என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றவர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம் பட்டி அருகே தெற்கு விசுவாம்பாள் சமுத்திரம் குடித்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 55), விவசாயி. இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

    வீட்டை ஒட்டி உள்ள தாழ்வாரப் பகுதியில் பசுக்களையும் கன்றுகளையும் கத்தி பராமரித்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டின் தாழ்வார பகுதியில் கட்டியிருந்த கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றவர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு குழுவினர் சங்கப் பிள்ளை தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பாம்பு, காப்பு காட்டு பகுதியில் விடப்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் மழையால் ஐயாற்றுப் நீரோட்டம் வழியாக கொல்லிமலை பகுதியில் இருந்து மலை பாம்பு வந்திருக்கலாம் எனவும், தொழுவப் பகுதியில் கட்டி இருந்த பசுங்கன்றை விழுங்க வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் பகுதி நேற்று நள்ளிரவு வரை பரபரப்பாக காணப்பட்டது.

    • வெற்றி சாதாரண வெற்றி இல்லை, சாதாரண மாகவும் கிடைத்து விடவில்லை.
    • 2026 தேர்தலுக்கு களப்பணிகளை தொடங்க வேண்டும்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை), காலை, சென்னை, கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர்களுக்கும்-தலைமைக் கழக நிர்வாகி களுக்கும் எனது பாராட்டுகளையும்-வாழ்த்துகளையும்-மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த நன்றியை உங்கள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டரின் இதயத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை; சாதாரண மாகவும் இது கிடைத்து விடவில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்த லில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை.

    இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, உங்களது செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நூலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். அதை பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டு உள்ளார். பொதுச்செய லாளருக்கும், பொருளாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நமது உழைப்பையும் வெற்றியையும் பதிவு செய்யும் ஆவணங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய எல்லா செயல்பாடுகளையும் இந்த நூலில் முழுமையாக தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

    உங்கள் மாவட்டங்களில் இயங்கும் கழகம் சார்ந்த நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இந்த புத்தகத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம்.

    சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் நம்முடைய கழக ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க வேண்டும்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கி றோம்.

    மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டா லும் அந்த வீட்டில் ஒருவ ராவது பயனடையும் வகை யில்தான் திட்டங்கள் தீட்டப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.

    நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ந் தேதி இரவு அமெரிக்கா விற்குப் புறப்பட இருக்கி றேன். தீர்மானத்தில் சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும்.

    நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதை யெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.

    நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கழகத்தின் சார்பிலும் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தி ருக்கிறோம். நாளை மறுநாள் தலைவர் கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது.

    அதில் நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படி சிறப்புகள் செய்யப்பட்டது இல்லை என்ற அளவிற்கு கொண்டாடி இருக்கிறோம்.

    இதன் தொடர்ச்சியாக, வரும் முப்பெரும் விழாவில் கழகத்தின் பவள விழா நிறைவும் தீர்மானத்தில் சொன்னபடி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும்.

    கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவிலேயே முதன்முத லாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! அந்த வரலாற்றை எழுதியது நாம்தான்.

    கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில்-கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கி றோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய பெருமை.

    75 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஆலமரமாக இந்த இயக்கம் வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, கோடிக்க ணக்கானவர்களின் உழைப்பும் தியாகமும் உர மாக்கப்பட்டிருக்கிறது. அதன் பயனைத்தான் இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம்.

    அதேமாதிரி, இந்த இயக்கத்தை அடுத்த டுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது. அதற்கான உழைப்பை வழங்க உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்கள் ரத்து.
    • 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    தாம்பரம் ரெயில்வே யார்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் சில விரைவு ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் சில வெளி மாநில ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

    எனவே இந்த ரெயில்களின் மாற்றங்கள், புறப்படும் இடம், நேரம் பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த உதவி எண்கள் வருமாறு:-

    044-25354995, 044-25354151 இந்த எண்களில் 24 மணிநேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை இந்த உதவி எண்கள் செயல்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • ஒன்றிய அரசு ரெயில்வே திட்டங்களில் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.
    • தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலை மையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் ஒன்றுகூட இல்லாதது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர்கள், தமிழ்நாட்டை வஞ்சித்தார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, திருக்குறள் சொல்லுவார்.

    இப்போது திருக்குறள் மட்டுமல்ல, தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே பட்ஜெட்டில் இடம்பெறாமல் பார்த்துக் கொண் டார்கள். இதனைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

    பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரெயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.

    பாராளு மன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரெயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில் தான் தமிழ்நாட்டு ரெயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டி ருக்கிறது.

    பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டதுமே ரெயில்வே பிங்க் புத்தகம் அவையில் வைக்கப்பட்டுவிடும். இது காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஏனோ பின்பற்றவில்லை.

    பட்ஜெட் கூட்டத்தொடர் முடித்த பிறகு பிங்க் புத்தகம் வெளியிட்டிருப்பதே இவர்களின் சதியை வெளிக்காட்டி இருக்கிறது.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரெயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்து.

    ஆனால், இப்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகையை 301 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டார்கள். அதாவது மூன்றில் ஒரு பகுதியாக்கி விட்டார்கள்.

    இரட்டைப்பாதை திட்டங்களுக்குத் தேர்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 2,214 கோடி ரூபாய் இப்போது 1,928 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்கள்.

    புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    சென்னை-மாமல்ல புரம்-கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.

    திருப்பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி லைனுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதுரை-அருப்புக் கோட்டை-தூத்துக்குடிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் 18 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு.

    புதிய ரெயில்வே திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிதியைப் பெருமளவில் குறைத்தது இதுவரை ரெயில்வே துறையில் நடக்காத ஒன்று.

    புயலால் அழிந்து போன தனுஷ்கோடி ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கு வதற்காக 2019 பாராளு மன்றத் தேர்தல் நேரத்தில் 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த பொதுத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.

    ஆனால், திட்டம் இன்னும் வரவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையும் இப்போது 56 லட்சம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள்.

    பிரதமர் அடிக்கல் நாட்டிய வெறும் 17 கிலோ மீட்டர் தூர இந்த ரெயில் பாதை யைக் கூட முடிக்காதவர்கள், எப்படி பெரும் ரெயில்வே திட்டங்களை முடிப்பார்கள்?

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் புதிய ரெயில் முனையம் அமையப் போகிறது என சொன்னீர்களே… அவை யெல்லாம் என்ன ஆகும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ததன் மூலம் ரெயில்வே துறைக்குக் கிடைத்த 1,229 கோடி ரூபாய் வருவாய் எல்லாம் எங்கே போனது?

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமான மெட்ரோ ரெயில் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்காமல் வஞ்சித்தனர். 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

    இதுபற்றி மக்களவையில் தி.மு.க எழுப்பிய கேள்விக்கு, ''சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டிப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. எனவே, அதற்கான செலவுகளை தமிழ்நாடு அரசே செய்கிறது'' என்ற அதிர்ச்சி பதிலைத் தந்தார்கள்.

    ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்கள். ஆனால், மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அதுகூட இல்லை என கையை விரித்து விட்டார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம் அளித்திருக்கிறார்கள்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பா.ஜ.க. ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்குக் கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கி றது.

    ஆட்சி அமைக்க வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஒரு அரசு செயல்படும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்க ளிக்காத பெண்களுக்கும் சேர்த்துதான் 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசு செயல்படுத்தி வருகிறது.

    அப்படித்தான் பா.ஜ.க.வுக்கு எம்.பி-க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒன்றிய நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
    • தமிழக பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தில், பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன.

    அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், தி.மு.க. அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வில்லை.

    இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டு உள்ளோம்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பா.ஜ.க. சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தற்போது, நாளை (ஆக. 17-ந் தேதி திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறி இருப்பதால், தமிழக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கை விடப்படுகிறது.

    எனினும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில், தமிழக பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது.
    • நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்ற டையும்.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது.

    நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்ற டையும். மறுமார்க்கமாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடையும்.

    பின்னர், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது.

    பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. *

    • ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று வேகமெடுக்கிறது.
    • சுவீடன் நாட்டில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிய குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டிலும் உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம், அவசர நிலையை அறிவித்துள்ளது.

    இதனையொட்டி தமிழக சுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் "குரங்கம்மை பாதிப்புள்ளவர்கள் என்று யார் மீதாவது சந்தேகம் இருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்."

    "அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணிகளுக்கு வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்."

    "கடந்த 21 நாட்களுக்குள் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களை கண்டறியவும். குரங்கம்மை அறிகுறிகள் இருப்பவர்களை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதற்காக ஏற்பாடுகளை வலுப்படுத்தவும்."

    "யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால், அதுகுறித்து அவர் பயணித்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனம் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.
    • காணொலி காட்சி வாயிலாக நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கோவை:

    நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.

    திட்டத்தின் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    3 தலைமுறைகளின் கனவுதிட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    3 மாவட்ட மக்களின் 65 ஆண்டு கால கனவாக உள்ள இந்த அத்திக்கடவு-அவினாசி திட்டம் உருவானது பற்றிய விவரம் வருமாறு:-

    பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக நீலகிரியும், கேரளத்தின் அட்டப்பாடி, ஆனைகட்டி போன்ற பகுதிகளும் உள்ளன. இந்தப் பகுதியில் உருவாகி வரும் பவானி ஆறு மீண்டும் தமிழகத்தின் நுழைவுப் பகுதியான அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைப் பகுதியை வந்தடைகிறது.

    பில்லூர் அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும்போது வேகமாக பில்லூர் அணை நிரம்பிவிடுகிறது.

    அணை நிரம்பியதும் பவானி ஆற்றின் வழியே வெளியேறும் நீர் சுமார் 60 கி.மீ தூரம் பயணித்து பவானிசாகர் (கீழ்பவானி) அணையை வந்தடைகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும், கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 25,000 பாசன நிலங்களும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு 15,000 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கீழ்பவானி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து பில்லூர் அணை, கீழ்பவானி அணைகள் நிரம்பியதும் திறக்கப்படும் உபரிநீர் பயனின்றி 75 கி.மீ பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது மொத்தம் 225 கி.மீது தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரக்கூடிய சிற்றாறுகளும் கலக்கின்றன.

    இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அவினாசி, அன்னூர், காரமடை, திருப்பூர், சேவூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று அந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும், பாசன பரப்பை அதிகரிக்கும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.

    காமராஜர் முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்த திட்டத்திற்காக 1957-ம் ஆண்டும் முதன் முதலில் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்பின்னர் பல்வேறு காலகட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பலமுறை முயற்சிகள் எடுத்தும் அது கைகூடவில்லை.

    50 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர், ஈரோடு, கோவையில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்தன.

    குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவினாசியில் பலரும் தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். அதனை தொடர்ந்து அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில் மீண்டும் 2017-ம் ஆண்டு அவினாசியில் ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது.

    அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு இந்த திட்டம் ரூ.1,916.41 கோடி நிதியில் முழுமை அடைந்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவினாசிக்கு நேரில் வந்து அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து 10 மாதங்களில் 1,045 குளம், குட்டைகளின் நீர் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி பணிகள் அதிகார பூர்வமாக தொடங்கப்பட்டன.

    ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை பம்பிங் செய்து நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

    இதற்காக பவானி, நல்ல கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு இந்த நீரேற்று நிலையங்கள் அனைத்திலும் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து இத்திட்டத்திற்கு தேவையான தண்ணீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக வெளியேறி வருவதால், உபரிநீரை அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நீரேற்றம் செய்ய இதுவே சரியான காலகட்டம் என நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

    அதன்படி நாளை 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 958 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

    நிலத்தடி நீரை செறிவூட்டும் இந்த திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன், பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், ஊத்துக்குளி, அவினாசி, திருப்பூர், அன்னூர், சூலூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை ஆகிய 13 ஒன்றியங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    அத்திக்கடவு அவினாசி திட்டமானது தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களில் முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது.

    இதுகுறித்து அத்திக்கடவு-அவினாசி திட்ட செயற்பொறியாளர் நரேந்திரன் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1045 குளங்கள், குட்டைகளில் ஏற்கனவே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பவானி ஆற்றில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் உள்ளது. இந்த திட்டபணிகளை மேற்கொண்டு வரும் எல் அண்டு டி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு இதனை இயக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சில இடங்களில் பிறதுறையினர், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். சில இடங்களில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் குளம், குட்டைகளில் சேகரமாகும் தண்ணீரின் அளவை அறிந்து கொள்ள சென்சார் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவை திருட்டு போய் உள்ளது. சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டு வந்தவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அவை உடனடியாக சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாகர்கோவிலுக்கு செல்லவே ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.
    • தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்றன. அந்த ரெயில்களில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து ஏற வேண்டியவர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணித்தனர்.

    மின்சார ரெயில்களும் பல்லாவரம் வரை இயக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில்களில் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று நினைத்தவர்களாலும் அது முடியவில்லை. எனவே பயணிகள் அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோ, கார்களில் படையெடுத்தனர்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு சென்ற பயணிகளும் அதிக அளவில் சென்றதால் ஜி.எஸ்.டி.ரோடு முழுவதும் வாகன நெரிசலில் சிக்கி திணறியது.

    குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு 2 மணி நேரம் வரை ஆனதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூலித்தார்கள்.

    போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததை காரணம் காட்டி ஆட்டோ டிரைவர்கள் கிளாம்பாக்கத்துக்கு சவாரி வர மறுத்தனர். இதனால் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து பயணித்தார்கள்.

    அரசு பஸ்கள் போதிய அளவில் இல்லாததால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இரவில் வேறு வழியில்லாமல் ஆம்னி பஸ்களை நாடினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலித்தார்கள்.

    வழக்கமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.700 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படும். நேற்று ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

    தனி நபராக சென்றவர்கள் கட்டண உயர்வை கண்டு கொள்ளாமல் பயணித்தார்கள். ஆனால் குடும்பமாக சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டார்கள்.

    நேற்று இரவில் மதுரை செல்லவே ரூ.3,500 கட்டணம் வசூலித்தார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த மாதிரி அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

    செயலிகளில் வெளிப்படையாக வெளியிடப்படும் கட்டணங்கள் அதிகமாக இருந்தால் மட்டும் ஒரு சில பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றார் தஞ்சையை சேர்ந்த பயணி சிதம்பரம்.

    அவர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்ல ரூ.2,500 கொடுத்து டிக்கெட் வாங்கியதாக தெரிவித்தார்.

    • உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்கிடுங்க.
    • கவுன்சிலர் தம்பதி கறிவிருந்த வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    தமிழக விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதனை பொதுவெளியில் கருத்தாக கூறி வருகின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்ற வகையில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த கவுன்சிலர் தம்பதி ஊருக்கே கறிவிருந்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த செல்வி சாத்தையா என்ற கவுன்சிலர் கூறும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக வேண்டியும், ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறோம்," என்றார்.

    மேலும், இந்த தம்பதியின் கறி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் சாலை கள்ளிப்பட்டி பகுதியில் சாலையோரம் பல வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.

    இந்நிலையில் சாலையோரத்தில் உள்ள உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்றனர். அப்போது 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது டேபிள் டிராயரில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கோமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பூட்டி இருந்த உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளுக்கு டிப்டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் வந்தது பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை. அக்கம் பக்கம் பார்த்து நோட்டமிட்டவாறே கடைகளில் அமர்ந்து அடுத்தடுத்து உள்ள 2 கடையின் சட்டர்களையும் இரும்பு கம்பி கொண்டு நெம்பி 2 கடைகளுக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி உள்ளது.

    இந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் பிடித்து கைது செய்வதோடு, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.
    • எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகப்படி அதிமுகவினர் தேர்தல் பணியாற்றி வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.

    பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் திமுக அரசு, மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில்,

    * நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.

    * விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா 5 பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

    * மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காதது, நிதி ஒதுக்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.

    * எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகத்தின்படி உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதாக தீர்மானம் நிறைவேற்றம்.

    * எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகப்படி அதிமுகவினர் தேர்தல் பணியாற்றி வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×