search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி: அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி: அமைச்சர் திறந்து வைத்தார்

    • டீ தூளில் கலப்படத்தை எளிதாக கண்டறிவது எப்படி என்று அதிகாரிகள் விளக்கி காண்பித்தனர்.
    • சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசின் 34 அரங்குகள், பொதுத்துறை நிறுவனங்களின் 15 அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள் என 51 அரங்குகள் உள்ளன.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முழு உடல் பரிசோதனை குறித்து கேட்டறிந்துவிட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஸ்டாலுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை அருந்தினார். அதைத்தொடர்ந்து பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முறை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட ஸ்டால்களை பார்வையிட்டார்.

    அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை ஸ்டாலிற்கு வந்தபோது, உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் எடுத்து உரைத்தனர். அப்போது, டீ தூளில் கலப்படத்தை எளிதாக கண்டறிவது எப்படி என்று அதிகாரிகள் விளக்கி காண்பித்தனர்.

    பின்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாதிரி கூடைப்பந்து அரங்கில் பந்தை எடுத்து போட்டார். அதைத்தொடர்ந்து பாக்ஸிங் மாதிரி அரங்கில் விளையாட்டு வீரர்கள் விளையாடியதை பார்வையிட்டார். இறுதியாக இ-ஸ்போர்ட்ஸ் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பொது மேலாளர் ஐ.கமலா மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசின் 34 அரங்குகள், பொதுத்துறை நிறுவனங்களின் 15 அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள் என 51 அரங்குகள் உள்ளன. இவை தவிர, 110 சிறிய கடைகள் மற்றும் 30 தனியார் அரங்குகளும் உள்ளன. மேலும் பல்வேறு வகையான ராட்டினங்கள் உள்ளிட்ட சுமார் 30 வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் லண்டன் மற்றும் துபாய் நாட்டை சேர்ந்த வல்லுனர்களின் உதவியுடன் சொகுசு கப்பல் மற்றும் வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பொருட்காட்சியானது 70 நாட்களுக்கு நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறந்து இருக்கும். பெரியவர்களுக்கு ரூ.40, 6 முதல் 12 வயது வரை ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவ-மாணவிகளுக்கு சலுகை கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது. 6 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த ஆண்டு கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×