என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.
சென்னை:
சென்னை மாநகர சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபத்தான சாக்கடை மூடிகள், வேகத் தடைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2 மாதங்களாக தன்னார்வலர்கள் 100 பேர் சாலைகளில் மேற் கொண்ட ஆய்வில் 201 இடங்களில் ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
205 இடங்களில் சாக்கடை குழி மூடிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. வேகத் தடைகள் 10 செ.மீ. உயரம், 12 அடி அகலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால் 201 இடங்களில் இந்த விதிகளை மீறி வேகத் தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 40 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட வேண்டிய அறிவிப்பு பல கைகளும் சாலையில் நிறுவப்படாமலே இருக்கிறது.
இதுபோன்ற காரணங்களாலேயே இந்த வேகத் தடைகள் உயிருக்கு ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதே போல் சாக்கடை குழி மூடிகள் மற்றும் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் குழிகளும் பல இடங்களில் சாலை அளவை விட கீழே உள்ளது. இந்த குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.
சாலை உயரத்தை அதிகரிப்பதும் இந்த மூடிகளை சாலை அளவில் வைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் இந்த மூடிகள் சாலை உயரத்தைவிட அதிகமாகி விபத்துக்கு காரணமாகி உள்ளது.
இதே போன்று 61 இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களும் ஆபத்தானவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த மனுவில் விபத்துக்கு காரணமாக இருக்கும் வேகத்தடைகள், சாக்கடை மூடிகள், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட மீனவக் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
- இலங்கை வசம் உள்ள மீனவர்களையும் மற்றும் மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து, அவர்களின் நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவக் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் சரிவர நடைபெறாமல், வருமானம் ஈட்ட முடியாமல் மிகுந்த சிரமத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலை தொடரக்கூடாது.
எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கும், படகுகளை பறிமுதல் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு தற்போது கைது செய்யப்பட்டுள்ள 33 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை வசம் உள்ள மீனவர்களையும் மற்றும் மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
- சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்:
தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. கோவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கூறினார். உடனே, இப்போது சொல்லக்கூடாது. ஆகஸ்ட் 19-ம் தேதிக்குப் பிறகு தான் அவர் துணை முதலமைச்சர் என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
- பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா. வக்கீல் ஹரிகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இது போன்று தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரபல வக்கீல் பால் கனகராஜிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி உள்ளனர்.
பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜகவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் பால் கனகராஜ் ரவுடிகள் சார்பிலும் ஆஜராகி வாதாடி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில் ஆகியோர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களில் நாகேந்திரன் வேலூர் சிறையில் இருக்கும் நிலையில் சம்பவ செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் பால்கனகராஜ் வக்கீலாக செயல்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று பால்கனகராஜ் இன்று எழும்பூரில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
- சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஆக.9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது.
- கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
பழனி:
பழனி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வங்கதேசத்தில் 20 சதவீத இந்துக்கள் இருந்த நிலையில் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தில் அங்கு சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோவில்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக உள்ளனர்.
பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது. கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழனியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் அவர் கோவிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திரை உலகை முதலமைச்சர் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல கோவில்களை தி.மு.க. மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.
தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு மேயர் தேர்தலில் வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. முதலமைச்சர் சொல்வதை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட கேட்பதில்லை. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டி வருகின்றனர். கோவில் நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. கும்பாபிஷேகம் பக்தர்கள் நன்கொடையில்தான் நடக்கிறது. எனவே இந்து விரோதிகளிடம் இருந்து கோவில்களை காப்பாற்ற வேண்டும். இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்தும் தி.மு.க.வின் ஜால்ராவாக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
- சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).
இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
- த.வெ.கவின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரம்.
- எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என தகவல்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என த.வெ.க தலைமை தெரிவித்துள்ளது.
த.வெ.கவின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமடைந்துள்ளனர்.
மேலும், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகும் வரை த.வெ.க தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவுப்பும் வராது என தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்க நிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான்.
- முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது தான் அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கை மிகவும் எளிமையானது; நியாயமானது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்க நிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான்.
ஆனால், மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4,9,13,20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8,15,17,20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுகிறது.
இதனால் 14-ம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-வது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-வது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது. இந்த முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது தான் அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும்.
கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழக அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5,9,11,12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகும்.
- வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தால் என்ன நிலைமை உருவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும் என்றாலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சாதாரண மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தால் என்ன நிலைமை உருவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகும். எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து வெள்ளத் தடுப்புப் பணிகளும் முடிக்கப்பட வேண்டுமென்றும், சென்ற ஆண்டு ஏற்பட்ட நிலைமை இந்த ஆண்டு ஏற்படக்கூடாது என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பினைக் கருத்தில் கொண்டு, வெள்ளத் தடுப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளையும் முன்கூட்டியே முடித்து, ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடவும், மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடங்களில் பெயர் பலகைகளை வைத்து, அங்குள்ள பள்ளங்களை இரும்பினால் ஆன தட்டிகளை கொண்டு மறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார்.
கோவை:
தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.
அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் மாநில அளவில் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் கார் மூலமாக தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்ற கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்றார்.
அங்கு அவரை அமைச்சர்கள், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பான சிறு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் கோவை வ.உ.சி மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசினார்.
அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார். அங்கு உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான ரூ.481 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த மேம்பாலத்தில் காரிலும் பயணித்தார்.
கோவை மாநகரில் 2 நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கருமத்தம்பட்டி கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சென்றார். அங்கு 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவுசார் நூலகத்தை திறந்து வைத்து, 116 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினையும் ஏற்றி வைத்தார்.
இந்த விழாக்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர மேயர், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் முதலமைச்சர் சென்ற அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து கைகளில் உதய சூரியன் சின்னம், தி.மு.க கொடியை பிடித்தபடி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா நடைபெறும் இடமான அரசு கலைக்கல்லூரி பகுதி, உக்கடம், கணியூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் 3 விழாக்களையும் முடித்துக் கொண்டு பிற்பகலில் கோவை விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக மீண்டும் சென்னை செல்கிறார்.
- பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.
- தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.
இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு கடந்த ஓராண்டு காலமாக துணை வேந்தர் பதவி நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023 இல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கிற அவல நிலை உள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க மூன்று உறுப்பினர் தேடுதல் குழுவை மாநில அரசு நியமித்தது. அதற்கு போட்டியாக தமிழக ஆளுநர் நான்கு உறுப்பினர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக ஆளுநரின் சட்டவிரோத போக்கு காரணமாக சென்னை பல்கலைக் கழக நிர்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள், பொருளாதார பிரச்சினைகள், ஆராய்ச்சி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.
இந்நிலையில் பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டது.
இதற்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என். ரவி இதற்காக தனி தேடுதல் குழுவை அமைத்து அறிவிப்பாணைகளை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர் நியமனம், பல்கலைக் கழக நிர்வாகம் ஆகிய விவகாரங்களில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
எனவே, சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்கிற ஆளுநர், மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்திற்கு தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழக கவர்னரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






