என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும்.
- வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும்.
நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. 16-ம் தேதி இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதியம் முதல் ஆட்டுச்சந்தை களை கட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிலர் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களில் விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.
தொடர் மழையினால் கடந்த 2 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது.
கறிக்காக வாங்கும் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ரூ. 7 கோடி வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கேரளா மாநிலத்தில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடை வளர்ப்பவர்கள் கூறும்போது, எட்டயபுரம் சந்தையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
இன்று முதன்முறையாக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு கூட்டமும் அதிகமாக உள்ளது. விற்பனையும் நன்றாக உள்ளது என்றனர்.
- சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் பொதுமக்கள் செல்கின்றனர்.
- இன்று காலை முதல் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் கூடுதலாக இரண்டு வசூல் செய்யும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம்:
பண்டிகையை கொண்டாட பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் பொதுமக்கள் செல்கின்றனர்.
சென்னையில் இருந்து சென்னை- திருச்சியின் தேசிய நெடுஞ்சாலையில் வழியாக செல்லும்பொழுது அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திய பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. வாகனங்கள் அதிகமாக செல்லும்போது சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது போலீசார் உடனடியாக கட்டணம் இல்லாமல் அனுப்பி வருகின்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் கூடுதலாக இரண்டு வசூல் செய்யும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இன்று முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
- விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக ராமேசுவரத்தில் உள்ள 2 சுற்றுலா வேன்களில் அவர்கள் இன்று காலை புறப்பட்டு சென்றனர். தனுஷ்கோடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஒரு வேன் ரோட்டில் கவிழ்ந்தது. மற்றொரு வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த 2 வடமாநில பயணிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். அவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக ராமேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
- ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.
நாமக்கல்:
நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று ஆட்டு சந்தைக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டுக்குட்டியானது 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. இன்று ஆட்டு சந்தையில் 1½ கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறின.
- பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்ததால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த பெருமழை வெள்ளத்தில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. டவுன் கருப்பந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆற்றுப்பாலம் உடைந்து விழுந்தது. மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இந்த பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி மத்திய குழுவினர் முதல்கட்டமாக நெல்லை வந்து ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து 2-வது முறையாக இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தை சார்ந்த ரங்கநாதன் ஆதம், மின்சக்தி துறையை சேர்ந்த ராஜேஷ் திவாரி, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தை சேர்ந்த தங்கமணி, புதுடெல்லியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் கே.எம். பாலாஜி, மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 குழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
இவர்களோடு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு முன்னும், மழை உள்ள பாதிப்பு அடைந்த போதும், மழை வெள்ள பாதிப்புக்கு பின் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பு செய்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.
பின்னர் மழை வெள்ளம் பாதிப்படைந்த பகுதிகளை 2 குழுக்களாக சென்று பார்வையிட்ட மத்திய குழு அதிகாரிகள் நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி தரைமட்ட பாலத்தை ஆய்வு செய்தனர்.
மழை வெள்ள பாதிப்பால் சிதலமடைந்து 3 நாட்களில் சரி செய்யப்பட்ட பாலத்தின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதிகாரிகள் மத்திய குழு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய குழு அதிகாரிகளை பேட்டி எடுக்க முயன்றபோது, தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளது என என ஒரு வரியில் சொல்லி சென்றனர்.
தொடர்ந்து நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு மற்றும் அதனை சரி செய்யப்பட்ட பணிகளையும், அம்பாசமுத்திரம், நெல்லை வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் செய்த பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர்.
- சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம்:
பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப் படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.
- உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
- எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கம்பம்:
தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த ஆப்ரகாம் (வயது 55) என தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 4 நாட்களாக அவர் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். தேவாலயத்துக்கும் அவர் வராமல் இருந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மந்திப்பாறை பகுதியில் எரிந்து கிடந்தது மாயமான பாதிரியார் என உறுதியானது.
அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்துகிடந்த பாதிரியாருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.
சென்னை:
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை கிடைத்துள்ளது.
இதையொட்டி, வங்கிகளுக்கும் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
இன்று மாதத்தின் 2- ம் சனிக்கிழமை, ஜனவரி 14 பொதுவிடுமுறை, ஜனவரி 15 திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மக்கள் இதற்கேற்றவாறு தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
- நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி:
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் மீன்படிக்க செல்லவில்லை.
இந்நிலையில் இன்று முதல் கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அந்த வகையில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மாவட்டத்தில் உள்ள 200 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.
- இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களில் இயங்கி வரும் கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இந்த மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் மூடப்படும் என ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினம் என்பதும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் ஜனவரி 16, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களில் இயங்கி வரும் கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
- நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகைப் பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய், சம்மங்கி, செவ்வந்தி ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.300-க்கும் விற்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
- பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும்.
- இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது.
எட்டயபுரம்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள்.
பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்படுகிறது.
இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காம நாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை கோவில்பட்டி, சாத்தூர், ராஜ பாளையம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறும்போது, "பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு ரூ. 4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்" என்றார்.






