என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
    • தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் 500 நாட்களில் 100 திட்டம் கொண்டு வருவேன் என்று கூறினார்.

    சேலம்:

    சேலம் ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் தி.மு.க. சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம், சென்னையில் வெளியிடப்பட்டடது.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த மத்திய மந்திரி கலந்து கொண்டார். மேலும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது ராகுல்காந்தியை அழைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு ஊழல் நிறைந்த ஆட்சியாக இது இருக்கிறது. அதை மறைக்க மத்திய அரசு தயவு ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது. இதனால் தான் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரியை அழைத்து வெளியிட்டு உள்ளனர். இதைச் சொன்னால் தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் கோபம் வருகிறது.

    தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சி. ஆனால் இந்தியா கூட்டணி கட்சியினரை அழைக்காமல் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியை சேர்ந்தவர்களை அழைத்தது சந்தேமாக உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபற்றி கேட்டால் இது மத்திய அரசு விழா என்று கூறுகின்றனர். அழைப்பிதழில் மாநில அரசு எம்பளம், தலைமை செயலாளர் அழைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இது மாநில அரசு விழாதான். இதைச் சொன்னால் மாநில தலைவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. என்னை வசைபாடுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வந்தபோது அவருக்கு சிறப்பு, புகழ் சேர்க்கும் வகையில் அ.தி.மு.க சர்பில் நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அந்த நாணயத்தை அ.தி.மு.க. தொண்டனாக முதலமைச்சராக அப்போது நான் வெளியிட்டேன். அதை சிறுமைப்படுததி பேசி உள்ளது சிறுபிள்ளைத்தனமானது. எம்.ஜி.ஆர். 3 முறை முதலமைச்சராக இருந்தவர். வரலாறு தெரியாமல் பா.ஜனதா தலைவர் பேசுகிறார். எனக்கு தெரிந்து அவர் 1984-ல் தான் பிறந்துள்ளார். அவர் பிறப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பாரத ரத்னா விருது, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் கொள்கைகள், திட்டங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. உங்கள் தலைவர்கள் யாரும் அப்போது எந்த பதவியிலும் இல்லை. பா.ஜனதாவின் அடையாளத்தை வைத்துதான் நீங்கள் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க. ஊழல் ஆட்சி என்று கூட்டணியில் சேர்ந்து 2021 தேர்தலில் போட்டியிட்டு சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தபோது தெரியவில்லையா? மசோதா நிறைவேற்ற ஆதரவு தேவைப்படும் போது தெரியவில்லையா? கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 168 கோடியாக அதிகரித்து உள்ளது. அப்படி என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள்.

    தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் 500 நாட்களில் 100 திட்டம் கொண்டு வருவேன் என்று கூறினார். அப்படி என்ன திட்டத்தை கொண்டு வந்தார். அவர் பேசுவதெல்லாம் பொய். அ.தி.மு.க. 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்று பல விருதுகள் பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். கால்நடை பூங்கா பூட்டியே கிடக்கிறது. ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்ததை ரஜினிகாந்த் வெளிப்படையாகவே பேசி உள்ளார். அதை வரவேற்கிறேன். தி.மு.க.-பா.ஜனதா வெளியே எதிரியாகவும், உள்ளே உறவாகவும் உள்ளனர். ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர். அதனால் தலை, கால் புரியாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு முதலீடு வாய். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயலுக்கு எந்த நிவாரணமும் வாங்கி தரவில்லை. அ.தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தாலும் மாநில உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறோம்.

    • ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (15), பிரேம் குமார் (14) ஆழமாஜ பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினர்.

    ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.
    • கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சக்திவேல் (வயது 31). டிப்ளமோ பட்டதாரி.

    இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சக்திவேல் கடையத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி சக்திவேல் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி ரூ. 6 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன்(வயது 45). இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஷாப்பிங், பாத்திரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் முதல் தளத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 22-ந்தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை ஆரோக்கிய ரெமன் கடையை திறந்தபோது கடையின் மாடியில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அடகு கடையில் லாக்கரில் வைத்திருந்த 278 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் பிரசன்ன குமார் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அந்த கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சென்று, அதன் அருகே இருந்த கடையின் காம்பவுண்டு சுவரில் ஏறி, கொள்ளை நடந்த கடையின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடையின் அமைப்பை பற்றி முழுமையாக தெரிந்த உள்ளூர் நபர்களின் உதவியுடன் வெளியில் இருந்து வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் பஜார் பகுதியில் இருந்த மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த நபர்கள் 2 பேரும் கொள்ளை நடந்த கடை முன்பு சிறிது நேரம் நின்று விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.

    போலீசார் சந்தேகம் அடைந்த அந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் தொடர்ந்து ஒரு காரும் செல்கிறது. அந்த கார் சென்ற திசையை நோக்கி தனிப்படையினரும் சென்று வருகின்றனர். அந்த கார் செல்லும் பாதையில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து கார் செல்கிறது. இதனால் கொள்ளை அடித்த நகைகளை அந்த காரில் எடுத்துக் கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    அதே நேரத்தில் கேமராவில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்து 2 பேரை போலீசார் சந்தேகத்தில் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதிகளில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் டவர் மூலமாக சோதனை செய்து வருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக 2 பேரை சந்தேகப்படுகிறோம். மேலும் 1 கார், மோட்டார் சைக்கிள் இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் சிக்கிவிடுவார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் சாதாரண டீக்கடைகளில் கூட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி வைத்துள்ளனர். இவ்வளவு நகைகள் உள்ள பகுதியில் பொருத்தப்படாமல் இருக்கிறது. அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். அதுவே அவர்களது உடைமைகளை பாதுகாக்க பெருமளவு உதவும் என்று கூறினர்.

    • ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
    • ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தி வருமாறு:-

    உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை ''கிருஷ்ண ஜெயந்தி'' என்றும்; ''கோகுலாஷ்டமி'' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ''நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை; என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்'' என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

    கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும். அறம் பிறழ்கின்ற போது, நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகா அணைகளில் இருந்து வெளியறே்றப்பட்ட தண்ணீரால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக காவிரி ஆற்றில் குறைந்ததையடுத்து சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக வந்ததால், குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கி சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை என்பதால் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவி மற்றும் ஆற்றுபகுதிகளில் குளித்தும். மீன் சமையலை உண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர்.

    கடந்த வாரங்களில் நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பரிசல் ஓட்டிக்கல் மாசஜ்செய்யும் தொழிலாளர்கள் மீன் சமையல் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

    • இரவு ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது.
    • அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் தனலட்சுமி மில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த இந்த மில் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பூட்டி இருக்கும் இந்த மில் காம்பவுண்டில் ஏராளமான மரங்கள்,செடிகள் வளர்ந்து புதர்க்காடாக மாறி உள்ளது.

    காம்பவுண்டில் உள்ள கட்டிடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. திருப்பூர் மாநகரின் மத்தியில் உள்ள போதும், இந்த மில் காம்பவுண்ட் மட்டும் முழு காடாகவே இருக்கிறது. இதனால் இங்குள்ள மரங்களில் ஏராளமான வவ்வால்கள் கூடுகட்டி வசிக்கின்றன.

    பல்லாயிரக்கணக்கான ராட்சத வவ்வால்கள் பகல் முழுக்க இங்குள்ள மரங்களிலும், கட்டிடங்களிலும் தலைகீழாக அமைதியாக தொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன.

    ஆனால் இரவு தொடங்கினால் ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது. இரவாக தொடங்கும் போதே பெருங்கூச்சலுடன் கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்த ராட்சத வவ்வால்கள் அருகில் உள்ள கொங்கு மெயின்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு படையெடுத்து விடுகின்றன.

    வீடுகளில் உள்ள அறைகள், பார்க்கிங் பகுதிகள், வளாகங்கள் என அனைத்துப்பகுதிகளிலும் சாரைசாரையாக பறந்து வட்டமிடும் இந்த வவ்வால்கள் இந்த பகுதி வீடுகளை எச்சங்களால் நிரப்பி துர்நாற்றம் வீசச் செய்கின்றன.

    மேலும் பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன. மாலை மங்கினாலே பெண்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வாசலுக்கு கூட வர அஞ்சும் அளவுக்கு இந்த பகுதிகளின் நிலை உள்ளது.

    எனவே வவ்வால்களில் எச்சத்தால் குடியிருப்பு பகுதிகள் துர்நாற்றம் வீசுவதுடன், வவ்வால்களால் பரவக்கூடிய நிபா உள்ளிட்ட கொடூரமான வைரஸ் நோய்கள் பரவக்கூடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வவ்வால்களை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
    • திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.

    சென்னை:

    நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை:-

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, அமரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர்.

    நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தி ருக்கும்.


    பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு:-

    விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர். கள்ளங்கபடம் இல்லாத சொக்கத் தங்கம் அவர்.

    யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் எதை பற்றியும் யோசிக்காமல் முதல் ஆளாக வந்து நிற்கும் மனிதநேயம் நிறைந்த தலைவர். அவர் புகழ் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.


    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:-

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜய காந்த். ஈகையும், வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்று கிறேன்.

    இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

    • போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. பல இடங்களில் கஞ்சா போதைக்கு கல்லூரி மாணவர்கள் அடிமையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீசார் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் தருமபுரி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடித்து போலீஸ் நிலைய ஆய்வாளர் கலையரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி, எஸ் எஸ் ஐ முருகன், தலைமை போலீசார் கபில்தேவ், பாரதி, சிவகுரு, விஜயகுமார், உள்ளிட்ட போலீசார் பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட் பின்புறம் சென்று சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கெட்டுகொட்டாய் பகுதியில் கஞ்சா இருக்கும் இடம் தெரிய வரவே போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்ததில் வீட்டிற்கு பின்புறம் 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளி சந்தை அருகே கெட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் தமிழரசன் (25) என்பதும் மற்றும் பாலக்கோடு நகரப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி கடத்தி வரப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சில்லரையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோல் நேற்று முன்தினம் அரூர் அரசு மருத்துவமனை பகுதியில் கஞ்சா பதுக்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு பணிக்கு செல்லாமல் கஞ்சா கடத்தல் செய்து விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என 4 திவ்ய தேச சன்னதிகள் அமைந்துள்ள ஒரே கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்தது.

    இந்தநிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரணவல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

    இந்தநிலையில் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 6 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்கா வலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, பேரகத்தி பட்டர் ரகுராம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

    • தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    பழனி:

    தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.

    பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் முப்பரிமாண பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோவில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் ரசித்தனர்.

    முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    2-ம் நாள் நிகழ்ச்சி முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்படுகிறது.


    2-ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது. இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவை நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்றார்.

    அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்றினார். கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரை நிகழ்த்தினார். சத்தியவேல் முருகனார் சிறப்புரையாற்றினார். மொரிசியஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினர் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    பின்னர் கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.


    2-ம் நாள் நிகழ்ச்சியை காண இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். பக்தர்கள் பலர் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    இன்று இரவு இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் நீதியரசர் வேல்முருகன் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார். பின்னர் இந்து சமய அற

    நிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது.

    மாநாட்டில் இடம்பெற்று உள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 39 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வரை கோவில்களை புனரமைக்கவும், ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு கூட்டத்தை கூட்டி அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு அதனை பழனியில் நடத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் 4 நீதியரசர்கள், அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டனர். பல்வேறு ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழ் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நாங்கள் திட்டமிட்டது 25 ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால் நேற்றைய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 160 முருகன் தொடர்பான புகைப்பட கண்காட்சி, 3டி திரையரங்கம், வி.ஆர். கலையரங்கம், புத்தக கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 1.25 லட்சம் பக்தர்கள் உணவு அருந்தி உள்ளனர்.

    இன்று 2-ம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதீனங்கள், நீதியரசர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2-ம் நாள் மாநாடும் வெற்றி பெறும்.

    கண்காட்சியைப் பொறுத்தவரை பொது மக்கள் பார்வையிட மேலும் 5 நாட்கள் நீடிக்கப்படுகிறது.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது இந்த அரசின் தாரக மந்திரம். இந்த முருகன் மாநாட்டை பொருத்தவரை தமிழக அரசு, இந்து சமய அறநிலைத்துறை இணைந்து நடத்துகின்ற நிகழ்ச்சி. இது அரசியல் சார்பற்ற அரசு விழா. முருக பக்தர்களால் கொண்டாடப்பட கூடிய நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் 16 முருக பக்தர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி.
    • 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சிலை தயாரிப்பு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தெலுங்கு பாளையத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் சக்திவேல் முருகன் என்பவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை கலந்து 2 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது, டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகளை கொண்டு ஏர் கலப்பையுடன் உழவுப்பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம், நந்தி, மான், மயில், குதிரையில் அமர்ந்திருக்கும் விநாயகர், சிவன் சிலையை கையில் உயர்த்தி பிடித்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் புதிய வரவாகும். மாசு ஏற்படுத்தாத வாட்டர் கலர் சிலைக்கு பூசப்படுகிறது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.

    அதிக உயர் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி விழா நெருங்கும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு 2 அடி சிலை ரூ.1000, 3 அடி சிலை ரூ.2500, 4 அடி சிலை ரூ.4 ஆயிரம், 5 அடி சிலை ரூ.6500, 7 அடி சிலை ரூ.11 ஆயிரம், 8 அடி சிலை ரூ.18 ஆயிரம், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×