என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வில்லிவாக்கம்-காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது
- மெட்ரோ ரெயிலை போல அடுத்து வரக்கூடிய ரெயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு செய்யப்படும்.
- முழுக்க முழுக்க வந்தே பாரத் ரெயில் போலவே இந்த ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 600 மின்சார ரெயில் 4 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
சென்னையை ஒட்டி வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் வசிக்கும் மககள் புறநகர் மின்சார ரெயில்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில தென் சென்னையில் வந்தே மெட்ரோ ரெயில் விரைவில் இயக்கப்படுவதற்கான முன்னோட்டம் தற்போது தொடங்கி உள்ளது.
வந்தே பாரத் ரெயிலை போலவே வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் வந்தே மெட்ரோ ரெயில் தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
வந்தே மெட்ரோ ரெயில் 12 பெட்டிகளை கொண்டது. ஒவ்வொரு பெட்டியும் கழிப்பிட வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் இருபுறமும் கதவுகள் மூடப்பட்டு இருக்கும். 130 கி.மீ. வேகத்தில் இந்த ரெயிலை இயக்க முடியும்.
இந்த ரெயிலில் ஏ.சி. வசதி உள்ளது. மெட்ரோ ரெயிலை போல அடுத்து வரக்கூடிய ரெயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு செய்யப்படும். முழுக்க முழுக்க வந்தே பாரத் ரெயில் போலவே இந்த ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வரை சென்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வந்தது. சோதனை ஓட்டத்தின் போது அதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டறியவும், வளைவுகளில் எத்தனை கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டும், மற்ற இடங்களில் எவ்வளவு வேகத்தில் இயக்குவது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் மற்றும் தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப். அதிகாரிகள் வந்தே மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
கடற்கரையில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு வந்தாலும் வில்லிவாக்கம் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஏறினார்கள். அங்கிருந்து காட்பாடி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சோதனை ஓட்டத்தின்போது தெரிய வரும் குறைகள் சரி செய்யப்பட்டு அதன் பின்னர் மீண்டும் இயக்கப்படும். இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் வந்தே மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கும். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றனர்.






