என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் பாகலூர் சாலையில சமத்துபுரம் பகுதியில் ஆர்.டி.ஓ சோதனை சாவடி உள்ளது. தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடகா மற்றும் ஆந்திர உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கும் அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் வாகனங்களுக்கும் இந்த சோதனை சாவடியில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆர்டிஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி வடிவேல் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.


    இன்று காலை 6 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இச்சோதனையில் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத, 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன.
    • ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்கள் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்தாத நீண்ட காலமாக உள்ள வணிக பிரமுகர்கள் இடமிருந்து வசூலிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக் கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றிற்கு சொத்து வரி வசூலிப்பதன் மூலம் மாநகராட்சியின் வருவாயை பெருக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    முதலில் 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தியாகராயநகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.


    இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக் காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் அளித்துள்ளது.

    கிராம நத்தம் தவிர தி. நகர் போன்ற பகுதிகளில் சட்டபூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. நகரில் இது போன்ற நிலங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவர்களுக்கு பட்டா இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுபோன்ற சொத்துகள மீது அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை.

    பட்டா இல்லாத கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 4 பேரை தனிப்படை மற்றும் மது விலக்கு போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கஞ்சா விற்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், மது விலக்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விருத்தாசலத்தில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோணு மகாராணா (வயது 28), திருப்பூரை சேர்ந்த ரவிக்குமார் மகன் சதீஷ் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து கடலூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும், கம்மாபுரம் அருத்த சு.கீணனூர் கதிர்வேல் மகன் ராஜா (36), விருத்தாசலம் காசிம் பாஷா மகன் சதாம் (23) ஆகியோர் இவர்களிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும், தனிப்படை மற்றும் மது விலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இவர்களிடம் விசாரணை மேற்கொண்டால், கடலூர் மாவட்டத்தில் யார்? யாருக்கெல்லாம் கஞ்சா சப்ளை செய்தனர் என்பதும், வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளனரா என்பது தெரிவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
    • காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    காட்பாடி:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும். மேலும் ஏரி மற்றும் குளங்களில் மண் எடுக்கும் போது ஆங்காங்கே எடுக்க விடாமல் அதை முறைப்படி எடுக்க அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண் எடுப்பவரும், விவசாயிகளும் பயனடைவார்கள்.

    கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தான் அந்த அறிக்கை எனக்கு வந்துள்ளது. படித்துப் பார்த்த பிறகுதான் முறைகேடு குறித்து தெரியவரும்.

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றபின்னர் முதன்முறையாக குப்பம் தொகுதியில் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இதனால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் மழைநீரை தேங்க விடாமல் தடுக்க, ஆங்காங்கே தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இது தொடர்பாக எல்லோருமே தான் கேட்டு வருகிறார்கள். அதேபோல தான் மாயாவதியும் கேட்டுள்ளார். கொலைச் சம்பவம் எல்லா நாட்களிலும் எல்லா இடங்களிலும் நடைபெற்று தான் வருகிறது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக கொலைகள் நடைபெறுகிறது. இதற்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பியூஸ்கோயல் கூறியிருந்தது பற்றி கேட்டதற்கு, 'அதெல்லாம் வெளிநாட்டு செய்தி' என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார்.

    அப்போது டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர்.

    பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை காலை 6 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது.
    • தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், சிலர் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

    தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. எனவே கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை கடைபிடித்து வந்தனர். ஆனால் அதேவேளையில் இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன.

    எனவே தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியமும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதற்கு முன்னர் வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், சிலர் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

    ஏனென்றால் கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கினால்தான் மின் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்ததால் விதிகளை மீறுவதற்கு அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அதிலும் விதி விலக்கு வழங்கி இருப்பதால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

    • பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.

    தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

    இதைதொரட்ந்து, சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன்படி, பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சாட்டை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், சாட்டை துரைமுருகனை திருச்சி நீதிமன்ற முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலில் செல்ல தேவையில்லை எனக் கூறி விடுவித்தனர்.

    • முதலில் ஆடிய சேலம் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே நெல்லை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

    இதனால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினர்.

    இறுதியில், சேலம் அணி 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராபின் 23 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
    • அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டு பொது சுகாதாரத் துறையில் தமிழகம் வலுவாக இருப்பதற்கு பேருதவி புரிபவர்கள் அரசு மருத்துவர்கள். அப்பேற்பட்ட சேவை மருத்துவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் இந்த "திடீர் அரசாணை" அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதோடு, இது சமூக நீதிக்கே எதிரானது.

    தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குறிப்பாக புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (மருத்துவம் அல்லாத சிறப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, மனநலம் சிகிச்சை பிரிவு) தேவை உள்ள நிலையில் இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

    ஆகவே, அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான 50% இடஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    • ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்
    • திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு!

    முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது,

    நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்!

    அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான்!

    சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு!

    பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின், அவருடைய ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்!!

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார்.
    • தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான்.

    தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார். தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், தலைவர்கள், தொழில் நுட்பத்தை உருவாக்குபவர்கள் என அந்த துறையில் உள்ளவர்களை சந்திக்க உள்ளார்.

    நான் சட்டசபையில் கூறியது போல் 100 சதுர அடியில் கட்டிடமும், இணையதள வசதியோ, மின்சாரமும் இருந்தா தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரானா முடிந்து 2 வருடங்களில் உலகளாவிய திறன் மையங்கள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்படியென்றால் பல 10,000 வேலைகள் உருவாக்கி உள்ளனர்.

    கடந்த ஆண்டு நான் கூறியது போல 40 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் அலுவலகம் குத்தகைக்கு எடுக்கப்படும் என்று சொன்னேன். ஆனால் சென்ற ஆண்டு 110 லட்சம் சதுரஅடி புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சட்டமன்றத்தில் கூறியது போல் தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான். ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 800 முதல் ஆயிரம் கோடி ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.

    ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் நாம் தான் முதலிடத்தில் "இருந்தோம்.. ஆனால்., இப்போது ஐதராபாத், பெங்களூரு அளவுக்கு நாம் இல்லை என்றே கூற வேண்டும்.

    அதேபோல் நாம் மாநிலத்திற்கு வெவ்வேறு தொழில்கள் உள்ளன. அனைத்து துறைகளில் முன்னேறி இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப துறையை பொருத்தவரை கடந்த ஆண்டு என்னால் முடிந்த முன்னேற்றங்களை கொடுத்து வருகிறேன். இன்னும் சிறப்பாக என் துறையை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

    • காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
    • அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்..... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    ×