search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    செந்தில் பாலாஜி அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
    X

    செந்தில் பாலாஜி அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த 12 ம்தேதி விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால் தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

    பின்னர் விசாரணையை இன்றைக்கு (செப்டம்பர் 18ம் தேதி) ஒத்தி வைத்த நீதிபதி, வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடர்பான விபரங்கள் மற்றும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×