என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் கண்காணிப்பு.
- 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கோவை:
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்த நிலையில் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை-கேரளா எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
- அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம்.
- அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகாசியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம். ஒரு அறை 2 கழிவறை உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையும் சரி செய்வதில்லை.
இந்த நிலையில் விடுதியை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் கூறி வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் எங்களையும், பெற்றோரையும் தரக்குறைவாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணை என்ற பேரில் குற்றவாளிகளை போல் நடத்தினார்.
இதனால் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- செல்போனில் அவ்வப்போது சத்தமிட்டு 16-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் வங்கி ஊழியர்கள் பேசி உள்ளனர்.
- இன்று காலை சற்று தெளிந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால் பாண்டி (வயது 41). இவரது மனைவி சிவஜோதி (32). இந்த தம்பதியினருக்கு ஜனார்த்தனன் (14) என்ற மகளும், தர்ஷனா (12), தர்ஷிகா (12) என்ற மகள்களும் உள்ளனர். இதில் தர்ஷனா, தர்ஷிகா இருவரும் இரட்டைக் குழந்தைகள். பிள்ளைகள் மூவரும் அருகில் உள்ள கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பால்பாண்டி சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து இரண்டு தனியார் வங்கிகளில் தனது மனைவி சிவஜோதி பெயரில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என கடன் வாங்கி உள்ளனர். அந்த பணத்தில் சிவஜோதி என்ற பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில் ரூ.2,40,000 கடன் பெற்ற தனியார் வங்கிக்கு முறையாக தவணைத்தொகையை செலுத்தவில்லை என கூறி ஊழியர்கள் கடந்த 10-ந்தேதி வீட்டிற்கு வந்து கேட்டுள்ளனர். அப்போது தம்பதியை சரமாரியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செல்போனில் அவ்வப்போது சத்தமிட்டு 16-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் வங்கி ஊழியர்கள் பேசி உள்ளனர். எனவே பணத்தை திரும்ப செலுத்த பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காததால் மனவிரக்தி அடைந்த பால்பாண்டி தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
பின்னர் உரக்கடையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ குருணை மருந்து வாங்கி வந்துள்ளார். நேற்று இரவு சாப்பிட்டு விட்டு கணவன், மனைவி பிள்ளைகள் மூன்று பேர் என 5 பேரும் இரவில் அந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளனர். ஒரு சில விநாடிகளில் அனைவரும் மயங்கினர்.
இன்று காலை சற்று தெளிந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது பால்பாண்டி தனது மகள் வாந்தி எடுப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மற்ற 4 பேரும் வாந்தி எடுத்ததை பார்த்த மருத்துவக்குழுவினர் அவர்களை உடனடியாக உள்நோயாளிகளாக அனுமதித்தனர். அதன்பிறகு டாக்டர்கள் விசாரித்தபோது, கடன் பிரச்சனை காரணமாக 5 பேரும் விஷம் குடித்து விட்டதாக பால்பாண்டி தெரிவித்தார்.
இதனை அடுத்து ஐந்து பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் இருந்த திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வியாபாரத்திற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூறி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவை செல்லும் சாலையில் ஒரு பெரிய கரடி ரோட்டில் நடந்து சென்றது.
- நீலகிரி போக்குவரத்து சாலைகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் நடமாடி வருகின்றன.
ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவை செல்லும் சாலையில் ஒரு பெரிய கரடி ரோட்டில் நடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் செல்போனில் பதிவுசெய்து வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில், யானைகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நடந்து சென்றதால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இது மிகவும் குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் ஒலி எழுப்பினாலும் யானைகள் சாலையை விட்டு வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குமிங்குமாக உலாவந்தன.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகுதான் வாகனஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுடன் தங்களின் வாகனத்தை இயக்கி கோவை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
நீலகிரி போக்குவரத்து சாலைகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது. அவை சாலையில் பல மணி நேரம் நிற்பதால் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் டீசல், பெட்ரோல் விரயமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே நீலகிரி செல்லும் நெடுஞ் சாலைப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, ரோட்டுக்கு வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
- உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
- மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவிட நிகழ்ச்சி, மீன்வள பல்கலைக்கழக பட்டம்ளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாகை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் திருச்சி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்படும் அவர் தஞ்சை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளிக்கு வருகிறார்.
மாலை 5 மணியளவில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் நடக்கும் உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்குள்ள தனியார் ஹோட்டலில் இரவு தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் (புதன் கிழமை) காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் பிரார்த்தனை செய்கிறார். 9.30 மணியளவில் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
கவர்னரின் 2 நாள் பயணத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப் பிரண்டுகள், 25 இன்ஸ்பெக் டர்கள் 6 வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் என மொத்தம் ஆயிரம் போலீசார் நாகை மாவட்டத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.
உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சி நடக்கும் அகஸ்தியன்பள்ளி, மீன்வளப் பல்கலைக்கழகம் உள்பட கவர்னர் கான்வாய் வரும் வழித்தடங்களில், பகு திகளில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
- கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் 20-ந் தேதிக்கு மேல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி 3-வது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கோடை மழை இல்லாமல் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
குறிப்பாக ஏப்ரல்மாதம் முழுக்க வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், அந்தமாதம் முழுவதும் 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெப்பநிலை நீடித்தது. பின்னர் மே மாதத்தில் ஓரிருநாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் வெயில் தாக்கம் காரணமாக அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது.
சேலத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 88 முதல் 92 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. ஆனால் நடப்பு மாதம் தொடக்கத்தில் வெயிலின் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது செப். 1-ந் தேதி 94.7 டிகிரியாக பதிவானது. 2-ந் தேதி 94.2, 3-ந் தேதி 92.8, 4-ந் தேதி 89.6, 5-ந்தேதி 95, 6-ந் தேதி 95.6, 7-ந் தேதி 93, 8-ந்தேதி 93.5, 9-ந் தேதி 94.5, 10-ந் தேதி 96, 11-ந் தேதி 92.5, 12-ந் தேதி 96.9, 13-ந் தேதி 97.1, 14-ந் தேதி 94.5, 15-ந் தேதி 97.2, நேற்று (16-ந்தேதி) 99.4 டிகிரியாக வெப்பநிலை அதிகரித்தது.
கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.
- பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
- பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
- பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன.
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ தமிழ்நாட்டு மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.
நெடுஞ்சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், பாராளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்து உள்ளார்.
- பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
- வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில்,
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடல்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது.
- ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்!
சென்னை:
சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது. இதற்காக மாநாடு போன்ற பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
"நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!"
- எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!
தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!
ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!
இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.
- மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
- இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.
மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.
பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
அதில், மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும் மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த 11ம் தேதி சிறுவனை, மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தாண்டு நினைவு தினத்தில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில், மொத்தம் 1,67,828 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பக்கபலமாக காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'மரம் தங்கசாமியின்ன் நினைவு தினத்தை' முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி, மரங்கள் வளர்ப்பதில் பலருக்கு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.
மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி மாவட்டத்தையே பசுஞ்சோலையாக மாற்றியவர். மேலும் ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல் புரிந்தவர்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் தங்கசாமியின் சுற்றுச்சூழல் பணியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அவரின் நினைவு நாளில் மரக் கன்றுகள் நடும் பணியை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு நினைவு தினத்தில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில், 86 விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, 691 ஏக்கரில் மொத்தம் 1,67,828 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் மரம் தங்கசாமியின் கனவை நிறைவேற்றும் வகையில் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பக்கபலமாக காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
ஈஷா சார்பாக இதுவரை விவசாயிகளுக்கு 11 கோடி மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 1.12 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது, இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 47.35 லட்சம் மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், மசாலா மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி போன்ற பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தொழில்நுட்ப அறிவையும், வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கற்றுக்கொள்கின்றனர்.
வரும் டிசம்பர் 22 அன்று "மரங்களுக்கு இடையே விவசாயம்! மகத்தான வருமானம்!" என்ற சிறப்பு கருத்தரங்கத்தை காவேரி கூக்குரல் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் விவசாயிகள் கலந்துகொண்டு டிம்பர் மரங்களுடன் ஊடுபயிர்களை சாகுபடி செய்யும் உத்திகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் டிம்பர் மரக்கன்றுகளை பெறவும், பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






