என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
- மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர்வர தொடங்கியதால் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 76 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அல்லது கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இனிமேல் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
- பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
- கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவசிலைக்கு டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பா.ம.க. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக்கொண்டுள்ளனர்.
பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் தி.மு.க.செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பா.ம.க. போராடிவருகிறது.
பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை..
1987-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான். கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்.எல்.ஏ.க்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்யவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக்குக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது அளிக்கப்பட்டதோ என அவர் கேள்வி எழுப்பினார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
- நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது.
ஒகேனக்கல்:
தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி கரையோரங்களில் மழையின் காரணமாகவும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கரையோரங்களில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீடித்து வந்தது.
இந்த நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
- விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40).
இவருக்கு மனைவி மற்றும் மாரீஸ்வரி (12), சமீரா (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியில் குடியிருந்து வருகிறார்.
கண்ணன் இன்று காலை தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆண்டாள் (67) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் கிடங்கில் டீசல் ஏற்றுவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி வடக்கு பைபாஸ் சாலையில் உலகம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், மாரீஸ்வரி, சமீரா, ஆண்டாள் ஆகியோர் மீது மோதியது.
இதில் கண்ணன் உள்பட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான கண்ணன் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்து தொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த நெல்லை பத்தமடையை சேர்ந்த கணேசன் என்ற டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.
திருவள்ளூர்:
திருவாலங்காடு அடுத்த மணவூர் ரெயில் நிலையம் அருகே சங்கமித்ரா நகர் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவு பூட்டை உடைத்தார். சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனது கை, காலைகட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.
தகவல் அறிந்ததும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் புட்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பது தெரிந்தது. அவர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கிராமமக்கள் தங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவலாங்காடு போலீஸ் நிலையம் அருகே திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
- தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
- பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும் அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் கலைஞர் விருது-ஜெகத் ரட்சகனுக்கும் பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் ஸ்டாலின் வழங்குகிறார்.

இதேபோல் பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை முதல்வரிடம் இருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார்.
இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு பண முடிப்பு வழங்கப்படுகிறது. மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு இந்த பண முடிப்பு வழங்கப்படுகிறது. விருது மற்றும் பணமுடிப்பை வழங்கியபின் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரிய சாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் வரவேற்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில், தமிழகம் முழுவதில் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இதையடுத்து, நேற்று மாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர்.
இதையடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார். விழா நடைபெறும் வளாகத்தில் 75 ஆண்டு தி.மு.க. வரலாற்றை விளக்கும் 100 அடிகட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை அண்ணா அறிவாலயம், அன்பகம் ஆகிய தி.மு.க. அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்விழா இலச்சினை லேசர் ஒளி விளக்குகளால் ஒளிர்கின்றன.
- தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூக நீதியும், சுயமரியாதையும் தான்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று. சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த நாளில் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டின் இன்றைய இன்றியமையாத் தேவைகள் சமூக நீதியும், சுயமரியாதையும் தான். அவற்றை போதித்தவர் தந்தைப் பெரியார் தான். அவரது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன் சமூக நீதியையும், சுயமரியாதையையும் வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார்.
- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
* முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் தோல்வியை மறைக்கவும், அமெரிக்க பயணத்தை பற்றி மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவும் திருமாவளவன், முதலமைச்சர் இணைந்து நாடகம் நடத்தி உள்ளனர்.
* முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார்.
* தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்.
* விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் முறைகேடாக மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுஜாதா உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்மணி ஆகியோரது தலைமையிலான போலீசார் மங்களம் சாலையில் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடுவம்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மதுவிலக்கு போலீசாரின் விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு (26) மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாபு (55) இருவரும் வஞ்சிபாளையம் ரத்தினபுரி கார்டன் அருகே உள்ள மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து இடுவம்பாளையம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 24 பெட்டிகளில் 1152 மதுபான பாட்டில்கள் மற்றும் 8 பெட்டிகளில் இருந்த 92 பீர் பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். முறைகேடக மது பாட்டில்களை கொண்டு சென்ற கருப்பு மற்றும் பாபுவை கைது செய்தனர்.
இன்று மிலாது நபி பண்டிகையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்புதிருந்த நிலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- முதலமைச்சர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, டி. ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு.
மேயர் பிரியா, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தி.நகர் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு, எழிலன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சேப்பாக்கம் மதன்மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
- எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
- வயதான காலத்தில் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராசு (வயது 74) தனது மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனது மகன்கள் என்னையும், என் மனைவியையும் சரிவர பராமரிக்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம், 2 மாடி வீடு போன்ற சொத்துக்கள் உள்ளன.
எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் மருமகளில் ஒருவர் நாங்கள் கட்டிய வீட்டை எங்களை குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும், எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். வயதான காலத்தில் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர்.
எனவே எனது பெரிய மகனிடம் இருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர வேண்டும். அவ்வாறு மீட்டு தந்தால் 4 மகன்களுக்கு பாகம் பிரிக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் கண்காணிப்பு.
- 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கோவை:
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்த நிலையில் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை-கேரளா எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.






