என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையில் வானம் மேகமூட்டமாக உள்ளதாக வங்கதேசம் பந்து வீச்சு தேர்வு.
- டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என்றார் ரோகித் சர்மா.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் சரியாக 9 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக இந்திய மைதானங்களில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். ஆனால் சென்னையில் இன்று காலை லேசான மழை பெய்தது. மெலும், தற்போது மேகமூட்டமாக உள்ளதால், சூழ்நிலை பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
வங்கதேச ஆடும் லெவன் அணி:-
1. ஷத்மான் இஸ்லாம், 2. ஜகிர் ஹசன், 3. நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (கேப்டன்), 4. மொமினுல் ஹக், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. ஷாஹிப் அல் ஹசன், 7. லிட்டோன் தாஸ், 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. தஸ்கின் அகமது, 10. ஹசன் முகமது, 11. நஹித் ராணா.
இந்தியா ஆடும் லெவன் அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. கே.எல். ராகுல், 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. ஆகாஷ் தீப், 11. முகமது சிராஜ்.
- தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
- சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை கள்ளச்சந்தையில் விற்பனையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.
- தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் போட்டா போட்டி கொண்டு வாங்கினர்.
சென்னை:
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாக்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள், மிகப்பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டு கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, சி.சுப்பிரமணியம், தஞ்சை பெரிய கோவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருக்கு மத்திய அரசு கடந்த மாதம் 18-ந் தேதி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு கவுரவப்படுத்தியது.
அதற்கான விழா சென்னையில் நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொண்டார்.
இது நினைவு நாணயம் என்பதால் புழக்கத்தில் விடப்படாது. ஆனால் அறிவாலயத்தில் இந்த நாணயம் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால் அது விரைவில் தீர்ந்து போனது.
இந்த நிலையில் மத்திய அரசின் https://www.spmcil.com/en/ என்ற இணையதளத்தில் நூற்றாண்டு நினைவு நாணயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் போட்டா போட்டி கொண்டு வாங்கினர். அதனால் அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துவிட்டன.
மொத்தம் 1,500 நாணயங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் அவை உடனே விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அடுத்த வாரம் இந்த கருணாநிதி நினைவு நாணயங்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாகவும் கூறினார். அந்த இணையதளத்தில் ஒரு 100 ரூபாய் நாணயம் ரூ.4,180 மற்றும் ரூ.4,470 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
- ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
- தண்டவாள கொக்கிகளை கழற்றிய நபர்கள் அதனை எங்கும் எடுத்துச் செல்லவில்லை.
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மானாமதுரை-ராமநாதபுரம் ரெயில் பாதையில் பரமக்குடி-சூடியூர் இடையே ரெயில்வே தண்டவாள இணைப்பு கொக்கிகள் (கிளிப்புகள்) கழன்று கிடந்தன.
இந்த சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கடந்த ஒரு வருடத்திற்குள் 18 ரெயில் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து காரைக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து என்ஜினீயரிங் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவரிடம் மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, ரெயில்வே போலீசார் வேறு கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால், மதுரை-ராமேசுவரம் ரெயில், விபத்தில் இருந்து தப்பியது. மேலும், கொக்கிகள் கழற்றப்பட்ட சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் 420 கொக்கிகளும் மாற்றப்பட்டு அந்த பாதையில் வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, வழக்கு விசாரணைக்காக ஒப்பந்த பணியாளர்களிடமும், அந்த பாதையில் ரெயில்களை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக செய்யப்படவில்லை என தெரியவருவதாகவும் கூறினர்.
அதேபோல, கொக்கிகளை கழற்றி இரும்பு கடைகளில் விற்பனை செய்யும் நோக்கத்திலும் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் அல்லது இந்த பணியில் அனுபவம் உள்ளவர்களை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மட்டுமே விசாரணையில் தெரிய வேண்டியுள்ளது.
ஏனெனில், தண்டவாள கொக்கிகளை கழற்றிய நபர்கள் அதனை எங்கும் எடுத்துச் செல்லவில்லை. கழற்றிய இடத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் இடையே ஏதும் பிரச்சனையா, ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு படையை சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரும் தொழில்நுட்ப ரீதியான விசாரணையில் ரெயில்வே போலீசாருக்கு உதவி வருகின்றனர். அத்துடன், அந்த பகுதியை சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் ரெயில்வே போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
- ஜி.பி.முத்து தகாத வார்த்தைகளால் வீதியில் நின்று பேசியதாக கூறப்படுகிறது.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் யூடியூபர் ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும்.
இந்த கோவிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் புரட்டாசி மாத பிறப்பையொட்டி கோவிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து, மகேசை இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது மகேஷ் தரப்புக்கும், ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜி.பி.முத்து தகாத வார்த்தைகளால் வீதியில் நின்று பேசியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்தவர்களில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் மகேஷ் தரப்பினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது.
- குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த 12 ம்தேதி விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால் தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
பின்னர் விசாரணையை இன்றைக்கு (செப்டம்பர் 18ம் தேதி) ஒத்தி வைத்த நீதிபதி, வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடர்பான விபரங்கள் மற்றும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார்.
- க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2001ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.
கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார். க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பிறகு, க.சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
- நா.த.க நிர்வாகி அருணகிரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
- தாக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து ₹20,000 பணம் மற்றும் செல்போனை அருணகிரி பறித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி மதுரையில் தங்கியுளளார். இவர்கள் இருவரையும் பெண்ணின் உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளரும் வழக்கறிஞருமான அருணகிரி என்பவர் தனது நண்பர்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.
மதுரையில் இருந்த சந்தோஷை காரில் கடத்திய அருணகிரி அவரை கொடூரமாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.20,000 பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளார். பின்னர் சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு பெண்ணை அவர்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.
காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறை அருணகிரி, பிரவீன், கார்த்தி ஆகிய 3 பேரை இன்று கைது செய்தது. இவர்கள் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் செப்டம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது.
- அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தனுஷ் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகத்தின் பத்திரிக்கை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
- ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது
நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக ஃபெப்சி செய்தி வெளியிட்டுள்ளதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்த் திரைப்பட உலகில் ஒட்டுமொத்த மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையே நடந்த பலகட்ட பேச்சு வார்த்தைகளில், ஃபெட்சி உட்பட அனைத்து தமிழ் திரையுலக தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு. தென்னிந்திய நடிகர் சங்கம், ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளை, உடனடியாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வழங்கியது.
நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் அவர்கள் விஷயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தனுஷ் அவர்கள் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில் நேற்று (17.09.2024) திடீரென தனுஷ் அவர்கள் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.
ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது.
ஏனெனில் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிப்பட நினைவுபடுத்துகிறோம்.
மேலும் ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு உதாரணமாக, தமிழ்த் திரையுலகின் தொழிலாளிகளுக்கு மிகக் கடுமையான இன்னல்கள் ஏற்படும் எல்லா சூழல்களிலும், அனைவருக்கும் முன்பாக தென்னிந்திய நடிகர் சங்கமே நலத்திட்டங்களையும் முன்னெடுத்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது என்பதை, கொரோனா உள்ளிட்ட காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்த அளப்பரிய உதவிகள் பறைசாற்றும். அதை ஃபெப்சி நிர்வாகமும் மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
ஆகவே உழைக்கும் தொழிலாளிகளை பின்புலமாக நிறுத்தி, ஃபெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாக சித்தரித்துக் கொண்டு, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதைத் தவிர்த்து, அந்த கவனத்தை தங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் நலனில் செலுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை திரைத் தொழிலாளர்கள் மீது உள்ள உண்மையான அக்கறையால் அறிவுறுத்துகிறோம்.
அத்துடன், திரைத்துறையில் பலகாலமாக நிலவும் பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்க முற்படும் ஃபெப்சி நிர்வாகத்தின் இத்தகைய வரம்பு கடந்த செயல்பாடுகளையும் வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கண் கண்டிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.
- அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
- தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி வலியுறுத்தியதால் தற்கொலை செய்துள்ளார் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
- பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
2022 தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்
கட்டாய மதமாற்ற முயற்சியே தற்கொலைக்கு காரணம் என்பதால் பள்ளி நிர்வாகிகளை கைது செய்து பள்ளியை மூட வேண்டும் என பாஜக போராட்டம் நடத்தியது.
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். மாணவி லாவண்யாவின் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக சகாயமேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், "மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று பதிலளித்த சிபிஐ, வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.
மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது" என தெரிவிப்பு தெரிவித்தது.
இறந்துபோன மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.






