என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது.
- மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
வேலூர்:
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் பிரிந்து இருக்கக்கூடியவர்கள், ஒத்த கருத்துடையவர்கள், நம்மை விரும்பக் கூடியவர்கள் யார்? யார் என கண்டறிந்து தி.மு.கவின் கொள்கைகளை அவர்களுக்கு விளக்கி இந்த அணியில் சேர்க்க வேண்டும். இது முதல் பாகம். இதை ஒருநாள் செய்துவிட்டு போய்விடுவதில்லை. ஒரு மாத காலத்திற்கு மேலாக உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெறும். ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏன் பொதுச்செயலாளர் ஆகிய நானே தலைவரின் ஆணையை ஏற்று பணியை செய்வோம்.
தி.மு.க வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. சமுதாய போராளி கட்சி. இனம், மொழி, மானத்தை கட்டி காத்திடும் கட்சி. யாருக்கும் இரண்டாம் தர மாநிலமாக தமிழ்நாடு போகக்கூடாது என அக்கறை உள்ள கட்சி.
முன்பெல்லாம் பொதுக்கூட்டம் என்றால் ஆண், பெண் என திரண்டு வந்து மூன்று மணி நேரம் ரசித்து பார்ப்பார்கள். இப்போது அது போன்றைய நிலைமை கிடையாது. முன்பெல்லாம் மைக் வைத்து பேசுவார்கள். இப்போது மக்களை நேரடியாக சென்று சந்திக்க உள்ளோம். வருகின்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் வழிமுறைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.
இதன் மூலம் அவர்களுக்கு தி.மு.கவின் மேல் அதிக நாட்டம் ஏற்படும். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத்தினரையும் 'தமிழ்நாடு' என்ற ஒரு குடையின் கீழ் சங்கமிக்க உள்ளோம்.
மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது. உதாரணமாக கல்விக்கு நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. வெள்ள நிவாரண பணிக்கு ரூ.600 கோடியை கேட்டிருந்தோம். ஆனால் மத்திய அரசு இன்னும் ஒரு பைசா கூட வழங்கவில்லை.
கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது.மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
- ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம்.
- நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க. சார்பில் இன்றைக்கு நான் தொடங்கி வைத்தேன். இன்று தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
38 வருவாய் மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அவரவர்கள் அந்தந்த பகுதிகளில் ஊடகங்களை சந்தித்து பேசுவார்கள்.
நாளை தமிழ்நாட்டில் 78 மாவட்டங்கள் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
ஜூலை 7-ந்தேதி முதல் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என எல்லோரும் அவரவர்கள் சொந்த வாக்குச்சாவடிகளை சார்ந்த வீடுகளுக்கு நேரில் செல்வார்கள். இதற்காக தி.மு.க. ஐ.டி.விங் சார்பில் தொகுதிக்கு ஒருவர் வீதம் 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நன்கு பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மண், மானம் காக்க மக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் நோக்கமாகும்.
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசு இழைக்கும் அநீதிகளை, எதிர்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை எதிர்த்து போராட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாடும் தமிழகமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும் என்று சொல்லி விட்டு பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.
எனவே ஒன்றிய அரசை எதிர்க்க நெஞ்சுரம் உள்ள அரசியல் கட்சி தேவை. அதன் இயக்கமாகதான் ஓரணியில் தமிழ்நாடு என்று இயக்கமாக தொடங்கி உள்ளோம்.
கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு என்பது மூலம் என்ன விஷயங்களை மக்களிடம் சொல்ல போகிறீர்கள்?
பதில்:- ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம். அதே நேரத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்ல இருக்கிறோம்.
எங்கள் சாதனைகள் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதை நினைவுப்படுத்தி துண்டு பிரசுரங்களை கொடுக்க இருக்கிறோம். அதே நேரத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியும் இணைந்து நடத்தப்படும்.
கேள்வி:- சிவகங்கை விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்களே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?
பதில்:- தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பானவர்களை கைது செய்து இருக்கிறோம். இன்றைக்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- உறுப்பினர் சேர்க்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்த குடும்பங்களின் வீடுகளுக்கு செல்வார்களா?
பதில்:- நிச்சயமாக விருப்பம் உள்ளவர்களை சேர்ப்போம்.
கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் செல்வார்களா?
பதில்:- அது அங்குள்ள சூழ்நிலையை பொறுத்தது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு செல்வார்கள்?
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி முதல் மக்களை சந்திக்க செல்கிறாரே?
பதில்:- அவர் இப்போதுதான் மக்களை சந்திக்க போகிறார்.
கேள்வி:- ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தீங்கு இழைத்து வருகிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடுவது மக்களுக்கு தெரியுமா?
பதில்:- மக்களுக்கு நன்றாக தெரியும்.
கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கிறதே? இதை தி.மு.க. எப்படி சமாளிக்கும்?
பதில்:- அது தேர்தல் தேதி அறிவித்ததும் நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதை பேசி சமாளித்து விடுவோம்.
கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேருமா?
பதில்:- இப்போதுள்ள சூழ்நிலையை பொறுத்தவரை வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு வரக்கூடிய நேரத்தில் அது எப்படி சேர்ப்பது என்ற நிலையும் வரும். அதை அப்போது முடிவு செய்வோம்.
கேள்வி:- 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மிக 3 முக்கிய திட்டம் என்று எதை சொல்வீர்கள்?
பதில்:- காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என பல திட்டங்களை சொல்லலாம்.
கேள்வி:- உடன் பிறப்பே வா சந்திக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக உள்ளதா? தொடர்ந்து சந்திக்கிறீர்களா?
பதில்:- ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்தேன். ஒரு தொகுதிக்கு 1½ மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவிடுகிறேன். 234 தொகுதி நிர்வாகிகளிடம் அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பேன்.
கேள்வி:- 30 சதவீத வாக்காளர்கள் சேர்க்க இலக்கு வைத்து இருக்கிறீர்கள்? அப்படியானால் இளைஞர்கள், இளம்பெண்களை கவர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
பதில்:- நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம். 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வாக்காளர்கள் இலக்கு எவ்வளவு?
பதில்:- 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் எங்கள் நிர்வாகிகள் 40 சதவீதம் வரை சேர்ப்போம் என்று சொல்லி உள்ளனர்.
கேள்வி:- 2026 தேர்தலில் எவ்வளவு தொகுதிகளை வெல்ல இலக்கு வைத்து உள்ளீர்கள்?
பதில்:- ஏற்கனவே 200 தொகுதிகளை வெல்வோம் என்று சொல்லி உள்ளோம். ஆனால் அதையும் தாண்டி வரும்.
கேள்வி:- தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவேன் என்று அமித்ஷா கூறி இருக்கிறாரே?
பதில்:- அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். அவர்கள் பொய் பேசி விட்டு செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்கு தெரியும். அது தேர்தல் நேரத்தில் லாபமாக எங்களுக்கு அமையும். அதே போல் கவர்னரையும் மாற்ற வேண்டாம் என்று சொல் கிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.
- கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
- மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
- ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாதுரை கூறுகையில்,
வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கு காங்கிரஸ் தரப்பில் முயற்சி நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ராதேவியை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். கவின்குமாரின் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சி தலையிடுகின்றனர். காவல்துறையினரின் செயல்பாடு சரியில்லை. அலைக்கழிக்கிறார்கள். சிபிஐ விசாரணை வேண்டும். ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் நாளை வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.
- அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுப்பர் பாளையம்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, குப்பை கொட்டக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த 24-ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ஜி.என். கார்டன் பஸ் நிறுத்தம் அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜி.என். கார்டன் பகுதியில் கடையடைப்பு மற்றும் குப்பை லாரி சிறைபிடிப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொ.ம.தே.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க., சமூக நல அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது.
மேலும் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தை கைவிடாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் பூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
மதுரையை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர் திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல 3 பேருடன் சேர்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு பணியின் போது தண்ணீர் எடுக்கச் சென்ற நாகலிங்கம் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாய கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நாகலிங்கம் சாயக்கழிவுநீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவரை மீட்க முயன்ற போது முடியவில்லை. உடனே திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த நாகலிங்கத்தை மீட்டனர். இருப்பினும் சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மத்திய போலீசார் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
- வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமாரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை என்ற பெயரில் பத்திரகாளியம்மன் கோவில் கோ சாலைக்குள் வைத்து நகை கேட்டு பிரம்பால் தாக்குகின்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
இதனிடையே, வீடியோ காட்சிகளை வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- பா.ஜ.க.வின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை.
- ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு இன்று எதிர்கொள்வது அரசியல் பிரச்சனை அல்ல. உரிமைப் பிரச்சனை.
* பா.ஜ.க.வின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தமிழகத்திற்கு தேவை.
* ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரின் வீட்டுக்கும் நேரடியாக செல்ல இருக்கிறோம்.
* ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது.
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதில்லை.
* ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது.
* அரசியல், பண்பாடு, மொழி என அனைத்திலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
- யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம்:-
* அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை.
* `ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்?
* பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
* யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
* சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அஜித்குமாரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து விசாரிக்கும் வீடியோவை நீதிபதி முன்பு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடியோவை எடுத்த நபர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.
- இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு மக்களின் மொழி, உரிமை, மானம் காப்பதற்காகவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படுகிறது.
* இன்று முதல் அடுத்த 45 நாட்கள் மக்களை வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
* மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






