என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இது தவிர கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும். மூல வைகை ஆறு வறண்டுள்ளதால் வைகை அணைக்கு 25 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக சரிந்துள்ளது.
மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2802 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1593 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.70 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. கூடலூர் 2.6, சண்முகாநதி 3.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
- ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் கொண்டது.
இந்த ஏரி மூலம் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் நடவு பருவங்களில் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.
வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன் வடவாற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் வந்ததை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்தை நிறுத்தினார்கள்.
ஏரியின் முழு கொள்ளளவான 48.50 அடியில் தற்போது 44 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை பொங்கி காணப்படுகிறது.
இதனால் ஏரியில் ரசாயனம் ஏதேனும் கலந்திருக்கலாம் என விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தண்ணீர் பச்சை நிறமாக மாறியபோது சென்னை மாசு கட்டுப்பாடு மற்றும் தண்ணீர் ஆய்வு அதிகாரிகள் ஏரியில் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர்.
அதேபோல் மீண்டும் அதிகாரிகள் ஏரி தண்ணீரை ஆய்வு செய்து விவசாயிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர்.
- விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.
அதன்படி, அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். ஆம்னி வேனானது இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் பயணித்த சாஜிநாத், ராஜேஷ், சுஜித், ராகுல் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உள்ளே இருந்த 3 பேர் படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கே வந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 4 பேரின் உடல்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நண்பர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும்.
- சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் (ஹால்டிக்கெட்டில்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தவகையில் தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.
வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச்செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது உள்ளிட்ட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக கத்திரி வெயிலின்போது வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இயற்கை மருத்துவர்கள் கூறும்போது, 'அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குறிப்பாக, பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கோடைகாலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்' என்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறும்போது, 'தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 6-ந்தேதி இதேபோன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 7, 8-ந்தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது' என்றார்.
- பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
- படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பைசன் திரைப்படம் நடப்பு ஆண்டின் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வௌியிட்டுள்ளார்.
- ஸ்டாலின் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
- சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொதுவாக எனக்கு பாராட்டு விழா என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.
விழாவுக்கு ஒப்புக் கொண்டதே தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்புதான்.
ஸ்டாலினின் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.
மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் தகுதிப்படுத்திக் கொள்ள கடுமையக உழைப்பேன்.
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு நிர்ணயித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி மசோதாவை நிறுத்தி வைத்தால் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.
முதலமைச்சராகி மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டினால், After all மத்திய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட, Temporary-அ தங்கி இருக்கிற ஒரு ஆளுநர் அவைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு என்ன மரியாதை ?
பிரதமரின் உரிமைகளை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா ?
ஆளுநர் தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்.
திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு, இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெற உழைக்கிறோம்.
அறிவியலை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை கற்றுத் தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது.
இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலை சமூக வலைத்தளங்களில் தேட வேண்டாம்.
படிக்காமலேயே பெரிய ஆளாகிவிடலாம், யூடியூப் உள்ளிட்டவற்றில் சம்பாதிக்கலாம் என சொல்வார்கள் அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. உலகம் மிகப்பெரியது. அதைப்பார்க்க கல்வி என்ற கண்ணாடி வேண்டும். சாதி, மதம் என்று சுருங்கி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக- பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி.
- இன்னும் பல கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரப்போகின்றன.
சென்னை தி.நகரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இது எங்கள் கட்சி, நாங்கள் வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்திருக்கிறோம்.
அதிமுக- பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி.
இன்னும் பல கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரப்போகின்றன.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுக்குள் இணையும்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என முதலமைச்சர் நினைத்தார்.
திமுகவுக்கு அதிகாரம் தான் முக்கியம், கொள்கை முக்கியம் இல்லை.
எந்தக் காரணத்தையும் கொண்டு திமுக மீண்டும் ஆட்சி வரக் கூடாது என்பது மக்களின் எண்ணம்.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா ? நீங்கள் மட்டும் யாருடனும் கூட்டணி வைப்பீர்கள்?
அதிமுகவை மிரட்டி பாஜக பணிய வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
பச்சோந்தியை விட வேகமாக நிறத்தை மாற்றுவது போல் கூட்டணியை மாற்றும் திமுக
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
- அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா தொடங்கியது.
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
- திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
- கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
- எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.
தேமுதிக கட்சியில் இருந்து தான் விலகுவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-
தேமுதிக பொதுக்குழுவில் நான்கு பேர் துணை பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அதில் ஒரு பதவி எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை என்பதால் வருத்தம் அடைந்தேன்.
உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
ஆனால், எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.
என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தேமுதிகவில் தான் இருப்பேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில்," சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து, பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது.
அதனால், சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






