என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
கோவை:
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
- நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.
திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும்.
ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா?
எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது" என்று பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், "ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
- தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பர் அதுல்யா ரவி.
இவரது சொந்த ஊர் கோவை ஆகும். வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போனது.
அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி(46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
- தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது டெட்ரா பேக்கில் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ரூ.140-க்கு விற்கப்படுவதால் கூலி வேலை செய்பவர்களால் அதை வாங்கி குடிக்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளில் குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
இது சம்பந்தமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 90 மில்லி மது டெட்ரா பாக்கெட்டுகள் விற்பனை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி மது டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
டெட்ரா பாக்கெட்டுகளில் விற்கப்படும் சிறிய அளவிலான மது வகைகள் எந்த அளவுக்கு அங்கு புழக்கத்தில் உள்ளது என்பது பற்றியும் விவரம் சேகரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மதுபானங்களை தீபாவளி முதல் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
- தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.
மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.
முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.
ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
- மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி கிடைத்து இருக்கிறது.
திருப்புவனம்:
மதுரையை அடுத்த கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் 9 கட்டமாக அகழாய்வு பணிகளை முடித்துள்ளன. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கீழடி, கொந்தகையில் 10-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதில் கீழடியில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே 12 குழிகள் தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழிகளில் ஏற்கனவே பல வண்ண நிறங்களில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. 'தா' என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடும் கண்டெடுக்கப்பட்டது.
குழிகள் மேலும் 3 அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்ட நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. ஒன்று 5 செ.மீ. நீளமும், 4 செ.மீ. அகலமும் மற்றொன்று 4 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் உள்ளது.
இந்த நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் 10-ம் கட்ட அகழாய்வில் தற்போது உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செம்புப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. pic.twitter.com/XPE9lmwnc7
— Thangam Thenarasu (@TThenarasu) July 3, 2024
- அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை.
- ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு.
சென்னை:
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய் மாொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன எனவும், சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன என்றும் விளக்கினார்.
மேலும், இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை எனவும், எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பாராளுமன்றத்தின் விருப்பம் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்” என்ற அறிவிப்பு.
- திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடந்து முடிந்த இந்தப் சட்டபேரவை தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் பயன்கள் தந்திடும் சில முக்கிய அறிவிப்புகளைச் சட்டப்பேரவை விதி 110 மூலம் வெளியிட்டு வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
அதில் வருகிற இரண்டு ஆண்டுகளில் "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்" மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்"-என்றும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு கிராமங்களின் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசின் அக்கறையை வெளிப்படுத்தினார்.
75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்" என்ற அறிவிப்பு, ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அறிவிப்பு, திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக சேதாரம் அடைந்துள்ள 6746 அடுக்குமாடி குடியிருப்புகளை 1149 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகை செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110 அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் என்றும், எப்பொழுதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.
- உயர் கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.
கல்லூரிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8-ந் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22-ந் தேதியிட்ட உயர் கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
- தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராயத்தில் தண்ணீரில் 10% மெத்தனால் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நடந்த மரக்காணம் கள்ளச்சாராய மரணங்களில் 16% மெத்தனால் கலந்து இருந்ததாக தகவல் வந்தது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீயை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.
- ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்தவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டது.
சென்னை :
போக்குவரத்து துறையில் டீசல் செலவை குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் என்.எல்.ஜி. மற்றும் சி.என்.ஜி கியாஸ் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 13-ம் தேதி மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்திற்கு தலா 2 என்.எல்.ஜி. பஸ்களும், கும்பக்கோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சி.என்.ஜி பஸ்களும் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதலாக ஒரு சி.என்.ஜி. பஸ் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, கடந்த ஜூன் 28-ம்தேதி முதல் பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த சி.என்.ஜி. கியாஸ் நிரப்பப்பட்ட பஸ் சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு (தடம் எண்-109 சி) பயணிகளுடன் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாறு பணிமனை அருகே உள்ள எல்.பி. சாலையில் பஸ் செல்லும்போது, எஞ்சினில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் M/s. Torrent Gas Pvt Ltd σστ TN-01AN-1569 (ADC800) பேருந்து அங்கீகரிக்கப்பட்ட M/s. Chennai Auto Gas மையம் மூலமாக CNG (Retrofitment kit Conversion) மாற்றம் செய்யப்பட்டு 28.06.2024 அன்று முதல் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் (02.07.2024) மதியம். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கி சென்று கொண்டு இருந்தபோது, மதியம் சுமார் 2.00 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்தவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டது.
காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
- அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
- நீட் குறித்து விஜய் கருத்தை வரவேற்கிறோம்.
சென்னை:
நீட் தேர்வு முறைகேடால் நீட் மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.
நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
இந்நிலையில் நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. விஜயின் கருத்தை வரவேற்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.






