search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகைக்காக எட்டயபுரம் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை தீவிரம்
    X

    எட்டயபுரம் பகுதியில் பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் தொழிலாளி.

    பொங்கல் பண்டிகைக்காக எட்டயபுரம் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை தீவிரம்

    • பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும்.
    • இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள்.

    பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.

    தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்படுகிறது.

    இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காம நாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை கோவில்பட்டி, சாத்தூர், ராஜ பாளையம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறும்போது, "பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு ரூ. 4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்" என்றார்.

    Next Story
    ×