என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அருமை சொந்தங்களே... கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள் களத்தில்...
    • ஒரு பூத்தில் குறைந்தது 200 சொந்தங்கள் இணைய வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளார். அதனால் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டள்ள மூத்த தலைவர் எச்.ராஜா கட்சியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டு பெற்றாலும் பெரும்பாலும் கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அண்ணாமலை லண்டனில் இருந்தபடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அன்பு தலைவர்களே... தொண்டர்களே... நண்பர்களே... அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நிச்சயமாக நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கட்சி பணியும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். அருமை சொந்தங்களே... கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள் களத்தில்... பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக... புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக... இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் அன்பான கோரிக்கை... நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு... ஒரு பூத்தில் குறைந்தது 200 சொந்தங்கள் இணைய வேண்டும்.. இது பெரிய இலக்காக இருந்தால் கூட நிச்சயம் நம்மால் செய்து காட்டக்கூடிய இலக்கு. நம்மால் நிச்சயமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய கட்சி தலைமை அளித்திருக்கக்கூடிய இலக்கு. புதியவர்களை இணைக்கும் பணியே தான் நாம் முக்கிய கட்சி பணியாக வைத்திருக்கிறோம். இதனால் வேறு எந்த கட்சி பணியும் செய்யவில்லை. அதனால் இந்த நேரத்தில் இந்த குழுவின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய மூத்த தலைவர் எச்.ராஜா முனைப்போடு செயல்பட்டு வருகிறார். எல்லோரும் அவரோடு கைகோர்த்து களத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • வசந்தகுமார், சிறுவர்களை அழைத்து சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியுள்ளனர்.
    • மனைவியை பிரிந்து சில மாதங்களாக வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    யோகராஜின் மகன்களான யோகித் (5), தர்ஷன் (4) ஆகிய சிறுவர்களை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரான நண்பர் வசந்த குமார் அழைத்து சென்றுள்ளார்.

    வசந்தகுமார், சிறுவர்களை அழைத்து சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகாமையில் இருந்து சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வசந்த குமாரை கைது செய்தனர்.

    மனைவியை பிரிந்து சில மாதங்களாக வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே சிறுவர்களின் உடல்கள் கோவில் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நரபலி முயற்சி நடந்திருக்கலாம் என உறவினர்கள், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

    • பிரபுதேவா நடித்திருக்கும் பேட்ட ராப் படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
    • பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல

    எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

    புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இத்திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் பேசிய பேரரசு, "2,3 வருஷத்துக்கு முன்னாடி "இந்தி தெரியாது போடா"-னு சொல்லுவாங்க, கேட்கும்போது சந்தோஷமா இருந்தது. நிறைய பேர் "இந்தி தெரியாது போடா" அப்படினு டி-சர்ட் போட்டாங்க அதை பார்க்கும்போதும் சந்தோஷமா இருந்தது. இப்போதான் இந்தி தெரியாதது கவலையா போச்சு, பக்கத்துல சன்னி லியோன் உக்காந்துருக்காங்க, 2 வார்த்தை இந்தி-ல பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்" என்று கிண்டலாக பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

    இந்நிலையில், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான பதிவு மற்றும் புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
    • இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார்.

    பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வென்ற மூன்றாது பதக்கம் ஆகும். பாராலிம்பிக்ஸில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்பசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதைத் தொர்ந்து அவர் மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார்.

    இந்த முறை வெண்கலம் வென்றிருந்த நிலையில், அடுத்த பாராலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்வது உறுதி என மாரியப்பன் தங்கவேலு தெரிவித்தார். உடல்நிலை மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்தார். 

    • கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35 )என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில், சிவராமன் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

    இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் சென்னை உயரநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    20 லட்சம் பேர் எழுதியுள்ள இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது. முன்னதாக, இத்தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    • வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அஷ்வின், ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.

    வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் சதமடித்து அசத்தினார். 108 பந்துகளில் சதம் கடந்த அஷ்வின் பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும். 

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் முகமது 4 விக்கெட்டுகளையும்  நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.
    • கிருஷ்ணா நீர் வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    கிருஷ்ணா நீரை, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.

    சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார்.
    • குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

    விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குருமூர்த்திக்கு ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    டிஎன்பிஎஸ்சி மூலம நிரப்பப்படும் பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

    தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது.

    இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×