என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்: எல்.முருகன்
- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது.
- ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கோவையில் நடக்கும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.
பிரதமரின் தமிழக வருகையானது, பா.ஜ.கவினருக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க.வினர் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் பிரதமரின் வருகை நம்பிக்கையை கொடுத்துள்ளது,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டோம்.
பிரதமருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்றைய தினம் கோவை மக்கள் பிரதமரை வரவேற்க பேரன்போடு காத்திருக்கின்றனர்.
தேசத்திற்கு எதிரானவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜ.க தேசத்தின் வளர்ச்சியை நோக்கி பணிகளை செய்து வருகிறது. தேசத்தை கொள்ளை அடிப்பதும், ஊழல் செய்வதும் இந்தியா கூட்டணி தான்.
தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா தொடர்புடைய 2ஜி ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்.
ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு மத்திய மந்திரி மீதோ, எம்.பிக்கள் மீதோ சிறிய குற்றச்சாட்டு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை பா.ஜ.க. நடத்தி வருகிறது.
ஊழலின் மறுபக்கமாக தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் உள்ளது. பொன்முடி விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கோர்ட்டு சொல்லவில்லை என்பதே கவர்னரின் விளக்கமாக உள்ளது.
நீலகிரியில் 2 முதல் 3 ஆண்டுகள் மக்களுக்காக பா.ஜ.க பணியாற்றி வருகிறது. கட்சி சொன்னால் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன். கட்சியின் கட்டளையை நிறைவேற்றுவது எனது பணி. கட்சி என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.
பா.ஜ.க 3-வது முறையாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கோவை பா.ஜ.க.வின் கோட்டையாக உள்ளது. ஏற்கனவே இங்கு 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். கோவையில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






