என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"
- தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் ரூ.230 கோடியை குறைத்து விட்டார்கள்.
மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 120 கோடி நாம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1,876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.
இந்த ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 300 கோடி கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர்.
அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை. தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் நாம் அவர்களிடம் கேட்கிறோம்.
பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல. அது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?
- மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?
சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






