என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
- ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:
திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).
இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.
பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
- நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். தற்போது மேட்டூர் அணைக்கு 100 கன அடிக்கும் கீழ் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 57 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.
- இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
சென்னை:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்ட நாட்டில் உள்ள வாத்து பண்ணையில் ஏராளமான வாத்துக்கள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையில் உள்ள 12 சோதனை சாவடிகளில் அதிகாரிகள் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (கிளோரின்-டை-ஆக்சைடு) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றிவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு உள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.
நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.
- கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஈரோடு:
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு பிடித்துள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.
- இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
- அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.
அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.
தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.
இந்த நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
- சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.
சென்னை:
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
* சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.
* பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.
* வாக்குப்பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
* என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை.
* வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
* பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
* சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தென்சென்னை பாராளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இருந்தனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திடீரென குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மூங்கில் மடுவு பகுதியில் உள்ள எங்கள் வீட்டிற்குச் செல்லும் ஓடை புறம்புக்கு வழியை அதே பகுதியை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த ஜனவரி, 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இதேபோல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அதிகாரிகள் பேசும்போது ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் நம்பிக்கையுடன் சென்றோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு ஓடை புறம் போக்கை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
வாக்குறுதி தந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம் என அவர் கூறினார். இதனை அடுத்து அங்கு வந்த டி.ஆர்.ஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்ணாவில் ஈடுபட்டிருந்த மணிகண்டனின் குடும்பத்திடம் விசாரனைக்கு உத்திரவிடுவதாக உறுதியளித்தார். அதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- சசிகலா அ.தி.மு.க.வினருக்கு எழுதி உள்ள கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் அ.தி.மு.க. எங்கள் பக்கம் வரும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்று கூறி வரும் சசிகலா அதற்கான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலிலும் அவர் இறங்கவில்லை. யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் 15 விதமான கேள்விகளுடன் அ.தி.மு.க.வினருக்கு ஒரு படிவத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆதார் எண், கழக மாவட்டம், ஒன்றியம், சட்டமன்ற தொகுதி, கல்வித்தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, 1.1.2017 அன்று கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது வகிக்கும் பொறுப்பு ஆகியவற்றை பூர்த்தி செய்து போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று அறிவித்துள்ளார்.
சசிகலாவின் இந்த திடீர் நடவடிக்கை கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை சென்னை வந்தார்.
இன்று காலையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், விருகை வி.என்.ரவி, ஆதிராஜாராம், பாலகங்கா, தி.நகர் சத்யா, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், கே.பி.கந்தன், மாதவரம் மூர்த்தி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ராயபுரம் மனோ, ஜெயவர்தன், டாக்டர் பிரேம்குமார், பெரும்பாக்கம் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரசாரம் எப்படி இருந்தது? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்பது பற்றி கேட்டறிந்தார்.
அதற்கு மாவட்ட செயலாளர்கள், களநிலவரம், மக்கள் ஆதரவு பற்றியும் எடுத்து கூறினார்கள்.
ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 40 நாட்கள் இருப்பதால் வாக்கு எண்ணும் மையங்களை தீவிரமாக கண்காணிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் சசிகலா அ.தி.மு.க.வினருக்கு எழுதி உள்ள கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் அ.தி.மு.க. எங்கள் பக்கம் வரும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. டி.டி.வி.தினகரன் வசம் வரும் என்று கூறியிருந்தார். இது போன்ற சூழலில்தான் அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்கும் வகையில் படிவம் வடிவில் கடிதத்தை அனுப்பி புதிய நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து சசிகலாவின் கடிதம் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
- மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
- ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.
நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் மாரிச்செல்வம் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது.
மேலும் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்துக்கு தொழில் ரீதியாக ஏதேனும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த பிரச்சனையில் யாரேனும் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்துக்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வக்கீல் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.
இதனால் வக்கீல் மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனினும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






