என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது.
- காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதனை காணவும், பலூனில் ஏறி பயணிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை ராட்சத பலூன்களில் வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் சில கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றன. இதில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து வெப்ப பலூன்கள் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரையும், அருகே பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட பலூன்கள் உள்ளன. இந்த பலூன்களில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.

பலூன் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் ஏராளமானோர் இன்று காலை முதலே பொள்ளாச்சியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் வானில் பறக்கும் பலூன்களையும், ஒளி வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலூன்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பலூன் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடக்கிறது.
இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்போர் பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் பறந்தபடி பொள்ளாச்சி நகரை பொதுமக்கள் ரசிக்கலாம்.
- சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
- சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367 இன்று ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது.
ஆலந்தூர்:
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை, வரும் திங்கள்கிழமை 15ஆம் தேதியில் இருந்து, 17ஆம் தேதி புதன்கிழமை வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதோடு சனி, ஞாயிறு சேர்ந்து வருவதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை உள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல, விமான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த ஓரிரு நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதை அடுத்து சென்னையில் இருந்து, இந்த நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு, உயர்ந்து உள்ளன. ஆனாலும் கட்டண உயர்வை குறித்து கவலைப்படாமல், பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு, கூடுதல் கட்டணங்கள் செலுத்தி, விமான பயணம் செய்கின்றனர்.
சென்னை, தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624. இன்று கட்டணம் ரூ.13,639. சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367. இன்று ரூ.17,262. சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264. இன்று கட்டணம் ரூ.11,369.
சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315. இன்று ரூ.14,689. சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290. இன்று ரூ.11,329.
இதேபோல் பல மடங்கு கட்டண உயர்வு இருந்தாலும், பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல், தவிக்கின்றனர்.
எனவே இதைப்போன்ற விழாக்காலங்களில், சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுவது போல், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள், இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.
- டீ தூளில் கலப்படத்தை எளிதாக கண்டறிவது எப்படி என்று அதிகாரிகள் விளக்கி காண்பித்தனர்.
- சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசின் 34 அரங்குகள், பொதுத்துறை நிறுவனங்களின் 15 அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள் என 51 அரங்குகள் உள்ளன.
சென்னை:
சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முழு உடல் பரிசோதனை குறித்து கேட்டறிந்துவிட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஸ்டாலுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை அருந்தினார். அதைத்தொடர்ந்து பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முறை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட ஸ்டால்களை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை ஸ்டாலிற்கு வந்தபோது, உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் எடுத்து உரைத்தனர். அப்போது, டீ தூளில் கலப்படத்தை எளிதாக கண்டறிவது எப்படி என்று அதிகாரிகள் விளக்கி காண்பித்தனர்.
பின்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாதிரி கூடைப்பந்து அரங்கில் பந்தை எடுத்து போட்டார். அதைத்தொடர்ந்து பாக்ஸிங் மாதிரி அரங்கில் விளையாட்டு வீரர்கள் விளையாடியதை பார்வையிட்டார். இறுதியாக இ-ஸ்போர்ட்ஸ் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பொது மேலாளர் ஐ.கமலா மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசின் 34 அரங்குகள், பொதுத்துறை நிறுவனங்களின் 15 அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள் என 51 அரங்குகள் உள்ளன. இவை தவிர, 110 சிறிய கடைகள் மற்றும் 30 தனியார் அரங்குகளும் உள்ளன. மேலும் பல்வேறு வகையான ராட்டினங்கள் உள்ளிட்ட சுமார் 30 வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் லண்டன் மற்றும் துபாய் நாட்டை சேர்ந்த வல்லுனர்களின் உதவியுடன் சொகுசு கப்பல் மற்றும் வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சியானது 70 நாட்களுக்கு நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறந்து இருக்கும். பெரியவர்களுக்கு ரூ.40, 6 முதல் 12 வயது வரை ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவ-மாணவிகளுக்கு சலுகை கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது. 6 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த ஆண்டு கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
- கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.
சென்னை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களையும் உயர்த்தி வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, நகைக்கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளையில் ஓராண்டுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பில் மாற்றம் இல்லை. சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இந்த கடனை பொறுத்தமட்டில் 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பு 120 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சிறு வணிக கடனாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த கடன் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.
ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் கடனுக்கு ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதமும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்றும், ஜாமீன் உத்தரவாதம் வழங்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராகவும், பான் கார்டு உள்ளிட்ட இதர ஆவணங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
- சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னை- நாகர்கோவில் இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்றும் நாளையும் (13 மற்றும் 14-ந்தேதி) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 11.35 மணிக்கு சென்னை வந்தடையும்.
- நேற்று நள்ளிரவு வரை 3,946 பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம்.
- இதுவரை சொந்த ஊர் பயணம் செய்ய 1,96,310 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. பெங்கலுக்கு முந்தைய இரண்டு தினங்களான இன்றும் நாளையும் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நேற்றே (வெள்ளிகிழமை) பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர் புறப்பட்டனர்.
முன்னதாகவே முன்பதிவு செய்த பயணிகள் சிரமமின்றி அவர்களுடைய ஊருக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும் இடத்திற்கு சென்று புறப்பட்டனர். சிறப்பு பேருந்துகளில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்து புறப்பட்டனர்.
முன்பதிவு செய்த மக்களுடன், முன்பதிவு செய்யாத மக்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் கூடினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன.

சென்னையில் இருந்து அதிக அளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றதால் சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் ஊர்ந்த வண்ணம் சென்றன.
நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெிவித்துள்ளது.
இன்றும் அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
- மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பயணிகள் தங்களின் போக்குவரத்துக்காக பேருந்துகளும், ரெயில்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
- பத்தமடை பரமசிவத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது.
சென்னை:
2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.
விருது பெறுவோர்:
திருவள்ளுவர் விருது: தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி
பேரறிஞர் அண்ணா விருது: பத்தமடை பரமசிவம்
பெருந்தலைவர் காமராசர் விருது: உ.பலராமன்
மகாகவி பாரதியார் விருது: கவிஞர் பழநிபாரதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது: எழுச்சிக் கவிஞர் முத்தரசு
திரு.வி.க. விருது: ஜெயசீல ஸ்டீபன்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் இரா.கருணாநிதி
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில் விமான பாகங்கள் உறுதி செய்யப்பட்டன.
சென்னை:
சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது. இதில் விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர், கடற்படை ஆயுதக் கிடங்கு ஊழியர்கள் 8 பேர் என 29 பேர் பயணம் செய்தனர்.
தொடர்பு துண்டிக்கப்பட்டதும் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ராடாருடன் கூடிய செயற்கைக்கோள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் செப்டம்பர் 15-ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டு, அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 3.4 கி.மீ. ஆழத்தில் கிடக்கும் பாகங்கள் காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு.
- ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங்.
சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின்போது, "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்" என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
மேலும், "90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்றது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது.
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு.
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
3வது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.






