என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார்.
- அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.
கே.கே. நகர்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை சந்திப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விஜய் வருகையையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார். அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.
அப்போது அவர் கழுத்தில் இருந்து அடையாள அட்டை இல்லாமல் வெறும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து விஜயை அருகில் சந்திப்பதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அந்த பட்டையை பறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.
- போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியா ஒருபோதும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை மறக்க முடியாது.
* வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.
* வேளாண் துறையில் நவீன கண்டுபிடிப்புகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் நிதி அறிவித்து ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளேன்.
* மண்ணுயிர் காத்து பல்லுயிர் காக்கும் எங்களின் முயற்சிக்கு நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன்.
* மத்திய அரசு 2070-க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் 2050-க்குள் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* வேளாண் பல்கலை. மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளோம்.
* போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.
* வேளாண்மையையும் உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
- 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர், எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர்.
* மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
* பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
* நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர்.
* தான் பெற்ற அறிவை மக்களின் பசி போக்க பயன்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
- சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திருச்சியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் விஜய் பிரசாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த அவர் மற்றொரு நாள் வருவதாக தெரிவித்தார்.
அதன்படி பெரம்பலூரில் நவம்பர் 1-ந்தேதி விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் 3-வது கட்டமாக விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலையில் அவர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காலை 9.30 மணியளவில் அவர் திருச்சியை அடைந்தார்.
இதனை தொடர்ந்து விஜய், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்கின்றனர். அவர்களை பார்த்தப்படி விஜய் கையசைத்தப்படியும், வணக்கம் தெரிவித்தப்படியும் வந்தார்.
- ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும். எனவே தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. வழக்கமாக வார இறுதி நாட்களில் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரத்தில் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் நேற்று முதல் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. பனைமர உயரத்திற்கு அலைகள் எழுப்புகின்றன. இந்த பகுதியில் வீசும் சூறாவளி காற்று காரணமாக கடற்கரை மணல்கள் சாலைகளை மூடியுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
- நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வருகை புரிந்தனர்.
மேலும் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து லேசான வெயில் அடித்து வருகிறது.
தொடர்ந்து பெய்த மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
- நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6,500 கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
- அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
அவர்களுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், காங்கிரஸ் எம்.பி.க்கள், விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், அசன் மவுலானா எம்.எல்.ஏ., நடிகர் எஸ்.வி.சேகர், சினிமா தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.
தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெசவாளர் அணி செய லாளர் சிந்து ரவிச்சந்திரன், தளபதி பேரவை மாநில தலைவர் அருள்காந்த், நா.தமிழ்மணி, சேப்பாக்கம் வி.பி.மணி, தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன்,
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜா ராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர் மன்னன் மற்றும் முகமது இம்தியாஸ், உதயவெற்றி, நவனைய்யா, முன்னாள் கவுன்சிலர் டில்லி, ஆர்.கே.நகர் முரளிமுருகன், ஜி.பி.ராஜேந்திரன், முகப்பேர் இளஞ்செழியன்,
காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில செயலாளர் தளபதி பாஸ்கர், அருள் பெத்தையா, நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சிவநேஸ் ராஜேஷ், மாநில மீனவர் அணி தலைவர் ஜோர்தான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகர், ஜெ.டில்லி பாபு, முத்தழகன், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், எஸ்.எச்.அலி, கராத்தே ரவி, தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் பாண்டியன், சீரணிதாஸ், சக்தி சிவகுமார், சூளை ராமலிங்கம், ஜெய்னுல் ஆப்தீன், ராதாகிருஷ்ணன், டி.எம்.தணிகாசலம், சர்க்கிள் தலைவர் ரஜினி செல்வம், அம்பத்தூர் பீர்முகமது, பெருங்குடி செந்தில்குரு, ஆர்.கே.நகர் பாஸ்கர், சூளை ஹேம்நாத்,
தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, மயிலை பாலாஜி, மாவட்ட தலைவர் லதா சண்முகம், புயல் ராஜா மணி, கோபி, மாரியம்மன், முரளிகிருஷ்ணன், சுந்தர மூர்த்தி, நாச்சிக்குளம் சரவணன், நந்தகுமார், பாண்டியன், ரமேஷ்,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம்.குமார், எழும்பூர் மேற்கு பகுதி நிர்வாகி சி.நந்தா, எழும்பூர் கிழக்கு பகுதி நிர்வாகி டி.ராஜேஷ், வில்லிவாக்கம் மேற்கு பகுதி நிர்வாகி வி.எஸ்.டி.விசு, கிழக்கு பகுதி வட்ட செயலாளர்கள் சிவா, அஜித்குமார்.
ம.தி.மு.க. நிர்வாகிகள் சு.ஜீவன், சுப்பிரமணியன், திருப்பூர் லோகு, மகேந்திரன், மல்லை சத்யா ஆதரவாளர்கள் செல்வபாண்டியன், ஊனை பார்த்திபன், இளவழகன், ஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., இரா.செல்வம், செல்லத்துரை, ரஜினிகாந்த்,
பா.ம.க. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஈகை தயாளன், குமார், சீனிவாசன், வண்ணை சத்யா, ஜி.வி.சுப்பிரமணியம், சிவகுமார், தாயுமானவன், சீனிவாசன், சரவணன், துரைராஜ், சுந்தரம், முனு சாமி, செல்வம், பூங்காநகர் ஆறுமுகம், வெங்கடேசன்,
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, ரெட்சன் அம்பிகா பதி, ராமமூர்த்தி, தனபால், ரமேஷ், அரிபாபு, ஆனந்தன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கரிகாலன், சுகுமார் பாபு, மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன்
த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்க டேஷ், சக்தி வடிவேல், கோவிந்தசாமி, பத்மநாபன், ராஜம் எம்.பி.நாதன், சிவ பால், ஆர்.எஸ்.முத்து, நரேஷ், மோகன், மகேஷ் குமார், சத்யா, லோகநாதன், சஞ்சய், காந்தியம் வெங்கடேசன்,
தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, நிர்வாகிகள் மாறன், பூங்கா ரமேஷ், ஸ்ரீநாத், பிரபு, பாலாஜி, சசிகுமார், ஜோதி லட்சுமி, அன்பு, கோவேந்தன், முருகேசன்,
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யனார், மாவட்ட தலைவர் வாசன், செயலாளர்கள் தீபக், விக்னேஷ் மற்றும் மணி, நாகேந்திரன், சசி குமார், தஸ்தகீர், லோகேஷ்,
சமத்துவ மக்கள் கழக தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், காரைக்கால் மாவட்ட செயலாளர் விஜய், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க செயலாளர் ராஜேஷ், கடையல் நாடார் சங்கத் தலைவர் தாஸ், திசையன்விளை நாடார் உறவின் சங்க பொருளாளர் சதீஷ், சமத்துவ மக்கள் கழக செயற்குழு உறுப்பினர் சாபுதீன், வேல்முருகன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, வர்த்தக அணி பொருளாளர் ஆடிட்டர் சுந்தரபாண்டியன், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், தென்சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல்ரவி, செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கோட்டீஸ்வரராஜா, செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் டி.மாரிமுத்து, தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலமுருகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நிர்வாகிகள் சுதர்சன், லோகநாதன், சந்தோஷ், முருகபெருமாள்,
மக்கள் தேசிய கட்சி மாநில தலைவர் சேம.நாராயணன், நிர்வாகிகள் ஆனந்த், பழனி,
அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்க பெருமாள், நிர்வாகிகள் பார்த்திபன், சாந்தி முத்துராமன்,
காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் மணிஅரசன், வசீகரன், ஜேம்ஸ், கதிரேசன், காந்தி மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆவடி ரங்கநாதன், நிர்வாகிகள் கிருபாகரன், பிரதீப், காண்டீபன்,
தமிழர் தந்தை பார்அட்லா சி.பா.ஆதித்தனார் வக்கீல் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் எமிலிசன், கிதியோன்கிங், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை தலைவர் இளங்கோ, தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவர் லிங்கபெருமாள்.
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் போரூர் ஆனந்தராஜ், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் தங்கமுத்து, பொதுச்செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்லதுரை, நிர்வாகிகள் ரவீந்திரநாதன், செந்தில், மாணிக்கம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நிர்வாகிகள் ரவி, பாஸ்கர், ராஜ்குமார், நாகராஜ், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார்,
மாடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் பொன்னம் பலம், திருச்சி அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் சுரேஷ், நெல்லை-தூத்துக் குடி நாடார் மகமை பரிபா லன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் ராம்ராஜ் நாடார், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜிராஜன், செயலாளர் படப்பை சேவியர், காஞ்சி மாவட்ட தலைவர் ரமேஷ்,
எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், நிர்வாகிகள் சுதந்திரதாஸ், வெள்ளைச்சாமி, ராபின்,
பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், நிர்வாகிகள் ரெங்கசாமி, பேரின்பராஜ், சோலையப்பன், கிருஷ்ணசாமி, செல்வகுமார், லிங்கராஜா, மாரியப்பன், பொன்குமார்,
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், துணைத் தலைவர் காமராஜ், சத்திரிய பாசறை நிறுவன மாநில தலைவர் ஆர்.ஜி.சம்பத்குமார்,
நாடார் மகாஜன சங்க சென்னை மண்டல தலைவர் மணலி தங்கம், நாடார் மகாஜன இளைஞரணி தலைவர் தமிழ்செல்வன், கனகராஜ், ஆறுமுகசாமி, செந்தில்குமார், கடற்கரை தங்கம், பெருமாள்,
இந்திய நாடார்கள் பேர மைப்பு மாநில செயலாளர் மலர்மன்னன், எஸ்.டி.பன்னீர்செல்வம், வெங்க டேசன், சேரன், விஜயன், திரவியம், எட்வர்ட் ராஜா, ரவிராஜா.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலை வர் சுந்தர், பொதுச்செய லாளர் திருபுகழ், பொருளா ளர் சின்னதுரை, நிர்வாகி கள் மாணிக்கவேல், ஹரி தாஸ், ராமசாமி, சிவகுமார், தாமஸ், மாசானமுத்து, தாமஸ் சவரிமுத்து, சுரேஷ் பொன்ராஜ், ராஜதுரை, புஷ்பராஜ், முருகேசன், செந்தில்குமார்,
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க தலைவர் செந்தில்முருகன், செயலாளர் முத்துராம், பொருளாளர் கனிராஜ்.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க சென்னை மண்டல தலைவர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் எட்வர்ட்,
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் கொளத் தூர் ரவி, நிர்வாகிகள் அருணாசலமூர்த்தி, குழந்தை வேல், ரமேஷ், வைரவேல்.
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர் ஆ.ஆறுமுக நயினார், மத்திய சென்னை நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், ஆர்.கே.நகர் கிளை நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி, திருச்சி அனியாப்பூர் கிளை மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் ராஜா, செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன்,
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அயன்புரம் கிளை செயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் பார்வதி செல்வன், ஜஸ்டிஸ், சிவப் பிரகாசம், முத்துதுரை, நந்தகுமார், அருண் பாண்டி யன், பாலமுருகன், ஜெய் பாலாஜி, பூபேஷ், செபாஸ்டியன், சதீஷ்குமார்,
திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ், உறுப்பினர்கள் சீனிவாசன், துரைக்கண்ணு சிவசக்தி, திருச்சி அனியாப்பூர் மன்ற அமைப்பாளர் மணலி ராஜ கோபால் மற்றும் நற்பணி மன்ற அம்பலவாணன்,
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வேத வள்ளி, சீனிவாசன், காஞ்சா, சாந்தி, ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ், வ.உ.சி. தமிழ்ச்சங்க தலைவர் லட்சுமி.
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங் காவலர் செண்பகராமன், முத்தாலம்குறிஞ்சி எழுத்தாளர் காமராசு, திரைப்பட இயக்குனர்கள் ஜெய் சாய் குமார், ராஜேஷ்குமார்,
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே அவரது சொந்த ஊரான காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், டாக்டர். பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், குமார்ராமசாமி ஆதித்தன, முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், அச்சுத ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், குமரேச ஆதித்தன், தனிகேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும்.
- பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டி சாலக்கரை இலுப்பை தோப்பில் மொட்டை அடிக்கும் கூடாரத்தில் திரண்டு மொட்டை அடித்து சென்றனர். சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மட்டுமின்றி, முக அடையாளங்களை காணும் கேமராக்கள், ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
இந்த பாதுகாப்பு பிரிவு தேசிய பாதுகாப்பில் உள்ள நாட்டின் மிக முக்கிய பிரமுகருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புகளை வழங்குகிறது.
அதோடு அவரது இல்லம், அலுவலகம், அவர் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மேலும் வெடிகுண்டுகள் துளைக்காத வகையிலான வாகனங்களிலேயே முதலமைச்சரின் பயணம் திட்டமிடப்படுகிறது. கைப்பேசி சிக்னல்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்ட வாகனமும் பின் தொடர்ந்து செல்லும்.
முதலமைச்சருக்கான பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை, ஆழ்வார்பேட்டை பகுதி, அவரது வீட்டை சுற்றியுள்ள முக்கியமான சாலைகள், முதலமைச்சர் வாகனம் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகள் ஆகியவற்றில் அதிக திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மட்டுமின்றி, முக அடையாளங்களை காணும் கேமராக்கள், ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன. இதற்கான இடங்களைக் கண்டறிந்து சென்னை காவல்துறையினர் எந்த இடத்தில் எந்த கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதலமைச்சர் வீட்டை சுற்றிலும், அவரது வீட்டை சுற்றியுள்ள செனடாப் சாலை, டி.டி.கே. சாலை, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சிக்னல், கே.பி.தாசன் சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, கதீட்ரல் சாலை, அண்ணாசாலை, சிவசங்கரன் சாலை, திருவள்ளூர் சாலை, தேனாம்பேட்டை சிக்னல் ஆகிய பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
அதோடு சந்தேகத்துக்குரிய நபர்கள் முதலமைச்சர் வீட்டின் அருகே சென்றாலோ, சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தாலோ ஏ.ஐ.தொழில்நுட்பம் வாயிலாக காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு சில வினாடிகளிலேயே எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும் வகையில் இந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.
இந்த கேமராக்கள் முழுமையாக அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வரும் போது முதலமைச்சர் பாதுகாப்பு மேலும் பல மடங்கு மேம்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை பெருநகர காவல்துறை கோரியுள்ளது.
- நேற்று தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 159 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆறாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800
23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-09-2025- ஒரு கிராம் ரூ.153
25-09-2025- ஒரு கிராம் ரூ.150
24-09-2025- ஒரு கிராம் ரூ.150
23-09-2025- ஒரு கிராம் ரூ.150
22-09-2025- ஒரு கிராம் ரூ.148
- வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
- வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணையின்போது, வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், புதிய வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது. பல்வேறு பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் அறிவித்துள்ளார்.






