என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
    • சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • கோயம்பேட்டில் இருந்து நாளை தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வார விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 966 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை (14-ந்தேதி) 270 பஸ்களும், 15-ந்தேதி 275 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    கோயம்பேட்டில் இருந்து நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    • சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
    • எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது.

    ஒவ்வொரு திரையிலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதால் உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.

    உதயம் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் உள்ள மேலும் இரு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா திரையரங்கமும் மூடப்படுவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்டையார்பேட்டையில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட எம்.எம். திரையரங்கம் தொடர்ந்து நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

    பெரம்பூரில் 1985ஆம் ஆண்டு ஸ்ரீபிருந்தா தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அதன்பின்பு இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு ரஜினி தியேட்டர் என்றே அழைத்தார்கள். இந்த தியேட்டரில் மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடின.

    சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
    • முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலட்சினையில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * தமிழக அரசு பட்ஜெட்டுக்கான லோகோவில் ரூபாய்க்கான குறியீடை நீக்கி விட்டு, ரூ என வெளியிட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.

    * ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

    * உங்களால் எப்படி முட்டாளாக இருக்க முடிகிறது மு.க.ஸ்டாலின் அவர்களே?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டில் நடக்கும் கொலைகளை தனிப்பட்ட பிரச்சனைகள் என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.
    • விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?

    திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,

    அன்றே இந்த விடியா திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா?

    அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..

    "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

    தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க என தெரியாமல், யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும் முதலமைச்சர் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது,

    சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது. இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது,

    விடியா ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
    • காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

    தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

    தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

    சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
    • தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. அரசு தலைமை கொறடா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

    சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.

    தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

    சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… என்று பதிவிட்டு லோகோவை அவர் வெளியிட்டுள்ளார்.

    ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    • சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

    சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார். வரும் நிதியாண்டான 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிப்பார்.

    இந்த நிலையில் மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25"-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

    • எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல.
    • பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை:

    திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், தமிழக அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோவிலில் அர்ச்சராக பணி புரிந்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடைபெற்ற நிகழ்வில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை மறைத்து ஐகோர்ட்டில் எச்சிலையில் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

    இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

    இதே போல தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட கலெக்டரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை இதே நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இருந்து இன்று பிறப்பித்தனர்.

    அந்த தீர்ப்பில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    • 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது70). விவசாயி. இவரது மனைவி தெரசாள் (65). இவர்களுக்கு சகாயராணி, விக்டோரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சகாயராணிக்கு திருமணம் ஆகவில்லை. இளைய மகள் விக்டோரியாவிற்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் லூர்துசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். மேலும், மகள் சகாயராணி வேலைக்கு சென்று இவர்களை பராமரித்து வந்தார். லூர்துசாமி மனைவி தெரசாள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மகள் சகாயராணி தாயாருடன் தங்கி அவரை கவனித்து வருகிறார்.

    இதனால் தனிமையில் இருந்த லூர்துசாமியை கவனித்துக்கொள்ள அவரது மனைவி தெரசாளின் தங்கை எலிசபெத் (60) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்னல்வாடிக்கு வந்து அங்கேயே தங்கி அவரை கவனித்து வந்தார்.

    நேற்று மாலை, லூர்துசாமி, கொழுந்தியாள் எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் லூர்துசாமி, எலிசபெத் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    தொடர்ந்து மர்ம கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. வீட்டில் புகை வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு லூர்துசாமி, எலிசபெத் ஆகியோர் கொலை செய்யப்பட்டு தீயில் கருகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எலிசபெத் காதில் அணிந்து இருந்த தோடு, கழுத்தில் அணிந்து இருந்த நகை திருட்டு போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து இந்த மர்மகும்பலை பிடிக்க ஓசூர் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது.
    • தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.

    தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே த.வெ.க.வில் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.

    ×