என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu Railway Project"
- தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
- தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு ரெயில் திட்டங்கள் முடக்கப்பட்டு, நிதி சரண்டர் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய ரெயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே செய்ய ஏன் மாற்றப்பட்டது?" என்று நான் எழுப்பிய கேள்வியின் உண்மை இப்பொழுது வெளியாகியுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பிங்க் புத்தகம் சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் தான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்து விட்டு தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள் என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள்.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நான் விமர்சித்த பின்பும் எவ்வளவு ஒதுக்கீடு என்பதையே மறைத்து வந்தார்கள்? சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இப்போது தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14 தேதி) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்துவிட்டது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே இந்த குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையென்றாகிவிட்டது.
தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் எழுதியுள்ள கடிதத்தில் ரயில்வே வாரியம் 26. 9 .2019 கடிதம் மூலம் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதாகவும் (freeze )அந்த திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த நிதியை திரும்பவும் சரண்டர் செய்வதாகவும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.
திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; அத்திப்பட்டு- புத்தூர் ஆகிய இரு புதிய பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டதாகவும் அதனை விடுவித்தால் தான் (டிஃப்ரீஸ் )பணம் செலவு செய்ய முடியும் என்றும் எனவே இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூபா 42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதியுள்ளார். வேறு சில திட்டங்களை முடக்க பட்டியலில் இருந்து விடுவிக்கவும் கோரி உள்ளார்.
ஈரோடு- பழனி புதிய பாதை திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்த முடியாதது என்றும் அதனை கைவிட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. இதற்காக ஒதுக்கிய 52.135 கோடியை சரண்டர் செய்துள்ளார்கள்.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தையே ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒதுக்கீடு ரூ 55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார்கள்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரி உள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அதற்கான ஒதுக்கீடு ரூபாய் 5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.
அதைப்போல மூன்று இரட்டை பாதை திட்டங்களான காட்பாடி -விழுப்புரம்; சேலம்- கரூர்- திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில் தான் உள்ளன எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே 200 கோடி 100 கோடி 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன் என்று நான் கேட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களையும் ஒன்றிய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதையே தவிர்த்தார்கள்.
தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதை மறைக்க ரயில்வே அமைச்சகம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு சொன்னதை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என கோருகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒன்றிய அரசு ரெயில்வே திட்டங்களில் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.
- தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலை மையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் ஒன்றுகூட இல்லாதது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர்கள், தமிழ்நாட்டை வஞ்சித்தார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, திருக்குறள் சொல்லுவார்.

இப்போது திருக்குறள் மட்டுமல்ல, தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே பட்ஜெட்டில் இடம்பெறாமல் பார்த்துக் கொண் டார்கள். இதனைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரெயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.
பாராளு மன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரெயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில் தான் தமிழ்நாட்டு ரெயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டி ருக்கிறது.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டதுமே ரெயில்வே பிங்க் புத்தகம் அவையில் வைக்கப்பட்டுவிடும். இது காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஏனோ பின்பற்றவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடித்த பிறகு பிங்க் புத்தகம் வெளியிட்டிருப்பதே இவர்களின் சதியை வெளிக்காட்டி இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரெயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்து.
ஆனால், இப்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகையை 301 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டார்கள். அதாவது மூன்றில் ஒரு பகுதியாக்கி விட்டார்கள்.
இரட்டைப்பாதை திட்டங்களுக்குத் தேர்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 2,214 கோடி ரூபாய் இப்போது 1,928 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்கள்.
புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை-மாமல்ல புரம்-கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.
திருப்பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி லைனுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை-அருப்புக் கோட்டை-தூத்துக்குடிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் 18 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு.
புதிய ரெயில்வே திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிதியைப் பெருமளவில் குறைத்தது இதுவரை ரெயில்வே துறையில் நடக்காத ஒன்று.
புயலால் அழிந்து போன தனுஷ்கோடி ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கு வதற்காக 2019 பாராளு மன்றத் தேர்தல் நேரத்தில் 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த பொதுத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.
ஆனால், திட்டம் இன்னும் வரவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையும் இப்போது 56 லட்சம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள்.
பிரதமர் அடிக்கல் நாட்டிய வெறும் 17 கிலோ மீட்டர் தூர இந்த ரெயில் பாதை யைக் கூட முடிக்காதவர்கள், எப்படி பெரும் ரெயில்வே திட்டங்களை முடிப்பார்கள்?
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் புதிய ரெயில் முனையம் அமையப் போகிறது என சொன்னீர்களே… அவை யெல்லாம் என்ன ஆகும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ததன் மூலம் ரெயில்வே துறைக்குக் கிடைத்த 1,229 கோடி ரூபாய் வருவாய் எல்லாம் எங்கே போனது?
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமான மெட்ரோ ரெயில் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்காமல் வஞ்சித்தனர். 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
இதுபற்றி மக்களவையில் தி.மு.க எழுப்பிய கேள்விக்கு, ''சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டிப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. எனவே, அதற்கான செலவுகளை தமிழ்நாடு அரசே செய்கிறது'' என்ற அதிர்ச்சி பதிலைத் தந்தார்கள்.
ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்கள். ஆனால், மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அதுகூட இல்லை என கையை விரித்து விட்டார்கள்.
பா.ஜ.க. கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம் அளித்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பா.ஜ.க. ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்குக் கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கி றது.
ஆட்சி அமைக்க வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஒரு அரசு செயல்படும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்க ளிக்காத பெண்களுக்கும் சேர்த்துதான் 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசு செயல்படுத்தி வருகிறது.
அப்படித்தான் பா.ஜ.க.வுக்கு எம்.பி-க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒன்றிய நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
- கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97% ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 நமோ பாரத் புதிய ரெயில்கள் இயக்க இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ரெயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் தெற்கு ரெயில்வேயில் இணைக்கப்பட உள்ளது.
பாம்பன் ரெயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. பாம்பன் பாலத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. பாலம் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தனுஷ்கோடி ரெயில்வே திட்டம் மத்திய அரசு தரப்பில் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால், மாநில அரசு தரப்பில் அதனை செயல்படுத்த விருப்பப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






