என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் அஜேஷ் புகார் அளித்திருந்தார்.
- எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி பற்றி அவதூறு பாடல் ஒன்றை பாடினார்.
இது தொடர்பாக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஷ் என்பவர் பட்டாபிராம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை அவமதித்து விட்டதாக சீமான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் அஜேஷ் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க பட்டாபிராம் போலீசுக்கு உத்தரவிட்டது. இதன்படி சீமான் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சி. எஸ்.டி. சட்டப் பிரிவுடன் சேர்ந்து 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.
- பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும்.
- காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை.
ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது 1973-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட 75-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலம் கட்டப்பட்டு இருப்பதால் வரும் 100 ஆண்டுகளுக்கு என் பெயரைச் சொல்லும்.
நான் என்னுடைய தொகுதியை கோவிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில்.
என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதி பெயர் காட்பாடி , காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் போகும். என்னை வளர்த்தவர்கள் நீங்கள் தான்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக கூறினார்.
- ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது.
- கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மக்கள் வரிப் பணத்தில் தரமில்லாத தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.
- 'கொள்ளிடம் பாலம் அருகில், எண்.1 டோல்கேட்' என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நேப்பியர் பாலம் அருகில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாத காலத்திற்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
மக்கள் வரிப் பணத்தில் தரமில்லாத தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. ஆகவே, இந்த தடுப்புச் சுவர் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்ற வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றினை கட்டித்தர தி.மு.க. அரசை வலியுறுத்தியும்,
அ.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.35 மணியளவில், 'கொள்ளிடம் பாலம் அருகில், எண்.1 டோல்கேட்' என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- ரெயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தவிா்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை-பெங்களூரு மற்றும் எழும்பூா்-நாகா்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில்கள் இன்று (31-ந் தேதி) முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்தது.
ரெயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ரெயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அதேசமயம், சென்னை சென்ட்ரலில் இருந்து கவர்னர் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோா் எழும்பூா்-நாகா்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இந்த ரெயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
மதுரையில் இருந்து மத்திய ரெயில்வேதுறை இணை மந்திரி வீ.சோமண்ணா மதுரை-பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்தாா்.
இந்த ரெயில்கள் இன்று தொடங்கப்பட்டாலும் வருகிற 2-ந்தேதி முதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

எழும்பூரில் இருந்து நாகா்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்சிகியூட்டிவ் சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,735, எக்சிகியூட்டிவ் சோ் காா் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிா்ணயக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.
எழும்பூா்-நாகா்கோவில் ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20628) நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.
மதுரை-பெங்களூரு ரெயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20672) பெங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தவிா்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.
- 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது மேலும் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று நள்ளிரவு களிங்கப்பட்டிணம் அருகே விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும. மேலும் வலுவான தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 3-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடைஇடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.
- மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் தொடங்கி உள்ள பார்முலா-4 கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில் கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

மது வகைகளுக்கு செய்யப்படும் இந்த மது விளம்பரமும், அதை கார்பந்தயத்தை நடத்தும் அமைப்பும், தமிழக அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
கடந்த காலங்களில் மட்டைப் பந்து போட்டிகளின் போது மறைமுகமாக மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் சுட்டிக்காட்டி தடுத்திருக்கின்றன. இப்போதும் அதே அக்கறையுடன் தான் மது விளம்பரங்களை சுட்டிக் காட்டுகிறேன். பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா-4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
- வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்திய வீராங்கனை ப்ரித்தி பால் 100 மீ. டி35 ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், 10 மீ. ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கமும் வென்றிருப்பது பெருமைக்குரியது.
கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார்.
சென்னை:
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த "தடம்" பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் விவரம் வருமாறு:-
* திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
* விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை).
* நீலகிரியில் இருந்து தோடா எம்பிராய்டரி சால்.
* பவானியில் இருந்து பவானி ஜமுக்காளம்.
* புலி காட்டில் இருந்து பனை ஓலை ஸ்டாண்ட்.
தமிழ்நாட்டின் கை வினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சி 'தடம்'.
தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்கானவும் உருவாக்கப்பட்டது 'தடம்' திட்டம்.
பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல், கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.
பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம்.
அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது.
'தடம்' திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார்.
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்னை வந்துள்ளார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வரவேற்றார்.
சென்னை:
சென்னை வந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வரவேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
- தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல்.
- மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் ரூ.230 கோடியை குறைத்து விட்டார்கள்.
மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 120 கோடி நாம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1,876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.
இந்த ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 300 கோடி கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர்.
அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை. தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் நாம் அவர்களிடம் கேட்கிறோம்.
பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல. அது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






