என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
- ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
திருச்சி:
பாதுகாப்பான பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
நெடுந்தூரம் செல்பவர்கள் பஸ் பயணத்தைவிட ரெயில் பயணத்தை தான் அதிகம் விரும்புவார்கள். அதுவும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி செல்வது தனி சுகம். கூட்டம் நெரிசல் இருந்தால் சிலர் படிகட்டுகள் அருகே அமர்ந்து செல்வதும் உண்டு. அவ்வாறு அமர்ந்து செல்பவர்கள் தங்களது செல்போன்களை பார்த்த படியே செல்கின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் ரெயில் பயணிகளிடம் செல்போன்கள், நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர். இதனால் சிலர் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை பறிகொடுப்பதுடன் அதில் உள்ள முக்கிய ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றனர்.
இது குறித்து ரெயில் பயணிகள் கூறும்போது:
பஸ்சை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று நினைத்து அதிகளவிலான பயணிகள் ரெயிலில் பயணிக்கின்றனர். ஆனால், அவர்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையில், சம்பவங்கள் தொடர்கின்றன.
ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த கும்பல் ரெயில் வந்துநிற்கும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களை குறிவைத்து அவர்கள் அருகில் வந்து நின்று கொள்கிறார்கள். ரெயில் புறப்படும் போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் கிடக்கும் நகைகள், கையில் வைத்திருக்கும் செல்போன்களை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர்.
கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நெல்லை செல்லும் ரெயிலில், திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் ஒருவர், திருச்சிக்கு பயணம் மேற் கொண்டார். இவர் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு தனது மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு வந்தார்.
விழுப்புரம் அருகே வந்த போது ரெயிலின் வேகம் குறைந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கல்லால் அவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் காவலரின் கண், பற்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
இரவு நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
பல ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி இல்லாததால், அதை தங்களுக்கு சாதகமாக மர்ம கும்பல் பயன்படுத்தி கொள்கிறது. இதனால், ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, அரக்கோணம் ரெயில் நிலையங்கள் மற்றும் வேகம் குறைவாக செல்லும் இடங்களில் போதுமான ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை தடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
- பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
- இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி கடந்த 30 ஆண்டுகளாக ஏரி மற்றும் பாசன வாய்க்கால் தூர்ந்து போய் காணப்பட்டது.
மேலும் பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் பருவமழை காலங்களில் தொடர் கனமழை பெய்தால் கூட பாசன வாய்க்கால் வழியாக ஏரிக்கு முறையாக தண்ணீர் வரத்து இன்றி முழு கொள்ளளவை எட்டாமலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகமும் பாசன வாய்க்காலை தூர்வார போதிய நிதி இல்லை என கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கிராம மக்கள், தூர்ந்து போன பாசன வாய்க்காலை மீட்டெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஆதிவராகநல்லூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் ரூ.8 லட்சம் நிதி திரட்டினர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆதிவராகநல்லூர் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூர்வார தொடங்கினர். இதில் தற்போது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்காலை தூர்வாரி, இருகரைகளிலும் மண் கொட்டி பலப்படுத்தி உள்ளனர். மேலும் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களே ஒன்று சேர்ந்து நிதிதிரட்டி பாசன வாய்க்காலை தூர்வாரியதை அறிந்த சுற்று வட்டார பகுதி மக்கள் ஆதிவராகநல்லூர் கிராம மக்களை பாராட்டினர்.
- ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
- வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பட்டாசு ஆலைகள் தேவையான மருந்தை அதகளவில் வாங்கி இருப்பு வைப்பது வழக்கம்.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சாத்தூர் அருகே உள்ள முத்தல் நாயக்கன்பட்டியில் திருமுருகன் என்ற பெயரில் சொந்தமாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூர் உரிமம் பெற்று இந்த ஆலை வளாகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது.
சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் வேலையை முடித்து விட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனால் எழுந்த வெண்ணிற புகைமூட்டம் விண்ணை தொடுமளவுக்கு இருந்தது. அடுத்தடுத்த எழுந்த பயங்கர சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அவர்களால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.
இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணிக்காக முன்னேற்பாடாக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது உராய்வினால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் பட்டாசு ஆலையே அடையாளம் தெரியாத வகையில் தரைமட்ட மாகியது.
சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர், வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். முழுமையாக வெடிகள் வெடித்து பின்பு தான் விபத்து பகுதிக்கு செல்ல முடியும் என்பதால் உயிர்பலி குறித்து உடனடியாக தெரியவில்லை.
- 2025- 26-ம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும்.
சென்னை:
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழகத்தில் 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இதேபோல, 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 75 சதவீதமும் 1,800 சதுர அடிக்கு மேலாக இருந்தால் 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
இதில், சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 2011-ம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதியாக இருந்தால் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்பளவு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுக்கு 100 சதவீதம், 1,801 சதுரடிக்கு மேல் 150 சதவீதம் உயர்த்தப்பட்டது.
உயர்த்தப்பட்ட இந்த சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களைப் பொறுத்து வேறுபட்டது. 2025- 26-ம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று, செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டு காணப்படும்.
குறிப்பாக, இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும். சென்னை மாநகராட்சியில் 6 மாதத்துக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், 2025-26-ம் ஆண்டுக்கான சொத்துவரி அடுத்த மாதம் முதல் கணக்கீடு செய்யப்படும். எனவே, இந்த உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அதற்கு மேயர் பதில் அளித்தார். கவுன்சிலர்கள் பேசும்போது அதிகாரிகள் பலரும் தங்களின் இருக்கையில் இருந்து எழுந்து சென்றனர். 3 அதிகாரிகளை தவிர பெரும்பாலானோர் இருக்கையில் இல்லை. இதனால், அதிருப்தி அடைந்த துணை மேயர் மகேஷ்குமார் அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் காம்தார் நகர் சாலைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டுவது, சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதிய மன்றக்கட்டிடம் கட்ட ஏதுவாக 7 பழைய கட்டிடங்களை இடிப்பது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
- 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில் பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம்:
தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவள விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17-ந்தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அத்துடன் தி.மு.க. ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது.
கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.
அதன்படி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,
மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ், ஆதி தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசி ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற தி.மு.க.வினர் விருப்பத்தை நிறைவேற்றும் முக்கிய அறிவிப்பை, இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பொதுக்கூட்டம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
அத்துடன், 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில்பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள்.
- பாப்பம்மாள் உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்.
1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர்.
1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.
1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.
1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார்.
தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள் அவர்கள்.
பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, "உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!" என்று அவரை வாழ்த்தினேன்.
கழக முப்பெரும் விழாவில், "ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்" என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.
அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்.
என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன.
அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகம் தொடங்கிய காலத்திலேயே உறுப்பினராகி, கழக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்ற கோவை தேக்கம்பட்டியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடி பாப்பம்மாள் பாட்டி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம்.
கழகத்தின் 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி அனைத்து போராட்டங்களிலும் களம் கண்டவர்.
நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- நாய்கள் இனப்பெருக்கத்துக்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
- குட்டிகளை ஈன்ற பெண் நாய்களை, அடுத்த 12 மாதங்களுக்குள் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய வைக்க கூடாது.
சென்னை:
தமிழக அரசு 'நாய் இனப்பெருக்க கொள்கை' ஒன்றை வரையறுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, நாய் இனப்பெருக்க கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை பல்வேறு நிபுணர்களின் கருத்துகளுக்கு பிறகு தற்போது முழுமை பெற்றுள்ளது.
அந்த வகையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 'தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை-2024' நேற்று வெளியிடப்பட்டது.
இதில், நாய்கள் இனப்பெருக்கத்துக்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மரபணு கோளாறுக்கு வழிவகுக்கும் இனப்பெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும், வணிக ரீதியாக நாய்கள் வளர்ப்போர் பெற வேண்டிய உரிமம், நாய் வளர்ப்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்த நாய் இனப்பெருக்க கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த கொள்கையில், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை ஆகிய நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நாய் இனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டை, ராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி நாய், செங்கோட்டை நாய் ஆகிய நாய் இனங்கள் அழிந்துவிடாமல் தடுக்க, அவை அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இந்த நாட்டு நாய்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நாய் விற்பனை உரிமைதாரர்களும், நாய்களின் இனப்பெருக்கம், விற்பனைக்கான உரிமத்தை தங்கள் வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும், குட்டிகளை ஈன்ற பெண் நாய்களை, அடுத்த 12 மாதங்களுக்குள் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய வைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு செயற்கை உடல் அமைப்புகள் வழங்கவும் தடைவிதிக்கப்படுகிறது.
இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் உடல் ஆராக்கிய பிரச்சினைகளை தாங்க முடியாத செட் ஹவுண்ட், பிரெஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், செளசௌ, கீஷோண்ட், நியூபவுண்டிலாட், நார்வே எல்கவுண்ட், திபெத்திய மாஸ்டிப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் வளர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும் என்றும் நாய் இனப்பெருக்க கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
- சிவன்மலை முருகனிடம் பூப்போட்டு கேட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றுமுன்தினம் முதல் புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இந்த கோவிலின் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், இக்கோவிலின் மூலவருக்கு கருணாமூர்த்தி என்ற பெயர் உள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய கூறுவார். அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சாமியிடம் அர்ச்சகர்கள் பூப்போட்டு உத்தரவு கேட்பர். சாமி உத்தரவு கொடுத்தால் அதன் பின்பு உத்தரவு பொருள் மாற்றி வைக்கப்பட்டு பூஜை நடக்கும்.
உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வீரணம் கிராமம் சிவக்குமார் (வயது 30) என்ற பக்தரின் கனவில் சிவப்பு நிற புடவை வைக்க உத்தரவானது. இதையடுத்து சிவன்மலை முருகனிடம் பூப்போட்டு கேட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றுமுன்தினம் முதல் புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஜவுளி விலை, ஜவுளி உற்பத்தியில் மாற்றம் வரும் எனவும், இதன் தாக்கம் போக, போகத்தான் தெரியவரும் என கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
- செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
471 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் நேற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் செந்தில் பாலாஜி உருக்கமாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...
என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.." என குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2021 ஆம் ஆண்டு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடி பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.
விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 100 வயதை கடந்தும் இயயற்கை விவசாயம், ஆரோக்கிய உணவு பழக்கம் என சுறுசுறுப்பாக வலம் வந்தவர் ஆவார்.
சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் தனது வாழ்க்கையை விவசாயத்திற்காக அர்ப்பணித்தார். விவசாயத்தை முறையாக கற்றுக் கொள்ள தமிழக வேளான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராகவும் இருந்தார்.
விவயாசயத்தில் இவர் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கோவையை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த பாப்பம்மாளை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்த போது, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.
- டெல்லியில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
- செந்தில் பாலாஜியுடன் அமைச்சர்களும் உடன் இருந்து முதலமைச்சரை வரவேற்றனர்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.
தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நிலையில், அவர் முதல்வரை சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
செந்தில் பாலாஜி தவிர அமைச்சர்களும் உடன் இருந்து முதலமைச்சரை வரவேற்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






