என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
    • சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார்.

    அப்பொழுது மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையின் விற்பனையாளர்கள் செய்வதறியாமல், மது வாங்க வந்த இளைஞரை எச்சரித்து, மது (பீர்) கொடுத்து அனுப்பி விட்டனர்.

    மது வாங்கி கொண்டு சென்ற அந்த வாலிபர், பீர் பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் நான்கு ரோட்டில், சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.

    சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர். அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்து கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுத்தும், பாம்பு மற்றும், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்தும், வித்தைக்காட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    • 43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?
    • 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்.

    தைலாபுரம்:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியாக சந்தித்த அன்புமணி, 45 நிமிடம் சந்தித்த போதிலும் தோல்வியில் முடிந்தது.

    இதனை தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி 3 மணிநேரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை சென்ற ராமதாஸ் அங்கும் குருமூர்த்தியை சந்தித்ததாக தெரிவித்தார். பா.மக. நிறுவனர் ராமதாஸ் நீக்கும் பொறுப்பாளர்கள், கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்த வக்கீல் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கி, உயர்நீதிமன்ற வக்கீல் கோபுவை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.

    இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார். அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது.

    பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.

    • 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

    3 பேர் உயிரிழந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.
    • மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம், முடக்குளத்தை சேர்ந்தவர் மோகன் நாயர். இவரது மனைவி அம்பிகா (வயது 67). இவரது மகள் மாலினி (40).

    மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் வந்து நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு வைத்து குளிர்பானத்துடன் கலந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.

    அப்போது வாந்தி வரவே விடுதி ஊழியரிடம் நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.
    • கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சைக்கு வருகிற 15,16 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருணாநிதி சிலை திறப்பு, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டன.

    பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    முதலமைச்சர் தஞ்சை வருகையை முன்னிட்டு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக முதலமைச்சரை வரவேற்கும் விதமாக இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மொத்தம் தஞ்சை மாநகரில் 3 இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விதைநெல், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தட்டுபாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே ஆறு, குளம், வாய்க்கால்கள் தூர்வாருவது குறித்து முடிவு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டன. கடைக்கோடி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.

    கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஐவர் அல்லது ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்கள் கல்லூரி வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வது வரை கண்காணிப்பர். மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளில் ராகிங் குற்றம் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதலாம் ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியலில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வந்த கோரிக்கை. அதனை தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 4, 5 ஆண்டுகளில் தேர்வு எழுத முடியாமல் விடுப்பட்ட மாணவர்களும் தொடர்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழில்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்க கூடாது என்பதற்காகவும், இடைநிற்றல் இல்லாத தொழில்கல்வி இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் இடைநிற்றல் என்பது உயர்கல்வியிலும் இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.
    • தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!

    முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.

    இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வருகிறார்.
    • பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை -மகனுக்குமான மோதலால் நிர்வாகிகள் பெரும் கவலையில் உள்ளனர். மோதலை தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அந்த வகையில், பா.ம.க. சமூகநீதி பேரவை தலைவராக இருந்த பாலுவை நீக்கி கோபுவை ராமதாஸ் அண்மையில் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வழக்கறிஞராக இருக்க தகுதியே இல்லாதவர் பா.ம.க. சமூகநீதி பேரவை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ராமதாஸால் நியமிக்கப்பட்ட கோபுவுக்கு வழக்கறிஞருக்கான எந்த தகுதியையும் பார்த்தது இல்லை என்று பனையூரில் நிர்வாகிகளுடனான ஆலோசனையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • பா.ம.க. ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கமான கட்சி.
    • பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும்.

    தைலாபுரம்:

    வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி பணியாற்றி வருகின்றார். இதற்கிடையே அவர் யாருடன் கூட்டணி? என்பது பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜயின் த.வெ.க.வுடன் பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

    * பா.ம.க. ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கமான கட்சி.

    * பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும்.

    * தவெகவுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார். 

    • பா.ம.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது.
    • எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக்கொண்டால் தீர்வு எட்டப்படும்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.

    ராமதாஸ் கூறியதாவது:-

    * தன்னை லேசாக விமர்சித்தவர் மீதே பாய்ந்தவர் அன்புமணி.

    * தலைவராக இருந்த அன்புமணியை யாரும் பார்க்க முடியாது, யாரிடமும் பேசமாட்டார்.

    * அன்புமணியின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    * பா.ம.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது.

    * 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்.

    * எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக்கொண்டால் தீர்வு எட்டப்படும்.

    * பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான். வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    * அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாட்டேன் என்றார். 

    • பாட்டாளி மக்கள் கட்சி விவகாரம் அவர்களது உட்கட்சி விவகாரம்.
    • தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது.

    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    சமக்ர சிஷ்யா அபியான் திட்டத்தின்படி ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை.

    தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் நாங்கள் இந்த நிதி தர மாட்டோம் என நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

    இதனால் தமிழக கல்வித்துறைக்கு ஆயிரக்கணக்கான கோடி வந்து சேரவில்லை. அது தொடர்பாக எந்த நீதிபதியும் கருத்து சொல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

    கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். இந்த அடிப்படையில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற தி.மு.க. தலைவர் எங்களோடு உரையாடும்போது சூழலை கருத்தில் கொண்டு, கூட்டணியின் நலனையும் கருத்தில் கொண்டு தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம்.

    நாங்கள் இந்த கூட்டணியில் தான் இருப்போம். தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

    தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க. கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது.

    பாட்டாளிமக்கள் கட்சி விவகாரம் அவர்களது உட்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து செல்வதற்கு ஒன்றுமில்லை.

    தமிழ் இன உணர்வாளர்களை சனாதன சக்தியாக மாற்றுவதற்கு கவர்னர் முயற்சிக்கிறார். முருக பக்தர்களை பா.ஜ.க. ஆதரவாளராக மாற்றுவதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

    இவர்களுக்கான கோரிக்கை அரசியல் ஆதாயம் என்பது தான் மாநாட்டின் நோக்கம். அப்படித்தான் வள்ளுவரையும் சனாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    உங்கள் முயற்சி ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாடு ஏற்கனவே பண்படுத்தப்பட்ட, பக்குவப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாக தான் இருப்பார்கள்.

    ஐயப்ப பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாகதான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது. ஆதாயம் தேட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.
    • முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சௌமியா என்னை வந்து பார்த்து மாமா என்றார், நான் ஏம்மா என்றேன்.

    * ஒரு வாரத்தில் தலைவரை மாற்றிவிடலாமா என என்னிடம் சௌமியா கூறினார்.

    * பா.ஜ.க.வினர் கூட்டணி குறித்து பேச தைலாபுரம் வருவது எனக்கு தெரியாது.

    * என் பேச்சுக்கு மாறாக தருமபுரியில் வேட்பாளராக்கப்பட்டார் சௌமியா அன்புமணி.

    * 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.

    * பா.ம.க. என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவர் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

    * அன்புமணியுடனான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்று தான் எண்ணுகிறேன்.

    * முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.

    * 2026 தேர்தலுக்கு பின்னர் எல்லாவற்றையும் அன்புமணி தான் பார்த்துக்கொள்ள போகிறார்.

    * அன்புமணி கட்சியை சரியாக வழிநடத்தவில்லை என்று கூறினார். 

    • கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் கூடுதல் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து 60.04 அடியாக உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 662 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் மட்டும் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    மேலும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 3608 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.50 அடியாக உள்ளது. 736 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4374 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. 8 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    கூடலூர் 3.4, பெரியாறு அணை 3, தேக்கடி 2.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    ×