என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவு.

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 4 பேர் உயிரழிந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று (27.9.2024) காலை 8.00 மணியளவில் சிற்றுந்து ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், திருவில்லிப்புத்தூர் காந்திநகரைச் சேர்ந்த திரு.மாடசாமி (வயது 29) த/பெ. குருசாமி: செல்வன்.வாசுராஜ் (வயது-16) த/பெ.செல்வராஜ்: செல்வன் நிதிஷ்குமார் (வயது 17); ஆகிய இரண்டு மாணவர்கள் மற்றும் செல்வன்.சதிஸ்குமார் (வயது 20) த/பெ.கோவிந்தன் என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் க்றிப்பிட்டுள்ளார்.

    • 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர்.
    • கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர்.

    இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்குடன் அதே ஆண்டு 1-6-2014 அன்று உடப்பன்குளம் கீழ தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 55), கோவை துடியலூரை சேர்ந்த வேணுகோபால்(42), முருகன்(42) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் உடப்பன்குளத்தை சேர்ந்த 25 பேரை வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் கைது செய்தனர். வழக்கு விசாரணை நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, உலக்கன், தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன், பால முருகன், முத்துகிருஷ்ணன், வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீலான சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு நேற்று இரவு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குட்டிராஜ், கண்ணன், மற்றொரு கண்ணன், பாலமுருகன், உலக்கன் ஆகியோருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீல் சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டது. மேலும் 11 பேருக்கும் அபராதங்களும் விதித்து தீர்ப்பளித்த பின்னர் நீதிபதி சுரேஷ் குமார் பேனாவை உடைத்தார்.

    காலையிலேயே தீர்ப்பை வாசித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர். இதனால் மாலையில் அறிவிப்பதாக தீர்ப்பை தள்ளி வைத்தார். தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்கும் என்பதை அறிந்த தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு நேற்று காலையில் திடீரென உயர் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    எனினும் நீதிபதி உத்தரவின்பேரில் அவர்களும் மாலையில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு காலையில் கோர்ட்டுக்கு வராத நிலையில், நீதிபதி உத்தரவின்பேரில் அவரும் மாலையில் நேரில் ஆஜராகினார்.

    இந்த நிலையில் தான் பரபரப்பான தீர்ப்பை வழங்க அவர் தயாரானார். அப்போது புகார்தாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அவர்கள் இன்று நல்லபடியாக தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று விட்டனர். எனவே தீர்ப்பை வாசித்துவிடுமாறு அரசு வக்கீல் கந்தசாமி தெரிவித்தார்.

    ஆனால் வழக்கு தீர்ப்பை அவர்கள் பார்க்கவேண்டும். வீடியோ கால் செய்து பார்க்க செய்யுங்கள். அதன்பின்னர் நெல்லையப்பர் கோவிலில் வந்து சாமி கும்பிட சொல்லுங்கள் என்றார். எனினும் அதற்கான வழிவகை இல்லா காரணத்தினால் தீர்ப்பை வாசிக்க நீதிபதி முடிவு செய்தார்.

    அப்போது குற்றவாளிகள் நீதிபதியை நோக்கி இருகரம் கூப்பியபடி, கதறி அழுதனர். எங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றனர். ஆனால் உங்கள் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு விட்டது. பேசாமல் இருங்கள் என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு புகார் தாரரின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்டணை பெற்றவர்களின் குடும்பத்தினர் கதறி துடித்தனர். தொடர்ந்து கண்ணீருடன் குற்றவாளிகள் இரவோடு இரவாக பாளை மத்தியச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    நெல்லை கோர்ட்டில் ஏற்கனவே 2 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ளது 3-வது தூக்கு தண்டனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு 2-வது கூடுதல் அமர்வு நிதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி அப்துல் காதர் குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகளான சங்கரநாராயணன், செல்லம்மாளுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி நெல்லை பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்தார். தற்போது 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் 150 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரங்கள் அடங்கிய ஆவணத்தை குற்றவாளிகள் 11 பேருக்கும் கோர்ட்டு ஊழியர்கள் வழங்கினர்.

    • தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
    • தெருவிளக்குகள் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் தான்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் கொட்டுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    பொது இடங்களில் குப்பைகளை எரித்தால் இதுவரை ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இனி ரூ.2000 ஆயிரமாக அபராதம் விதிக்கப்படும்.

    வியாபாரிகள் குப்பை தொட்டி அல்லது குப்பை கூடை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    மெரினா, பெசன்ட் நகர், அண்ணாநகர் போன்ற முக்கியமான இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட்டம் முடிந்ததும் அந்த பகுதியை தூய்மை படுத்த வேண்டும். தூய்மைபடுத்தாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்புக்காக பாதுகாவலர்களை பள்ளி தலைமை ஆசிரியர்களே நியமித்துக் கொள்ள வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் உறுப்பினர் கண்ணன் பேசும்போது, பருவமழை நெருங்குவதால் பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத் துறை மூலம் தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    பல சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. அவற்றை உடனடியாக பேட்ச் வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மழைக்காலத்தில் சிரமமாகி விடும். தெருவிளக்குகள் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் தான். பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது என்றார்.

    இதற்கு ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகளை மட்டும் குறிப்பிட்டு பேசினால் அதை நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் என்றார்.

    சொத்துவரியை வருடத்துக்கு 6 சதவீதம் தாமாகவே உயர்த்தி கொள்ளும் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இதை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் சிவராஜ சேகர் வலியுறுத்தினார்.

    அவர் மேலும் பேசும்போது, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மாநகராட்சிகளில் இருப்பது போல் மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இதனால் மேலும் சில உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    • படுகாயம் அடைந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதுரை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மகன் பவனேஷ் (வயது 17). இவர் தனது அம்மா ஞானம், அண்ணன் சுனில் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரி சிவன் கோவிலில் சிற்ப வேலைக்காக சென்றார்.

    பின்னர் கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து அனந்தபுரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல்லை கடந்து மொட்டணம்பட்டி அருகே ரெயில் சென்ற போது எதிர்பாராதமாக நிலை தடுமாறி பவனேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    • விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

    சென்னை:

    அங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    ஆண்கள் அணியும் (ஓபன் பிரிவு) பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்தது.

    செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா (ஓபன் பிரிவு) மற்றும் அவரது சகோதரி வைஷாலி (பெண்கள் பிரிவு) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (ஆண்கள் அணிக்கு விளையாடாத கேப்டன்) அர்ஜூன் கல்யாண் (பெண்கள் அணி பயிற்சியாளர்) ஆகியோரும் இந்திய அணியில் இருந்தனர்.

    இதில் டி.குகேஷ் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும், பிரக்ஞானந்தா முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியில் படித்தவர்கள் ஆவார்கள்.

    செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதித்த குகேஷ், பிரக்ஞானந்தா வைஷாலி மற்றும் ஸ்ரீநாத், அர்ஜூன் கல்யாண் ஆகிய 5 கிராண்ட் மாஸ்டர்களுக்கும் வேலம்மாள் நெக்சஸ் சார்பில் சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல் மோகன், துணைத்தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த பரிசு தொகையை வழங்கினார்கள்.

    விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். குகேஷ் தாயார் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜூன் கல்யாண் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் அரசு பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் 1000 பேருக்கு செஸ்போர்டு வழங்கப்பட்டது. முன்னதாக 5 கிராண்ட் மாஸ்டர்களும் தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

    • போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார்?
    • போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

    போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார்? சூத்ரதாரிகள் யார்-யார்?

    என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறுசிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன?

    தொடர்ந்து இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
    • வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

    நான் விமானத்தில் விமானியாக (பைலட்) பணியாற்றினேன். போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பியதால், நான் பார்த்து வந்த விமானி வேலையை விட்டு விட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன்.

    இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயரான ஆனந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.

    நாங்கள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்தோம். இதனை அறிந்த எனது தந்தை, ஆனந்தராஜை அழைத்து கேட்டார்.

    அதற்கு அவர், தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், தற்போது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    அத்துடன் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் உங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் எனது தந்தையிடம் தெரிவித்தார்.

    இதனை எனது தந்தையும் நம்பினார். அத்துடன் நாங்கள் பழகுவதையும் தடுக்கவில்லை.

    எனது தந்தை கார் வாங்குவதற்காக ரூ.16 லட்சம் வைத்திருந்தார்.

    கார் வாங்குவது தொடர்பாக எனது தந்தை ஆனந்த ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நான் உங்களுக்கு கூடுதலாக பணம் போட்டு வேறு ஒரு புதிய காரை வாங்கி தருவதாக தெரிவித்து, அவரிடம் இருந்த பணத்தையும் வாங்கி கொண்டார். ஆனால் கார் வாங்கி கொடுக்கவில்லை.

    கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ், என்னை அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நானும் அதனை குடித்தேன்.

    அதனை தொடர்ந்து ஆனந்தராஜ் நாம் தான் திருமணம் செய்ய போகிறோமோ இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம் என தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான நான், அதெல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் என மறுத்தேன். ஆனால் ஆனந்தராஜ் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

    மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து, அதனை லேப்-டாப்பிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் அது எனக்கு தெரியாது.

    தொடர்ந்து நான் ஆனந்தராஜை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அத்துடன் என்னை ஜாதியை சொல்லியும் திட்டினார்.

    எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது கற்பழிப்பு, வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

    • அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால்தான் அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
    • சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதம் செய்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியைச் சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில், ஜே.சி.பி. வாகனங்களை வாங்கி விற்பனை செய்தும் வந்துள்ளார்.

    இவர் மனைவி முத்துமாரி (35) நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு குமரன் (8) என்ற மகனும், முருகதனம் (11) என்ற மகளும் உள்ளனர். மாசிக்கு சொந்தமாக பெருமாள் கவுண்டன்பட்டியில் தோட்டம் உள்ளது.

    நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த தொழிலாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் மீண்டும் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டு இருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்க முயன்றனர்.

    இதனால் பயந்து போன மாசி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். தனது பைக்கை அங்கேயே விட்டு விட்டு ஓட முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டினர்.

    இதில் மாசியின் ஒரு கை துண்டாகி கீழே விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாசியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் கொலைக்குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இரவு 11 மணி வரை அவர்கள் அதே இடத்தில் நகராமல் இருந்ததால் பதட்டமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மாசியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அங்கு திரண்டு இருந்தவர்கள் மாசியின் உடலை இங்கேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், திண்டுக்கல் எடுத்துச் செல்லக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால்தான் அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதம் செய்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் வடமதுரை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றும் 2-வது நாளாக தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 30-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
    • மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டிய 3 கோரிக்கைகளை பிரதமரிடம் மனுவாக அளித்துள்ளோம்.

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

    இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார்.

     

    பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

    தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார். பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

    நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி இன்னும் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் நிதியை விடுவிக்க உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பிரதமருடனான சந்திப்பு இனிய சந்திப்பாக அமைந்தது. மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம் தான் உள்ளது.

    * மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டிய 3 கோரிக்கைகளை பிரதமரிடம் மனுவாக அளித்துள்ளோம்.

    * மெட்ரோ 2-வது கட்ட பணிகளுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

    * ஒருங்கிணைந்த கல்வி நிதியையும் உடனடியாக வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

    * மத்திய அரசு 60%, தமிழக அரசு 40% நிதியுடன் இணைந்து செயலாற்றும் கல்வி திட்டத்திற்கான நிதியும் தரப்படவில்லை.

    * மத்திய அரசின் நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

    • காயம் பட்டிருந்த போது சொன்ன வாக்குமூலத்திற்கும் 16 ஆண்டுகளுக்கு பிறகு சொன்ன வாக்குமூலமும் முற்றிலும் மாறுபட்டு இருந்ததை பார்த்து கோர்ட்டே அதிர்ச்சி அடைந்தது.
    • பாதிக்கப்பட்டவரே மாறி விட்டதால் குற்றம் சாட்டப்பட்டவரையும் நிராபராதியாக கருதி விடவேண்டிய சூழல் கோர்ட்டுக்கு ஏற்பட்டது.

    சென்னை, செப்.27-

    பரபரப்பை ஏற்படுத்தும் கொலை வழக்குகளில் கூட சாட்சியங்கள் மாறிவிடுவ தால் குற்றவாளிகள் விடு தலை பெறுவதை கேள்விப் பட்டிருப்போம்.

    ஆனால் பாதிக்கப்பட்ட வரே மாறியதால் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி யாக மாறிய சம்பவம் சென் னையில் அரங்கேறி இருக்கிறது.

    16 ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது கடந்த 2008-ம் ஆண்டு சென்னை எம்.கே.பி.நகரைச் சேர்ந்த இப்ராமின் கனி (39) அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மதன் கால்பந்து விளையாடியபோது பந்து இப்ராமினின் மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் இப்ராமின் மதனை சுற்றி வளைத்து தாக்கி இருக்கி றார்.

    அப்போது பாலகிருஷ் ணன் கெஞ்சி தனது மகனை மீட்டு இருக்கிறார். இப்ரா மின் கனி தனது பைக்கில் இருந்து பெட்ரோலை பிராந்தி பாட்டிலில் நிரப்பி பாலகிருஷ்ணன் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படு கிறது. பலத்த தீக்காயம் அடைந்த பாலகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். அவருக்கு மார்பு, முதுகு மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்களும் ஏற்பட்டு இருந்தது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாலகிருஷ் ணனிடம் இருந்து மரண வாக்கு மூலம் பெற்று கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இப்ராமின் கனி கைது செய்யப்பட்டார். தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. பாலகிருஷ் ணனின் சட்டைப் பையில் இருந்து எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஆதாரமாக இருந்தது.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக மதன் உள்பட 5 பேரை போலீசார் பதிவு செய்து இருந்தனர். வழக்கு விசாரணையின் போது அந்த 5 சாட்சிகளும் பிறள் சாட்சியம் அளித்தனர். இதற்கிடையில் பாதிக்கப் பட்ட பாலகிருஷ்ணனும் குறுக்கு விசாரணையின் போது "அய்யா என் ஆடு திருட்டு போகலை அப்படி கனவுதான் கண்டேன்" என்று சொல்லும் வடிவேலு பட காமெடியை போல் மாறிவிட்டார்.

    அய்யா, நான்தான் குடிபோதையில் இருந்தேன். சட்டைப் பையில் பிராந்தி பாட்டிலை வைத்திருந்தேன். பைக்கின் டயரில் எரிந்த தீப்பொறி பறந்து விழுந்த தில் என் மீதும் தீ பிடித்து கொண்டது என்றார்.

    காயம் பட்டிருந்த போது சொன்ன வாக்குமூலத்திற் கும் 16 ஆண்டுகளுக்கு பிறகு சொன்ன வாக்குமூலமும் முற்றிலும் மாறுபட்டு இருந்ததை பார்த்து கோர்ட்டே அதிர்ச்சி அடைந்தது.

    பாதிக்கப்பட்டவரே மாறி விட்டதால் குற்றம் சாட்டப் பட்டவரையும் நிராபராதி யாக கருதி விடவேண்டிய சூழல் கோர்ட்டுக்கு ஏற்பட்டது. குற்றம் சாட்டப் பட்டவரே குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்த போதும் அரசு தரப்பு சாட்சியங்கள் மாறியது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கோர்ட்டு கூறி உள்ளது. இருப்பினும் வழக்கின் போக்கால் குற்றம் சாட்டப் பட்டவரை கோர்ட்டு விடுவித்தது.

    • காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு
    • இலாகாக்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படும்.

    சென்னை:

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் (2011-ம் ஆண்டு) போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அவரது மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனின் கட்சிக்கு சென்று அதன் பிறகு தி.மு.க.வுக்கு வந்தவர்.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

    இந்தநிலையில் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் டிரைவர்-கண்டக்டர்கள் நியமனத்துக்கு பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

    இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    471 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி மீண்டும் உற்சாகமாகி உள்ளார்.

    அவர் நேற்றிரவு நிருபர்களிடம் கூறும்போது, என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர் கொண்டு மீண்டு வருவேன் என்றும் கூறினார். என் மீது நம்பிக்கை பாசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என்று கூறி இருந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க இருப்பதால் அதில் செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    செந்தில்பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தி மேம்பாடு துறையை தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனித்து வருகிறார்.

    இதேபோல் மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனித்து வருகிறார்.

    செந்தில்பாலாஜி அடுத்தவாரம் அமைச்சராகும் போது இந்த இலாகாக்கள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

    இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகும் போது கூடுதல் இலாகாக்கள் வழங்கப்பட இருப்பதால் அமைச்சர்கள் பலருடைய இலாகாக்களில் பெரும்பாலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

    ×