search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Doctor"

    • 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.

    குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர். மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளை அணுகி எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய சரண்யா நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து சரண்யா கருவுற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பின்னர் சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. முறையான உருவமே இல்லாத நிலையில் 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு டாக்டர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு குழந்தையை மீட்ட டாக்டர்கள் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டி பின்னர் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் குழந்தையை பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார்.

    நாகையில் 540 கிராம் எடை கொண்ட குழந்தையை போராடி காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    ×