என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீராணம் ஏரியில் பொங்கும் நுரை ரசாயனம் கலந்ததா? - பொதுமக்கள் அச்சம்
- வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
- ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் கொண்டது.
இந்த ஏரி மூலம் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் நடவு பருவங்களில் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.
வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன் வடவாற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் வந்ததை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்தை நிறுத்தினார்கள்.
ஏரியின் முழு கொள்ளளவான 48.50 அடியில் தற்போது 44 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை பொங்கி காணப்படுகிறது.
இதனால் ஏரியில் ரசாயனம் ஏதேனும் கலந்திருக்கலாம் என விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தண்ணீர் பச்சை நிறமாக மாறியபோது சென்னை மாசு கட்டுப்பாடு மற்றும் தண்ணீர் ஆய்வு அதிகாரிகள் ஏரியில் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர்.
அதேபோல் மீண்டும் அதிகாரிகள் ஏரி தண்ணீரை ஆய்வு செய்து விவசாயிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






