என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
- படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகும்.
- வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தால் என்ன நிலைமை உருவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும் என்றாலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சாதாரண மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தால் என்ன நிலைமை உருவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகும். எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து வெள்ளத் தடுப்புப் பணிகளும் முடிக்கப்பட வேண்டுமென்றும், சென்ற ஆண்டு ஏற்பட்ட நிலைமை இந்த ஆண்டு ஏற்படக்கூடாது என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பினைக் கருத்தில் கொண்டு, வெள்ளத் தடுப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளையும் முன்கூட்டியே முடித்து, ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடவும், மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடங்களில் பெயர் பலகைகளை வைத்து, அங்குள்ள பள்ளங்களை இரும்பினால் ஆன தட்டிகளை கொண்டு மறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






