என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் சாயக்கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
- சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
மதுரையை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர் திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல 3 பேருடன் சேர்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு பணியின் போது தண்ணீர் எடுக்கச் சென்ற நாகலிங்கம் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாய கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நாகலிங்கம் சாயக்கழிவுநீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவரை மீட்க முயன்ற போது முடியவில்லை. உடனே திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த நாகலிங்கத்தை மீட்டனர். இருப்பினும் சாய கழிவில் மூழ்கியதால் நாகலிங்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மத்திய போலீசார் உடலை மீட்டு பிரேதபரி சோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






