவனேஸ்வரி மற்றும் சுலோச்சனா ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக ஊட்டியில் கடந்த சில தினங்களாக நிலவிய வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.






