என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பாப்பாங்குளம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு.
இவர் நாகர்கோவில் பகுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உச்சிமகாளி (35). இவர்களுக்கு பழனி சக்தி குமார் (8). இந்திரவேல் (6), பிரேம் ராஜ் (3) என்ற 3 மகன்கள் உள்ளனர். உச்சிமாகாளி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடும்ப செலவுக்காக உச்சிமாகாளி சுய உதவி குழுவில் பணம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாததால் மற்ற குழுக்களிலும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு பணத்தை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த உச்சிமாகாளி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் தனது 3 குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் இன்று காலை அவர்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதனால் அவர்கள் வாந்தி எடுத்தவாறு மயங்கி விழுந்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உச்சிமாகாளி மற்றும் அவரது மகன்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது ஆண் குழந்தை பிரேம்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிறைய இளைஞர்கள், படித்தவர்கள் திமுக பக்கம் திரும்பியுள்ளனர்.
- துரைமுருகன் மீண்டும் இளைஞர்களுக்கு அழைப்பு.
சென்னை:
அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் வலுத்து வருகிறது. எந்த நேரமும் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்கும் நிலையில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்று இளைஞர் அணி நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஏற்கனவே பேசி இருக்கிறார்.
அண்மையில் கலைவானர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசியதால் அவரை துரைமுருகன் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். அதன்பிறகு இருவரும் பரஸ்பரம் சமாதானம் அடைந்துவிட்டனர்.
இதன்பிறகு தனது தொகுதியில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இளைஞர்கள் வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். ஆனாலும் கட்சிக்காக உழைத்து பாடுபட்ட மூத்தவர்களின் உழைப்பையும், தியாகத்தை யும் சிறைக்கு சென்றதையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பவள விழா, முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிலையில் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக மாலை 5.17 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள் திமுக பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களை எல்லாம் நான் வரவேற்கிறேன். காரணம் இளைஞர்கள் வந்தால் தான் இந்த கட்சியை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால், இளைஞர்கள் இயக்கத்துக்கு வரும்போது, கட்சியில் நிலைக்க மன உறுதி வேண்டும்.
மன உறுதி எப்போது வரும் என்றால், நாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை உண்மையானது. இந்த கொள்கைக்காக உழைக்கலாம், தியாகம் செய்யலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். ஆகவே கொள்கையின் அடிப்படையில்தான் இந்த இயக்கத்துக்கு நீங்கள் வரவேண்டும். இந்த கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு.
அந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் புரிய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, "தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று கருதுகிறவன் கட்சியின் ரத்த நாளத்தை போன்றவன், கட்சியால் எனக்கு என்ன லாபம் என்று எண்ணுபவன் கட்சியில் வளரும் புற்றுநோய்க்கு சமமானவன்" என்று கூறியுள்ளார். வரும் நண்பர்களை எல்லாம் மனமார வரவேற்கிறேன்.
எங்களுக்குப்பிறகு இந்த கட்சியை நீ்ங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். எனவே, கொள்கை, உறுதியோடு, மனதிடத்துடன், தியாகத்துடன் எந்த நிலைக்கும் தயார் என்று நினைத்து, வரலாறுகளை படித்துவிட்டு வாருங்கள்.
இது மேனாமினுக்கி கட்சியல்ல, அடித்தளத்தில் உள்ள ஏழை எளியவர்கள், பாட்டாளி தோழர்கள், நெசவாளர்கள் இப்படிப்பட்ட சமுதாயத்துக்காக உழைக்கும் கட்சி. அதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "தி.மு.க.வின் வைரவிழா ஆண்டை கொண்டாடவும், எங்களை வழிநடத்தவும் நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்.
உங்களுக்கும், மேடையில் உள்ள தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா? பேராசிரியரைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை. பேராசிரியர் பெரிய மனதுடன் தலைவரை துணை முதல்வராக அன்று ஏற்றுக் கொண்டார். நாங்களும் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்?" என்று பேசினார்.
இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய அரசு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும், படகுகளையும் மீட்க வேண்டும்.
- மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்களை அபராதம் இல்லாமல் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை இலங்கை அரசிடம் கண்டித்து, இது போன்ற செயல்கள் இனி தொடரக்கூடாது என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும், படகுகளையும் மீட்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது.
- போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற தகவல் தவறு.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதயாவது:-
பல்வேறு கோவில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் அவமதிக்கப்படுவதாகவும், அவர்களை தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்ளவைப்பதும், அதை ஊக்குவிப்பதும் கண்டிக்கதக்கது. நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 அர்ச்சகர்களை அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் அவமரியாதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளும் பரம்பரை அர்ச்சர்களுடன் இணைந்து அவமானப்படுத்தப்படுவதாக கூறுகின்றனர்.
அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்குவந்தது. இத்திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர், பெரியாரின் நெஞ்சில் தைக்கப்பட்ட முள் நீக்கப்பட்டது என்றார். ஆனால் நடைமுறை வேறு. நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் கருவறையில் அர்ச்சனை செய்யலாம் என அறிவித்து இருக்கலாம். இது குறித்த புகார்மீது நடவடிக்கை இல்லை. இதற்கு காரணம் பரம்பரை அர்ச்சகரை கண்டு அஞ்சுவதுதான். இதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியுள்ளது தி.மு.க. அரசு.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படுமா என்ற கேள்விக்கு உள்துறை மந்திரி இது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்று கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் வரவேற்கதக்கது.
தமிழகத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. 1972-ம் ஆண்டு முந்தைய தலைமுறை மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. அடுத்து வந்த 52 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் மது ஆறாக ஓடி 3 தலைமுறைகளை பாதித்துள்ளது. கஞ்சா வணிகம் குறித்த அனைத்து உண்மைகளும் அரசுக்கு தெரியும் என்றாலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற தகவல் தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் பேர் தவிர அனைவரும் உடந்தை. இந்த அதிகாரிகளுக்கு இந்த உத்யோகம் தேவையா?
டி.என்.பி.எஸ்.சி. குருப் 4 போட்டித்தேர்வில் 6,244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் காலி பணியிடங்கள் 480 உயர்த்தி இருப்பது போதுமானது இல்லை. தமிழகத்தில் 6 லட்சம் பணியிடங்களில் 2 லட்சம் பணியிடங்கள் குருப் 4 வகையை சேர்ந்தவையாகும்.
எனவே குருப் 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்தவேண்டும். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ .2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் அத்தொகை வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல.
மகளிர் உரிமை தொகை வழங்க இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் நகர்புறப்பகுதிகளில் 6 சதவீத சொத்துவரி உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. மேலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சொத்துவரி உயர்த்தப்பட்டால் பா.ம.க. மாபெரும் போராட்டத்தை நடத்தும்.
ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சிக்கல்கள், சந்தேகங்களை மத்திய அரசு போக்கவேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து பரிசீலிக்கவேண்டும். திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு ஓமந்தூரார் பெயரை வைக்கவேண்டும்.
இதனை தொடர்ந்து கவுரவத்தலைவர் ஜி.கே .மணி கூறும் போது, தமிழகத்தில் மானாவரி பயிர் வறட்சியில் காய்ந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி 100 டி .எம். சி. தண்ணீர் வீணாய் கடலில் கலந்தது. ஒரு சொட்டு தண்ணீர் வீணாகாமல் தடுப்பணை கட்டவேண்டும் என்றார். அப்போது வன்னியர் சங்கத்தலைவர் பு .தா .அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருச்சி துறையூரில் அரசு முட்டைகளை பயன்படுத்தி வந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகளை விற்றவர் யார், விற்பனை செய்தவர் இந்த ஓட்டலுக்கு மட்டும் தான் விற்றார்களா? இல்லை வேறு ஓட்டலுக்கும் விற்பனை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டல் உரிமையாளரிடம் அரசு முட்டைகளை அவருக்கு விற்றது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
- தி.மு.க, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் பலம் பொருந்திய கட்சிகள்.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
அ.தி.மு.க.வில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சி தலைவர்களும் காய் நகர்த்தி வருகிறார்கள். தாங்கள் தற்போது இருக்கும் கட்சிக ளில் சரியான வாய்ப்பு கிடைக்காதவர்களும், ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பவர்களும் மாற்றுக் கட்சிகளில் சேரலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே பலம் பொருந்திய கட்சிகளாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த 2 கட்சிகளிலுமே சேருவதற்கு அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அ.தி.மு.க. வில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் போய் சேர்ந்த அவருக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் அவர் இணைந்துள்ளார்.

திருநாவுக்கரசர்- நயினார் நாகேந்திரன்
அவரது வழியை பின் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன் இருவரும் தாய் கழகமான அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்க வேண் டியதை பலரும் திட்டமிட்டு தடுத்துவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். தற்போதும் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியிலேயே இருக்கும் அவர் அ.தி.மு.க.வில் மீண்டும் சேரப் போவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோன்று பா.ஜனதாவில் துணை தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியை தனக்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்.
நீண்ட நாட்களாகவே அவருக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் பா.ஜ.க. தலைமையோ நயினார் நாகேந்திரனுக்கு இதுவரை தலைமை பதவியை வழங்கவில்லை.

அதே நேரத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த பிறகும் அ.தி.மு.க. தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் தாய் கட்சியான அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற அவர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்ட போது, கட்சி மாறப் போவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன்.
இவர் கப்பல்வாடியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவன் நேற்று மாலை சக்கில்நத்தம் கிராமத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவருது மாந்தோப்பில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
இதனால் அங்கு சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்படடோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் 6 மணி நேரம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் டி.எஸ்.பி. முரளி கிராம மக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து மாந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் உடலை கைப்பற்றிய பர்கூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மாந்தோப்பு பகுதிகளில் தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு யாராவது சிறுவனை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரேத பரிசோதனையில் 17 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது.
- மலைப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வரும் மயில்கள் மக்காசோள கதிர்களை தின்று சேதப்படுத்தி சென்றது.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்து ஊராட்சிக்குட்பட்ட பொட்டிநாயக்கம்பட்டியில் நரிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தின் அருகே ஓடையில் 17 மயில்கள் இறந்து கிடப்பதாக கன்னிவாடி வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில், வனவர்கள் அய்யப்பன், செல்வம், வனக்கப்பாளர் கல்யாணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர்.
அப்போது தோட்டம் மற்றும் ஓடைபகுதியில் 8 ஆண் மயில்கள், 9 பெண் மயில்கள் என 17 மயில்கள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவரை கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில் 17 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மயில்களை விஷம் வைத்து கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விவசாயி முருகன் மயில்களை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வரும் மயில்கள் மக்காசோள கதிர்களை தின்று சேதப்படுத்தி சென்றது. இதனால் கோபமடைந்த விவசாயி முருகன் அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட 17 மயில்கள் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன என்று வனத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விவசாயி முருகனை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் தேசிய பறவையான 17 மயில்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து சக தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
சிவகாசி அருகே உள்ள சிறு குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே உள்ள சேது ராமலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பட்டாசுக்கு பவுடர் செலுத்தும் பணி செய்து கொண்டிருந்த மேலாண் மறைநாடு அருகே உள்ள துரை சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (50) பணி முடிந்ததும் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக குளிப்பதற்கு முன்பாக புகை பிடித்தபோது உடலில் இருந்த பவுடர் கலவை காரணமாக தீப்பிடித்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து விஜயரங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில்,
அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
- யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது.
- வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை அதிகம் நம்பி உள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வனவிலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது. அமராவதி அணை அவற்றுக்கான உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்தது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியது. ஆனாலும் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டதால் வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.
தற்போது யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து காலையில் வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.
இதனால் உடுமலை- மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசாருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது.
- மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நெய்வேலி:
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
என்.எல்.சி. நிர்வாகம் அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் 1 லட்சம் முதல் 4 லட்சம் வழங்குவதாகவும் ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியமான ரூபாய் 20 ஆயிரம் போனஸ் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகம் வழங்குகின்றனர்.
இந்நிலையில் என்.எல்.சி.நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி என்.எல்.சி.ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி தாஸ் தலைமையில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து பேரணியாக என்.எல்.சி.சுரங்க நிர்வாக அலுவலகம் (பீல்டு ஆபீஸ்) நோக்கி சென்றவர்களை போலீசார் வட்டம் 26 தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் எதிரில் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து சத்தியாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக என்.எல்.சி.நிர்வாகம் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
நேற்று இரவு விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை இன்று மதியம் 1 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு என்.எல்.சி. நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னிட்டு நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.






