என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
- போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30-ந்தேதி தொடங்கும் நிலையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட கூடுதலாக 29,680 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 4,062 மாணவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க போலி ஆவணம் மூலம் 25 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக 20 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி யாக தொடர்ந்து 3 தினங்களாக அதே அளவு நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்று சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.75 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்தது.
அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255-க்கும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040
23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-07-2025- ஒரு கிராம் ரூ.128
23-07-2025- ஒரு கிராம் ரூ.129
22-07-2025- ஒரு கிராம் ரூ.128
21-07-2025- ஒரு கிராம் ரூ.126
20-07-2025- ஒரு கிராம் ரூ.126
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்கம் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
சென்னை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கக் கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அளிக்கக் கூடிய பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
அந்த வகையில் இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.7 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.8 கோடியே 23 லட்சத்து 56 ஆயிரம் என மொத்தம் ரூ.15 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி விவரம், தற்காப்பு கலை பயிற்சிகள் விவரம், பயிற்சியாளர் விவரம் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
- பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என்று கூறியுள்ளார்.
- மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
- உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.
குளச்சல்:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது.
- தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம்.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுவேன்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும்.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 28ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தேதி அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
- கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
விழாவில் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதற்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பாதைகளில் சோதனை சாவடிகள் அமைத்து முழு பரிசோதனைக்கு பின்னரே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் நெல்லை சரக டி.ஜ.ஜி. சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் அடங்கிய சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
அதே போன்று கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனி விமானங்கள் சில தூத்துக்குடியில் இறக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் 100 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் இன்று விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
பிரதமர் வருகையையொட்டி நாளை காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை.
- இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர்," மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்" என்றார்.






