search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு
    X

    தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

    • பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பள்ளித் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதிக்குள் முடிகிறது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி விட்டது. அரசு பள்ளிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் மற்றும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை விட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஏப்ரல் 13-ந் தேதியுடன் முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படுகிறது.


    மேலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் விரைவாக தேர்வை நடத்தி கோடை விடுமுறை அளிக்க கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு வெயில் தாக்கம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்பதால் பள்ளி திறப்பதை தள்ளி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. ஜூன் 2-வது வாரத்தில் அதாவது 10-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 4-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும். அரசின் உத்தரவையொட்டி இந்த முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×