என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினார்கள்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, மயிலப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை 1.55 மணிக்கு இ-மெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பள்ளிகளுக்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினார்கள். மேலும் மோப்பநாய் மூலமும் பள்ளி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ஆனால் இந்த சோதனையின் போது வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? இ-மெயில் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை:
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார்.
- சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியது.
- வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை நகரின் வரலாற்றில் ஜார்ஜ்டவுன் பகுதி முக்கியமானது. பழமையான பாரம்பரியமிக்க கட்டிடங்கள் எழில் மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பகுதியில் சாலை யோரம் குடிசை அமைத்து சில குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாபர் சாரங், நாராயணப்பா தெருக்களில் 3 தலை முறையாக இவர்கள் வசித்து வருகிறார்கள்.
100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடற்ற நிலையில் வசித்து வருவதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியது. அவர்கள் விரைவில் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தெருக்களில் ஒன்றில் உள்ள சுங்க அலுவலகம் இப்பகுதியில் கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்குமாறும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜார்ஜ் டவுன் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு எர்ணாவூரில் வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை இவர்கள் ஏற்கவில்லை.
இதுகுறித்து 3 தலை முறையாக வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் கூறும்போது, எர்ணாவூரில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற விருப்பம் இல்லை. நாங்கள் மிண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கவே விரும்புகிறோம். எங்கள் குடும்பங்கள் இங்கு ஆண்டாண்டு காலமாக வசித்து வருகின்றன. எங்கள் பெற்றோரும் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். இங்குதான் எங்கள் வாழ்வாதாரமும் உள்ளது' என்று கூறினார்கள்.
சில இளம் பெண்களை கொண்ட குடும்பங்கள் தெருக்களில் வாழ்வது பாதுகாப்பாற்றது என்று உணர்ந்து தங்கள் உடமைகளில் சிலவற்றை அங்கே விட்டுவிட்டு அருகில் உள்ள சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்த பகுதி வார்டு கவுன்சிலர் ஆசாத் கூறும் போது, `வீடுகள் வழங்கப்பட்டதில் திருப்தி அடையும் வரை குடும்பங்கள் இடம் மாறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கணக்கெடுப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்' என்றார்.
- மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.
- அமைச்சர் இல்லத்திற்கு அருகில் வைத்து படுகொலை.
தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் படுகொலை சம்பவம் என அடுத்தடுத்து படுபயங்கர சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்கள், வாரங்கள் என பின்னோக்கி பார்த்தால் பல சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, ஒழுங்காகத் தான் இருக்கிறதா என்ற கேள்வியை கண் முன் கொண்டுவரும்.
மிக சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். படுகொலை முடிந்து ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு தொடங்கும் முன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டன. பிறகு, கொன்றவர்கள் என்று சிலர் சரண் அடைய, மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, காவல் துறை மாற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சரி செய்யும் என்று சென்னை நகருக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டார். கூடவே காவல் துறையில் சில தலைமை அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்த மாற்றங்களுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை மற்றும் அரசு துறையில் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, ரவுடிகளை தொடர்ந்து கண்காணிப்போம், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் குறையும் என்ற தொனியில் சில அறிவிப்புகள் வெளியாகின. இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற மக்கள் நம்ப துவங்கினர்.
ஆம்ஸ்ட்ராங்க படுகொலை சம்பவத்திற்கு முன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து எரித்து கொல்லப்படுகிறார். இவரது வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த கொலை பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று அதிகாலை (ஜூலை 16) மதுரையில் திமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு அருகில் வைத்து நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிறார் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒருபுறம் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் போதிலும், அதிகாரிகள் மாற்றம், ஆலோசனை கூட்டம் என அரசு நடவடிக்கை ஒருபுறமும் அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (ஜூலை 16) ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இவர்களில் சிலர் அவர்களாகவே பணியிட மாற்றம் கோரியதாகவும், சிலர் கட்டாயமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றப்பட்ட அரசு அதிகாரிகளில் பலர் உயர் பொறுப்புகளை வகித்தவர்கள் ஆவர். உள்துறை செயலாளர்கள், ஆணையர்கள் என மாநிலம் முழுக்க பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
காவல் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலம் முழுக்க இதர நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை களைய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயங்களில் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
- நாளை மறுநாள் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
- பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாள்.
- அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாளான, முஹர்ரம் திருநாளை அனுசரிக்கும் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புனித நாளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாளான, முஹர்ரம் திருநாளை அனுசரிக்கும் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் புனித நாளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவர்… pic.twitter.com/v5CggnpIQS
— K.Annamalai (@annamalai_k) July 17, 2024
- மோட்டார் சைக்கிள்களை இரவலாக வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருமனை:
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாங்கோடு ஐந்துள்ளி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் அபிஷேக் (வயது23). இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை இரவலாக வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அவ்வாறு வாங்கிய சிலரது மோட்டார் சைக்கிள்களை திருப்பி கொடுக்கவில்லை. மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடம் யாரோ திருடிச்சென்ற விட்டனர் என்று கூறியபடி இருந்துள்ளார். இதுபோன்று தொடர்ச்சியாக செய்தபடி இருந்திருக்கிறார்.
இந்நிலையில் மாங்கோடு படப்பறத்தலவிளை பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவரிடம் அவரின் மோட்டார் சைக்கிளை அபிஷேக் இரவலாக வாங்கி திரும்ப கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பலமுறை கேட்ட ஏசுதாஸ், தன்னுடைய மோட்டார் சைக்கிளை தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வேன் என கூறியுள்ளார்.
அதற்கு அபிஷேக் எதுவும் கூறவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீது அருமனை போலீஸ் நிலையத்தில் ஏசுதாஸ் புகார் கொடுதார். அதன் அடிப்படையில் அருமனை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், அபிஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியபடி இருந்திருக்கிறார். இருந்த போதிலும்போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில் அபிஷேக், ஏசுதாசின் மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டத்தில் ஆக்கர் கடையில் விற்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், அபிஷேக்கின் மோட்டார் சைக்கிளை கண்டு பிடித்தனர்.
இரவல் வாங்கிய மோட்டார்சைக்கிளை திருட்டு போய் விட்டதாக கூறி நாடகமாடி விற்ற சம்பாதித்த அபிஷேக்கின் மீது வழக்குபதிந்து கைது செய்தனர். மற்றவர்களிடம் இரவலாக வாங்கிய மோட்டார் சைக்கிள்களையும் அபிஷேக் இதுபோன்று விற்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிள்களை வாலிபர் நூதனமுறையில் விற்பனை செய்த சம்பவம் மாங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது.
வானூர்:
புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையோர பகுதிகளுக்கு மதுபாட்டில் கடத்தி வந்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், தென்கோடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் உருளையன்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 130 குவார்ட்டர் பாட்டில், 4 புல் பாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.
- அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 3 பேரிடம் கூடுதல் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, அருள் என 11 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதனை அடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 11 பேரையும் பூந்தமல்லி சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மீதமுள்ள 10 பேரிடமும் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு போலீசார் மீண்டும் ஆஜர்படுத்தினர். பின்னர் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த திருமலை மற்றும் அருள் ஆகிய 3 பேரிடம் கூடுதல் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புதியதாக எழும்பூர் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல.
- 2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்.
மதுரை:
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர். 4 1/2 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தினார்.
* பாரத பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டினார்.
* பாராளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும், அதிமுக மீண்டும் அரியணை ஏறும்.
* யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே தோற்றுள்ளனர்.
* அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மக்கள் எங்கள் பக்கம்.
* 2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்.
* அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு "Wait and See" என்று கூறினார்.
- தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
- குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் சுமார் 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பாம்பே பர்மா நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தேயிலை தோட்டத்தை மூடப்போவதாக தொழிலாளர்களிடம் தெரிவித்தது.
அதன் பின்னர் தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றதாகவும், அங்கு வசிக்கும் மக்களையும் வெளியேற உத்தரவிட்டதாகவும் தொழிலாளர்கள் புகார் கூறினர்.
இந்த சம்பவங்களை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், குத்தகை காலம் முடிவடையும் வரை மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து மறு உத்தரவு வரும்வரை தொழிலாளர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி கொள்ள தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதற்கிடையே தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசுக்கு வைக்கும் வாழ்வாதார கோரிக்கைகள் என்ற தலைப்பில் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதில், மாஞ்சோலை எஸ்டேட்டுகளை அரசு எடுத்து நடத்த வேண்டும், 10 ஏக்கர் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாஞ்சோலையில் நிலம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.






