என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு.

    சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    3வது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    • பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம்

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மகர ஜோதியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி பதினெட்டாம் படி திறக்கப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

    வருகிற 15-ந்தேதி பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

    மகர ஜோதி காலத்தில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
    • 2023-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    • 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.
    • உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தேவையற்ற காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. குடும்ப அட்டை மிக மிக அவசியமானது என்பது மட்டுமின்றி, அது தான் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான அடிப்படை ஆவணம் ஆகும். அத்தகைய அத்தியாவசிய ஆவணத்தை பொது மக்களுக்கு வழங்குவதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தேவையற்ற காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது தான் உண்மை என்றால் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது. குடும்ப அட்டைகள் அனைவரின் உரிமை. அதை அரசு மறுக்கக் கூடாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
    • பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் உயர்த்தியது நியாயமில்லை. குறிப்பாக மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும் பொது மக்களின் சிரமத்தை அறிந்து, ஆலோசனையைக் கேட்டு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.

    ஆனால் அரசு, பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி நடைமுறைப்படுத்துவதால் சிறிய அளவிலான சொத்து (வீடு, மனை, நிலம்) வாங்க முன்வரும், போதுமான பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

    ஐகோர்ட்டு உத்தரவை அரசு கவனத்தில் கொள்ளாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். எனவே தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று பள்ளி‌ நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
    • கோரிக்கையை ஏற்று வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறையை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று வகுப்பறைகள் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பணிகள் நிறைவடைந்து மாணவர்களுக்காக அந்த கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
    • கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்களும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருநள்ளாறு, புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்கிற விவரங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.


    அதேபோல் திருச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கடலூர், செஞ்சி, வந்தவாசி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக் கழக (டி.என்.எஸ்.டி.சி) பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், முன்பதிவு செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று பஸ் ஏறலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் இன்று கடும் குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் எங்கு சென்று பஸ் ஏறுவது என்பது தெரியாமல் திணறுகிறார்கள்.

    முன்பதிவு செய்த பயணிகளில் சுமார் 30 சதவீதம் பேர் இன்று கிளாம்பாக்கத்துக்கு செல்லாமல் கோயம்பேட்டில் பஸ் ஏறுவதற்காக வந்தனர். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்த பஸ்கள் அங்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உதவி மையங்களில் ஊழியர்கள் இல்லாததால் பஸ் ஏற வந்த பயணிகள் யாரிடம் சென்று விசாரிப்பது என்பது தெரியாமல் திணறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்த மற்ற கோட்டங்களின் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர். மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பலருக்கு கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் செயல்படுவது பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்றடைய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


    இது ஒருபுறம் இருக்க அரசு விரைவு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த பயணிகளை போனில் தொடர்பு கொண்டு பஸ் புறப்படும் இடம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் வருவதற்கு சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருந்து அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

    அதன்படி முன்பதிவு செய்த பயணிகளிடம் பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கிளாம்பாக்கத்துக்கு வந்து பஸ் ஏறுமாறு தெரிவித்தனர். அப்போது பல பயணிகள் தாங்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருப்பதாக பதில் அளித்துள்ளனர். இதனால் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு வருமாறு கூறியுள்ளனர். அந்தவகையில் ஏராளமான பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தாமதமாக வந்தனர். அப்படி தாமதமாக வந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக அதிகபட்சமாக சுமார் அரை மணி நேரம் வரை பஸ்கள் காத்திருந்தன. அதற்கு மேல் வராத முன்பதிவு செய்த பயணிகளை விட்டுவிட்டு அரசு விரைவு பஸ்கள் புறப்பட்டு சென்றன. பஸ்களை தவறவிட்ட பயணிகளுக்கு முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப் பட்டது. ஆனால் அவர்கள் அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்ல பஸ் கிடைக்காமல் தவித்தனர்.

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
    • பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

    சென்னை:

    பொங்கல் திருநாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். தமிழக மகளிர் காங்கிரசார் சார்பில் பிரியங்கா காந்தியின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள். முதலில் கேக் வெட்டினார்கள்.

    அதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.

    பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். பொங்கல் விழாவையொட்டி பவன் வளாகத்தில் கரும்பு, வாழை, மஞ்சள் குலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து பிரியங்கா பிறந்தநாள் விழா அரங்கத்தில் நடந்தது. விழாவில் சுமார் 500 பெண்களுக்கு புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, சுமதி, அன்பரசு, எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

    வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை.
    • போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது.

    மதுரை:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கின் விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்றும் போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது என்றும் கூறினர்.

    ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    • வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.
    • 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. தமிழகத்தில் முதல் முறையாக இந்தப் போட்டி நடக்கிறது.

    வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

    36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டுகள் நடக்கிறது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தமிழக அணி தேர்வு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. குத்துச்சண்டை, பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், களரிபயட்டு, நீச்சல் ஆகிய 5 விளையாட்டுகளுக்கான தேர்வு சென்னையில் நேற்று நடந்தது.

    இறகுப்பந்து, மல்யுத்தம், களரிபயட்டு ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.

    இறகுப்பந்து நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிலும், மல்யுத்தம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும், களரி பயட்டு கோவை நேரு ஸ்டேடியத்திலும் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் வீரர்கள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழுடன் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×