என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார்.
- உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழக பாஜக தலைமை இன்றி தடுமாறுவதாக கூறப்பட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
* பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார். கட்சியில் ஒரு பிரச்சனையும் இல்லை.
* அண்ணாமலை வரும் வரை பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
* அண்ணாமலை வந்த பின்னர் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.
- இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
- கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன்.
இவரது மகன் சிவபிரகாசம் (வயது47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நேற்று தெருக்கூத்து நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.
இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
இந்த நிலையில் சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் கை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைநதனர்.
இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் மகன், மகள்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
சம்பவ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சிவபிரகாசத்தை மர்மநபர்கள் யாரோ சிலர் கையை கட்டிப்போட்டு அடித்து கொன்று விட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் இழுத்து வந்து புதரின் அருகே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார்.
- குழந்தைகளுக்கான பிரிவில் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் பிரிவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரி பாஸ்கர். ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகித் சோனாலி. இவர்களுக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. லோகித் சோனாலி தனது மகனுக்கு 2 மாதம் முதலே கருப்பு வெள்ளை நிறப்புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை புகைப்படங்களை காண்பித்து சரியாக சொல்லும் பிரிவில் நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதை பார்த்துள்ளார்.
இந்நிலையில் தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார். இதனை நோபல் சாதனை குழுவினருக்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.
இதனை ஆய்வு செய்த நோபல் சாதனை குழுவினர் 3 மாத ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள், காய்கறிகள், எண், வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் குழந்தைகளுக்கான பிரிவில் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் பிரிவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர்.
இது குறித்து குழந்தை தாயார் கூறுகையில்,
குழந்தைகளுக்கு 3 வயது முதல் 6 வயது வரை புகைப்படங்களுக்கான நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு தொடக்கத்தில் இருந்து முறையாக பயிற்சி கொடுத்து வந்தால் அவர்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அத்துடன் குழந்தை வளர்ந்து கல்வி உட்பட அனைத்திலும் அவர்களுக்கு நினைவாற்றல் மிகுந்த உதவியாக இருக்கும் எனவும், இதற்காக 10 தினங்களில் அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து பயிற்சி கொடுத்ததாக தெரிவித்தார்.
- பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- திடீரென நடத்தப்பட்ட கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம்:
தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) , காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது.
தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிகிறது.
திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து வெளியாகி வரும் தகவலால் தான்.
சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இந்த பேச்சு எழ தொடங்கியது.
இதையடுத்து சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவு எடுப்பார்' என்று கூறினார்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.
10 நாட்களில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
- தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழக-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இந்த மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில் 25 டன் வரை எடை உள்ள லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு கொண்ட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுவதே ஆகும் என வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல் முறை நடைமுறைப் படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன்.
- அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம்.
சென்னை:
பா.ஜனதா நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல் முறை நடைமுறைப் படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன்.
இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும், இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு ஐந்தாறு மாத இடைவெளிகளில் ஏதாவது தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் காரணமாக மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்கள் நலன், நாட்டு நலன் என அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் செயல்முறை என்ற அடிப்படையில், போலி தகவல்களை நம்பாமல் மக்கள் சுயமாக சிந்தித்து தங்கள் கருத்துகளை கருத்து கேட்பின் போது பதிவு செய்து, கட்சிப்பாகு பாடின்றி மக்கள் இந்த தேர்தல் செயல்முறையை வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 75 ஆண்டு தி.மு.க. அரசியல் வரலாற்றில் 25 முறை தான் தி.மு.க. ஆட்சி செய்துள்ளது.
- இன்றைக்கு தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் வளையங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணியை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 நாட்களாக பருவ காற்று திசை மாறியதால் இன்றைக்கு மதுரையில் 105 டிகிரி வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள். பருவ திசை மாற்றத்தால் வெயில் கொடுமை ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் நாட்டில் யார் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு வெயிலின் கொதிகலன் போல, தி.மு.க.வில் யார் துணை முதலமைச்சர் என்கிற கொதிகலன் விவாதம் நடைபெற்று வருகிறது.
உதயநிதியை மக்கள் பேசப்பட வைக்க வேண்டும் என்றும், தமிழகம் உதயநிதியை சுற்றுவது போன்ற மாயத்தோற்றத்தையும் உருவாக்கி வருகிறார்கள். முதல் முறையாக எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என்று சினிமாவில் வருவதை போல உருவாக்க நினைக்கிறார்கள். இது ஜனநாயகத்தை அச்சப்படுத்துவது போல் உள்ளது.
75 ஆண்டு தி.மு.க. அரசியல் வரலாற்றில் 25 முறை தான் தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. அண்ணா ஆட்சி உருவாக்கியதை தவிர்த்து மற்றவை எல்லாம் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளனர்.
இன்றைக்கு தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. போதை பொருள் கடத்தும் கேந்திர நிலையமாக தமிழகம் உள்ளது. இதற்கு பதில் சொல்ல உதயநிதி முன்வருவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
- ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
துறையூர்:
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்தல், முன்பருவ கல்வி, சுகாதாரம், தன் சுத்தம், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் மதிய உணவு உடன் இலவசமாக முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்த முட்டைகளை அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து முட்டைகளை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் ஆகியோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவரம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்னர் தாசில்தார் மோகன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் துறையூர் தனியார் ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து இந்த முட்டைகள் ஓட்டலுக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி(58) என்பவர் ஓட்டல் உரிமையாளர் ரத்தினம்(46) என்பவரிடம் முட்டைகளை விற்றுள்ளார்.
இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்தீன் ஜோ துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்? யார் உள்ளனர்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில்' இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையிலான வருகையினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது.
- பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி (வயது 58). இவர்களது மகன் சந்தோஷ், பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ரவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சாந்தி தனது மகனுடன் வசித்து வந்தார். மகன் வேலைக்கு சென்ற பிறகு சாந்தி வீட்டில் தனியாக இருப்பார். இதனால் நேரம் போக வேண்டும் என்பதற்காக வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். பூனைக்கு உணவு வைப்பது, அதனுடன் கொஞ்சுவது என அவர் நேரத்தை செலவிட்டு வந்தார்.
இந்தநிலையில் இரவில் சாந்தி ஒரு அறையிலும், அவரது மகன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டுக்குள் புகுந்தது. அந்த பாம்பை பார்த்ததும் அதனை வீட்டுக்குள் வர விடாமல் பூனை தடுத்தது. ஆனால் பாம்பு தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தது.
சாந்தி படுத்திருந்த அறைக்குள் பாம்பு புகுந்தது. உடனே பூனை, பாம்பை எதிர்த்து போராடியது. பூனையை பார்த்து பாம்பு சீற வர, பூனை அதனை தடுக்க முயன்றது. இதனால் பூனைக்கும், பாம்புக்கும் மோதல் ஆனது. ஒருகட்டத்தில் பூனையின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
வீட்டில் படுத்திருந்த சாந்தியை பாம்பு கடித்தது. இதனால் சாந்தி சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அவரது மகன் ஓடி வந்து பார்த்தார். அப்போது சாந்தியை கடித்த பாம்பு அங்கிருந்து வெளியேறிச் சென்றது. உடனடியாக சாந்தியை மீட்ட அவரது மகன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார். இதுகுறித்து சாந்தியின் மகன் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே பூனை கடித்ததில் பாம்பும் பலியானது.
- கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார்.
- பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெண் உள்பட 2 பேர் வந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானை சந்தித்த அந்த பெண், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், உத்தரபிரதேசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் போலி ஐ.ஏ.எஸ். என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 44) என்பதும், உடந்தையாக வந்தவர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்(42) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிப்காட் போலீசார் மங்கையர்கரசி, ரூபிநாத் ஆகிய 2 பேர் மீதும் அரசு ஊழியர் போல் நடித்து அரசு ஊழியரை ஏமாற்றி பணி செய்ய வைத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ரூபிநாத்தை தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.
இதனிடையே கைதான மங்கையர்கரசி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. மங்கையர்கரசியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்துள்ளார்.
இங்கு சிறிதுகாலம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தாழையூத்து பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வரும் ரூபிநாத், பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு மங்கையர்கரசி சென்றுள்ளார். அப்போது நான் உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டிருந்தேன்.
துப்பாக்கி உரிமம் தொடர்பாக அளித்த மனுவை தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் நான் ஐ.ஏ.எஸ். என்று சொல்லியும் துப்பாக்கி உரிமத்திற்கு ஒவ்வொரு ஆவணங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், உளவுப்பிரிவு போலீசாரிடம் மங்கையர்கரசி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதில் அவர் போலி ஐ.ஏ.எஸ். என தெரியவந்த நிலையில், நேற்று அவர் தூத்துக்குடியில் சிக்கிவிட்டார்.
இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த சம்பவம் தொடர்பாக மங்கையர்கரசி மற்றும் ரூபிநாத் மீது ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார். ஒப்பந்தங்கள் எடுத்தல், பள்ளிக்கு சலுகைகள் பெற்றுக்கொள்ளுதல் என பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
- பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
சென்னை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், மொத்தம் உள்ள 6 வார்டுகளில், 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், பொதுமக்களிடையே கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எவ்விதப் பணிகளையும் செய்து தராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அலைக்கழித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கழக ஆட்சியில், மாடம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சிகளாக இருந்தபோது, குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மாடம்பாக்கம்-சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பெற்று வந்தனர்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
மாடம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் இரவு நேரத்தில் எண்ணற்ற மாடுகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் நலன் கருதி, மாடம்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்திட வேண்டும்.
மாடம்பாக்கம் உள்ளிட்ட தாம்பரம் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தராமல், அவசர கதியில் புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துவிட்டு, அனைத்து விதமான வரிகளையும் பல மடங்கு உயர்த்தி உள்ளதோடு, குடிநீர் இணைப்பே இல்லாத வீடுகளுக்கும் குடிநீர் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
கழக ஆட்சிக் காலத்தில் மாடம்பாக்கம் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால் வகுப்பறைகள் பாழ்பட்டுள்ளதோடு, மழைக் காலத்தில் மாணவ, மாணவியர் வகுப்பறைகளுக்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இருப்பதாகத் தெரிவித்து, இப்பள்ளியில் அனைத்துவித பழுதுகளையும் உடனடியாக சரிசெய்து, கூடுதலாக புதிய வகுப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதிவாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், மக்களை பெருந்துயரத்திற்கு ஆளாக்கி உள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தராத தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதிக் கழகத்தின் சார்பில், 26.9.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், அண்ணாநகர்-மாடம்பாக்கம் பிரதான சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்து உள்ளனர்.
நேற்று இரவும் அந்த பெண்ணும், வாலிபரும் மானாமதுரை நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிகாட்டில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு கும்பல் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்.
பின்னர் அந்த கும்பல் இளம்பெண்ணை அங்கிருந்து கடத்தி வேறு ஒரு இடத்திற்கு சென்றனர். அங்கு இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் அந்த பெண்ணால் முடியவில்லை. அதிகாலை வரை இந்த கொடுமை நிகழ்ந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல் மதுபோதையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துக்குமார் என்பவரை விசாரிக்க சென்றனர். அப்போது அவரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை துரத்தி சென்றனர். தொடர்ந்து முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் முத்துக்குமாரின் வலது காலை நோக்கி சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பில் முத்துக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துக்குமாரை தவிர இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






