என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

    விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 25-ந்தேதி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
    • சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,

    சென்னையில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிக்கின்றனர். வார்டுகள் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடக்கிறது.

    தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

    தெருநாய் பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். தெருநாய்களுக்கு கருத்தடைசெய்யப்படுவதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.

    சென்னை மாநகரில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ திட்ட பணிகளே காரணம்.

    சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். மாடுகள் முதன்முறை பிடிபட்டால் ரூ.5,000, 2-ம் முறை பிடிபட்டால் ரூ.10,000, 3-ம் முறை பிடிபட்டால் ஏலம் விடும்படி சட்டம் கொண்டு வரப்படும்.

    கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்றார்.

    • சென்னையில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • உலகின் அனைத்து நாடுகளும் பேராபத்தில் சிக்கியுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் 36 ஏக்கரிலும், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கரிலும் செயல்பட்டு வருகின்றன. சென்னைக்கு வெளியே கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு வருவதில்லை. பூந்தமல்லி அருகே கூத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையமும், முடிச்சூரில் கட்டப்படும் ஆம்னி பேருந்து நிலையமும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது கோயம்பேட்டில் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் முழுமையாக காலியாகி விடும். அவற்றுடன் கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர் நிலத்தில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலமுறை நான் கடிதம் எழுதியிருந்தேன்.

    ஆனால், இப்போது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்துள்ள நிலத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் வணிக மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில் கலை, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுக்கான திறந்தவெளி சந்தை, உணவு வளாகம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், வணிக மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிதி மையத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதி மற்றும் அதையொட்டிய நிலங்களை இணைத்து 16 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    பொருளாதாரம், வருவாய் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு பார்த்தால் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானதாக தோன்றும். ஆனால், சென்னையின் தற்போதைய தேவை வணிக மையங்கள் அல்ல... தூய்மையான காற்றை வழங்கும் பூங்காக்கள் தான். சென்னையில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை.

    அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அது மட்டுமின்றி, சென்னையில் பெரிய பூங்காக்கள் இல்லை. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை.

    காலநிலை மாற்றம் உலகை அழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளும் பேராபத்தில் சிக்கியுள்ளன. வளரும் நாடுகளை காலநிலை மாற்றத்தின் கேடுகள் அதிகம் பாதிக்கின்றன. தமிழ்நாடும் சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. மாறாக, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்போகும் இடமாக சென்னையும் தமிழ்நாடும் உள்ளதை தமிழ்நாடு அரசின் அறிக்கைகளே சுட்டிக்காட்டுகின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்வதற்கான சரியான தருணம் இதுதான். அதில் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் பெரிய பூங்காவை அமைக்க வேண்டும். இதனை இப்போது செய்யாமல் போனால், இனி எப்போதும் செய்ய முடியாது. இதனை செய்யத் தவறினால் இன்றைய இளைய தலைமுறையினரும் எதிர்கால தலை முறையினரும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023 ஜூன் மாதம் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின், சென்னைக் காலநிலைச் செயல்திட்டத்தில் சென்னை மாநகரின் தனிநபர் பொதுவெளிப் பரப்பளவை 2030, 2040, 2050-ம் ஆண்டுகளுக்குள் முறையே 25 சதவீதம் 33சதவீதம், 40 சதவீதம் அதிகமாக்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும்.

    எனவே, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் திரள்வார்கள். பவுர்ணமி தினத்தையொட்டியும் ஏராளமானோர்கள் வருவார்கள். அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலுள் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். மேலும் நேற்று குபேர பவுர்ணமியாகும். இதை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கானோர் கோவிலில் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர்.

    இன்று காலை அவர்கள் கடற்கரையில் நீராடினர். இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியது. இதனால் அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாதுகாப்பு கருதி அங்கிருந்து செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினர். 

    • புளு கிராஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்தனர்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பூனையை காப்பாற்றிய மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    வட சென்னையில் 20 மாடி உயரம் கொண்ட ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையே பூனை சிக்கி கொண்டதும், அதனை பத்திரமாக மீட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக சென்னையில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் ஆப் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளது. உயரமான கட்டிடத்தின் கிரில் கம்பிகளுக்கு இடையே பூனை மாட்டிக்கொண்டதை பார்த்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு துறை மற்றும் புளு கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு சென்ற புளு கிராஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்தனர்.

    அப்போது அந்த கட்டிடத்திற்கு மாடி வழியாக மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், பூனை சிக்கி இருந்த இடத்திற்கு ஒரு கயிறை போட்டு அந்த குழுவினர் போராடி அந்த பூனையை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பூனையை காப்பாற்றிய மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். இது மிகவும் கடினமான மீட்பு பணி, பூனை சிக்கி இருக்கும் உயரத்தையும், அந்த மங்கலான இடத்தையும் கற்பனை செய்து பாருங்கள். பூனையை மீட்க போராடியவர்களுக்கு மிக்க நன்றி என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

    • நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.
    • ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதிலும் 1,535 ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

    இவற்றுள் பெரும் பான்மையானவை புதுச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.

    மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வரியும் செலுத்தா மல் தமிழ்நாட்டிற் குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும்.

    மேலும் இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் பல தமிழ்நாடு மாநிலம் வழியே பிற மாநிலங்களுக்கு பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது விதிகளை மீறி தமிழ் நாட்டிற்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இவ்வகை ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

    இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னி பஸ்களில் நாளது தேதி வரை 112 ஆம்னி பஸ்கள் மட்டுமே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.

    ஆனால், இன்னும் 793 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை.

    எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    மாநிலம் முழுவதிலும் கடந்த 18.06.2024 முதல் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னி பஸ்கள் மேற்கூறிய விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னி பஸ்கள் அவற்றின் உரிமையாளர்களால் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்கு வரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், மேற்கொண்டு 200 ஆம்னி பேருந்துகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து பஸ்களின் இயக்கத்தினையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.
    • உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இதுவரையிலும் கள்ளச் சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 55தாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் தி.முக. எம்.பி தமிழச்சி தங்கபாண்டின் வருத்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    "கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று 'எதிர்காலத்தில் நடக்காது' என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு!" என்று கூறியுள்ளார்.

    • நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா.
    • உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.

    உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தெரியாமலோ நடந்திருக்காது.

    இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.

    • மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.
    • கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 55 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதையொட்டி பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்களும் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராய சம்பவத்தில் 55 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதேபோல் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த சூழலில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்பட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளூர் சிலை அருகே பா.ஜ.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் இறந்தவரை தூக்கி செல்லும் பாடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசை கண்டித்து சிலர் பாடையை எடுத்து வந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜ்குமார், கருட கிருஷ்ணன், நவீன், வேல்முருகன், ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது.
    • கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும்.
    • சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    சென்னை:

    சி.எம். டி.ஏ. மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மேலும் ரூ.30 கோடி செலவில் மூன்று பன்நோக்கு மையம் அமைக்கப்படும். 'சென்னை அங்காடி'ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை நகரில் வெள்ள அபாயத்தை குறைக்க வெள்ளக்கட்டுப்பாடு வரைபடம் தயாரிக்கப்படும்.

    மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ,10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

    கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும் அங்கு மழைநீர் வடிகால் ரூ.15 கோடி செலவிலும், ரூ,7 கோடி செலவில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.

    சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை பெருநகரத்தில் அமைந்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ரூ,8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ரூ,5 கோடி செலவில் போக்குவரத்து சிக்னல்கள் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவான்மியூர் பஸ் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். நெமிலிச்சேரியில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புத்தேரி ஏரியில் மழைக்காலங்களில் வெள்ளநீர் எளிதாக வடிவதற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கத்தில், உணவருந்தும் இடம் உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆவடி பஸ் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போரூர் ஏரி ரூ.10 கோடியிலும், பெருங்குடி ஏரி ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×