என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன.
- அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை மந்திரி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் விஜய்வசந்த் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படுகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அவர் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். இது பாரதிய ஜனதாவினருக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் பிரிவு உட்பட அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன.
நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.
- ஓபிஎஸ் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.
சென்னை:
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.
எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்
இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பில், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நிரந்தரம் செய்தும் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சமத்துவபுரம் அருகே சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது உடனே அவற்றை மடக்கி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தினுள் இருந்த பெட்டி பெட்டியான புது துணிகளால் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காரை முழுவதுமாக சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 20,000 ஆயிரம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை பறிமுதல் செய்தனர்.
உடனடியாக காரில் பயணித்த வாலிபர்கள் நாங்கள் புதுத் துணியை துணிக்கடைகளுக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம் என தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவித்தார் இருந்தபோதிலும் சோதனைக்கு பின் குஜராத் வாலிபர்கள் புது துணிகளை கொண்டு செல்லும் ஆவணங்களை குஜராத்தில் இருந்து வாட்ஸ் அப் மூலம் பில்களை காண்பித்த பிறகு அவற்றை சோதனை செய்த அதிகாரிகள் காரில் இருந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பள்ளித் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதிக்குள் முடிகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி விட்டது. அரசு பள்ளிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் மற்றும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை விட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஏப்ரல் 13-ந் தேதியுடன் முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் விரைவாக தேர்வை நடத்தி கோடை விடுமுறை அளிக்க கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு வெயில் தாக்கம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்பதால் பள்ளி திறப்பதை தள்ளி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. ஜூன் 2-வது வாரத்தில் அதாவது 10-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 4-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும். அரசின் உத்தரவையொட்டி இந்த முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
- கூட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கி கூறினார்.
சென்னை:
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் பணிகள் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பறக்கும் படை சோதனை தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் சட்டத்துறை துணை செயலாளர் கே.சந்துரு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா. வெங்கடேஷ் பாபு, பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த வரதன், ஆம்ஆத்மி மாவட்ட தலைவர் பாரூக், சோபனா, வாசு உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கி கூறினார். தேர்தல் பிரசாரத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பு மனு தாக்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பறக்கும் படை சோதனை, கண்காணிப்பு படை சோதனை பற்றி விளக்கங் கள் குறித்து விளக்கி கூறினார்.
கூட்டம் முடிந்ததும் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினோம். 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களது செல்போன் எண்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றம், தேர்தல் கூட்டம் அனுமதி பெறுதல், செய்யக் கூடியது, செய்யக் கூடாதது குறித்து விளக்க படம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
579 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.
974 இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது நல்லது. வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் சென்றால் பறக்கும்படை விசாரணையில் இருந்து உடனே வெளியே வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
- விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப்படிவத்தை இன்று முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை 20.03.2024 புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் பாராளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.30,000, பாராளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ.15,000, அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10,000, மகளிருக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைத்த அத்திப்பட்டு துரைக்கண்ணு கண்டன உரையாற்றினார்.
பா.ஜ.க.வின் சாதனைகள் பற்றி பேசிய அத்திப்பட்டு துரைக்கண்ணு இதுபோன்ற திட்டங்களை செய்திருக்கின்ற பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் "கை" சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்.

பா.ஜ.க. ஆர்ப்பாட்ட மேடையில் நின்றபடி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பும், சிரிப்பலையும் எழுந்தது. உடனே சுதாரித்த அத்திப்பட்டு துரைக்கண்ணு நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பழக்க தோஷத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டு கொண்டார்.
பா.ஜ.க. மேடையில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு அதனை தொடர்ந்து பேசும் போது அருகில் நின்றிருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் தாமரை சின்னம் என பேசுமாறு எடுத்து கொடுத்தனர். பா.ஜ.க. மேடையில் மோடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
- தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக என். புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கையின் தெருமுனை பிரசாரக் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இதை அறிந்த நிலக்கோட்டை தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரவீன் தலைமையில் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பதாக கூறி அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆனால் தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் கூட்டம் நடத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.
- கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை.
- மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை.
மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் திமுகவும், திருச்சியில் மதிமுகவும் போட்டியிடுகிறது.
- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது.
- ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கோவையில் நடக்கும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.
பிரதமரின் தமிழக வருகையானது, பா.ஜ.கவினருக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க.வினர் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் பிரதமரின் வருகை நம்பிக்கையை கொடுத்துள்ளது,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டோம்.
பிரதமருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்றைய தினம் கோவை மக்கள் பிரதமரை வரவேற்க பேரன்போடு காத்திருக்கின்றனர்.
தேசத்திற்கு எதிரானவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜ.க தேசத்தின் வளர்ச்சியை நோக்கி பணிகளை செய்து வருகிறது. தேசத்தை கொள்ளை அடிப்பதும், ஊழல் செய்வதும் இந்தியா கூட்டணி தான்.
தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா தொடர்புடைய 2ஜி ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்.

ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு மத்திய மந்திரி மீதோ, எம்.பிக்கள் மீதோ சிறிய குற்றச்சாட்டு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை பா.ஜ.க. நடத்தி வருகிறது.
ஊழலின் மறுபக்கமாக தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் உள்ளது. பொன்முடி விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கோர்ட்டு சொல்லவில்லை என்பதே கவர்னரின் விளக்கமாக உள்ளது.
நீலகிரியில் 2 முதல் 3 ஆண்டுகள் மக்களுக்காக பா.ஜ.க பணியாற்றி வருகிறது. கட்சி சொன்னால் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன். கட்சியின் கட்டளையை நிறைவேற்றுவது எனது பணி. கட்சி என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.
பா.ஜ.க 3-வது முறையாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கோவை பா.ஜ.க.வின் கோட்டையாக உள்ளது. ஏற்கனவே இங்கு 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். கோவையில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அதிமுக தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.
- அ.தி.மு.க. நடத்திவரும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைத்த தோடு, காவல்துறை மானியக் கோரிக்கையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு எனது ஆச்சரியத்தையும், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சுமார் 2000 பேர் கைதாகாமல் தப்பியது எப்படி என்று சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, இதுவரை மவுன சாமியார் வேடமிடும் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய இந்த தி.மு.க. அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள், அறிக்கைகள் என்று அ.தி.மு.க. தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, நூற்றுக்கணக்கான கிலோ கணக்கில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தபின் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தானும் நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு பாவலாவை இந்த ஆட்சியாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.
போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த தி.மு.க. அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. நடத்திவரும் 'போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத தி.மு.க.-விற்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.






