என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர்.
    • உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    ஆறு, ஏரி, குளங்களில் உள்ள மீன்கள் உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் உயிர் வாழாது என கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே வங்காள விரிகுடா கடலில் ஆறு மற்றும் ஏரிகளில் உள்ள ஜிலேபி மீன்கள் பிடிபட்டது. இதனைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறை பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் என்பவர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கடலில் பாக் ஜலசந்தி பகுதியில் ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர். இந்த மீன்கள் கடலில் 2 முதல் 5 மீட்டர் ஆழத்தில் சுற்றி திரிகின்றன. 11 சென்டிமீட்டர் முதல் 23 சென்டிமீட்டர் வரை மீன்கள் வளர்ந்துள்ளன.

    கடல் தண்ணீரில் இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்துள்ளன.

    தன்னை சுற்றியுள்ள உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இவற்றின் வயிற்றில் உள்ள உணவை பார்த்தால் கடலில் உள்ள மென்மையான உயிரினங்களான கோப் காய்கள், மொல்லஸ்கள், சிறிய பிளாங்டன்கள், பாலி சீட் புழுக்கள் போன்றவற்றை சாப்பிட்டு வளர்ந்தது தெரிய வந்தது.

    இந்த ஜிலேபி மீன்கள் கடலில் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருவதால் அவை உண்ணக்கூடிய கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வைகை ஆற்றில் இருந்து ஜிலேபி மீன்கள் கடலில் கலந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    • அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர்.
    • காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ஆடிப்பெருக்கு நாளில் நெல் விதைத்தால் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் விவசாயத்திற்கு ஆதாரமான ஆறு, குளம் உள்பட நீர் நிலைகளைபோற்றும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ஆடி மாதம் 18-ம் நாளான ஆடிப்பெருக்கில் காவிரி கரையோரங்களில் மக்கள் திரண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இதில் ஆண்களும், பெண்களும் அதிகாலையிலே பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கள பொருட்களோடு மேட்டூர் காவிரி கரையில் திரண்டனர். மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இதனால் மேட்டூர் பகுதியில் கொளத்தூர் செட்டிப்பட்டி, கோடையூர், பண்ணவாடி, மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்.ஜி.ஆர்.பாலம், திப்பம்பட்டி, கீரைக்காரனூர், கூணான்டியூர் ஆகிய 9 இடங்களில் மட்டும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த பகுதிகளில் அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர். புதுமண தம்பதியினர் காவிரியில் புனித நீராடி புதிய தாலியை அணிந்து கொண்டனர். மேலும் புதுமண தம்பதிகள் அருகம்புல் வைத்து ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் அங்கு அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக குடும்பத்தினருடன் வந்து காவிரி ஆற்றில் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேலும் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நின்று வேடிக்கை பார்க்கவும், பிற இடங்களில் ஆற்றில் இறங்கி குளிப்பது, கரையில் நின்று புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல், ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வரை காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரி கார்டு வைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பேரிடர் மீட்புக்குழுவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது.
    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

    இன்று தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6,450-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 51,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.90ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெட்ரோ ரெயிலை போல அடுத்து வரக்கூடிய ரெயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு செய்யப்படும்.
    • முழுக்க முழுக்க வந்தே பாரத் ரெயில் போலவே இந்த ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 600 மின்சார ரெயில் 4 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

    சென்னையை ஒட்டி வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் வசிக்கும் மககள் புறநகர் மின்சார ரெயில்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில தென் சென்னையில் வந்தே மெட்ரோ ரெயில் விரைவில் இயக்கப்படுவதற்கான முன்னோட்டம் தற்போது தொடங்கி உள்ளது.

    வந்தே பாரத் ரெயிலை போலவே வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் வந்தே மெட்ரோ ரெயில் தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

    வந்தே மெட்ரோ ரெயில் 12 பெட்டிகளை கொண்டது. ஒவ்வொரு பெட்டியும் கழிப்பிட வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் இருபுறமும் கதவுகள் மூடப்பட்டு இருக்கும். 130 கி.மீ. வேகத்தில் இந்த ரெயிலை இயக்க முடியும்.

    இந்த ரெயிலில் ஏ.சி. வசதி உள்ளது. மெட்ரோ ரெயிலை போல அடுத்து வரக்கூடிய ரெயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு செய்யப்படும். முழுக்க முழுக்க வந்தே பாரத் ரெயில் போலவே இந்த ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வரை சென்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வந்தது. சோதனை ஓட்டத்தின் போது அதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டறியவும், வளைவுகளில் எத்தனை கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டும், மற்ற இடங்களில் எவ்வளவு வேகத்தில் இயக்குவது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

    ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் மற்றும் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப். அதிகாரிகள் வந்தே மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

    கடற்கரையில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு வந்தாலும் வில்லிவாக்கம் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஏறினார்கள். அங்கிருந்து காட்பாடி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சோதனை ஓட்டத்தின்போது தெரிய வரும் குறைகள் சரி செய்யப்பட்டு அதன் பின்னர் மீண்டும் இயக்கப்படும். இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் வந்தே மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கும். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றனர்.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு.
    • பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிப்பெருக்கையொட்டி வரும் தொடர் விடுமுறையால் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    நீர்நாய்... இது நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பு கொண்ட ஒரு வகையான பாலூட்டி இனமாகும். இவை பாதிநேரம் கரையிலும், பாதி நேரம் நீரிலும் வாழ்வதால், பாதி நீர்வாழ் பாலூட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    விலங்குகள் வரிசையில் பட்டியலிடப்பட்டாலும் இவை மீன்கள், இறால், நண்டு, நத்தை போன்றவற்றையே இரையாக கொள்கின்றன. இரைகளை பிடித்த பிறகு நீர் அல்லது நிலத்துக்கு எடுத்துச்சென்று உண்கின்றன. இவை நீர்நிலைகளில் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் சுலபமாக இரை தேடுகின்றன.

    நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெலிந்தோ அல்லது சற்றே பருமனுடனோ, நீண்ட உடல்வாகினை பெற்றுள்ள நீர்நாய்கள் தண்ணீரில் செல்வதற்கு ஏதுவாக பாதங்களில் சவ்வுகளையும், வேட்டையாடுவதற்கு ஏற்ப கூர்மையான பற்களையும் கொண்டுள்ளது. 2 முதல் 6 அடி உயரம் வரையிலான நீர்நாய்கள் 45 கிலோ எடை வரை வளரக்கூடியதாகும். சுமார் 16 ஆண்டுகள் வரை வாழும்.

    நல்ல தண்ணீரை மட்டுமே தனது வாழ்விடமாக கொண்ட நீர்நாய்கள், சதுப்புநிலம், ஈர நிலம், ஆறு, குளம் மற்றும் நெல்வயல்களில் அதிகளவில் காணப்படுகின்றன. நீர்நிலைகளின் மாசுபாடு காரணமாக சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டிய ஆற்றுப்படுகைகள் மற்றும் கரூரில் இருந்து திருச்சி வழியாக டெல்டாவிற்கு பாயும் காவிரி ஆற்றுப்படுகைகளிலும் தற்போது அதிகளவில் நீர்நாய்கள் வசித்து வருகின்றன.

    அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள காவிரி ஆற்றுப்பகுதிகளில் தற்போது அதிகளவில் நீர்நாய்கள் வசிக்கின்றன. முக்கொம்புக்கு சுற்றுலா செல்பவர்களும், காவிரி ஆற்றுப்படுகைகளுக்கு செல்பவர்களும் நீர்நாய்கள் கூட்டம், கூட்டமாக தண்ணீரில் நீந்தி செல்வதை காணலாம்.

    ஆற்றில் வளர்ந்து நிற்கும் கோரைப்புற்களுக்கு நடுவில் மறைவிடமான பகுதியில் நீர்நாய்கள் பதுங்கி கொண்டு தன்னையும், தன் குட்டிகளையும் பாதுகாக்கிறது. மேலும் அதனை பாதுகாப்பு அரணாக கொண்டு, அங்கிருந்தவாறே மீன்களை பிடித்து உணவாக்கி கொள்கிறது. குறிப்பாக மாலை பொழுதுகளில் காவிரி ஆற்றின் மணற்பாங்கான இடங்களில் நீர்நாய்கள் உருண்டு, புரண்டு விளையாடும் காட்சி பொதுமக்களை கவர்ந்து இழுக்கிறது. நீர்நாய்கள் துள்ளி குதித்து விளையாடுவதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

    • தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள்.
    • கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது.

    வேலூர்:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமும் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் நடுவர் மன்றம் சென்றோம். நேரடியாக பட்டேலும், கருணாநிதியும், பிரதமராக இருந்த தேவேகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை.

    பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள். பேசி தீர்க்கிறோம் என்றால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது.

    தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் 2 ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்.

    கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள், செல்லும் என கூறியதை தான் அறிவித்தோம்.

    வயநாடு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன சொன்னார் என்பதை பினராயி விஜயன் படிக்கிறார். 'வரலாம் வெள்ளம் என சொல்லி உள்ளனர், அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை'. இதில் பினராயி விஜயன் சொல்வதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்காகக் கேரளா சென்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் 108 ரன்னில் சுருண்டது.

    சென்னை:

    டிஎன்பிஎல் தொடரின் குவலிபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே திண்டுக்கல் அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.4 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மான் பாப்னா அதிகமாக 26 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டும், சுபோத் பாதி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் உத்தரவு.
    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியால், தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இருக்கும மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.
    • மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு.

    நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார்.

    போலியான செய்திகாளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால், நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இணைய தளத்தில் தகவல் பரவிய நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

    • நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக நாளை அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், கே.கே நகர், கிண்டி, ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×