என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
- சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள கம்பிளி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்(வயது 70). இவரது மனைவி சுடலை மாடத்தி(65). இவர்களது மகன் முருகேசன்(50). பரமசிவனும், சுடலைமாடத்தியும் அதே பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தங்கியிருந்தனர். முருகேசன் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மருமகளுடன் கம்பிளி மெயின்ரோட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் ஒரு விபத்தில் சிக்கியதில் அவருக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது பெற்றோர் வசிக்கும் தோப்பிற்கு சென்ற முருகேசன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் முருகேசன் குடும்பத்தினர் தனது தாத்தா-பாட்டி வசிக்கும் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அங்கு பரமசிவன், முருகேசன், சுடலைமாடத்தி ஆகியோர் குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஆய்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்த சென்று 3 பேர் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலையணையை எடுத்து பார்த்தபோது, அதன் கீழே ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. தாங்கள் இறந்தால் தங்களின் இறுதிச் சடங்கிற்கு செலவு செய்வதற்காக அந்த பணத்தை அவர்கள் விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆய்க்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், மகன் ஆகிய 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதோடு மட்டுமின்றி இறுதிச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் பணத்தையும் விட்டுச் சென்றது அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
- தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்பட 81 பேர் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி, ''தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இணைக்கப்பட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என்று ஐகோர்ட்டு 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் 2017-ம் ஆண்டு உறுதி செய்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து, சுமார் 275 பேரது பணியை நிரந்தரம் செய்தது. இந்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
மாநகராட்சிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ''பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு மனு தாக்கல் செய்து, அந்த மனு நிலுவையில் உள்ளது'' என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ''தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தாலும், ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை.
தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதனால், 3 ஆண்டுகள் தற்காலிக பணியை முடித்துள்ள மனுதாரர்களும் நிரந்தர பணி பெற தகுதியானவர்கள்தான்.
அதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
- அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
- தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. இச்சுரங்கத்தில் இருந்து மொத்தம் 59.88 மில்லியன் டன் அளவுக்கு மோனசைட் உள்ளிட்ட பல்வேறு அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கொண்டு 40 ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க முடியும்.
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசின் சுரங்கத்துறையும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும். மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளன.
இந்தநிலையில் அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். அணுக்க திர்வீச்சு தொடர்பான தீயவிளைவுகளும் ஏற்படும்.
தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்வதுடன், சுற்றுச்சூழல் அனுமதிக்காக நடத்தப்பட விருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம்.
- பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்பூங்காவில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தும் டாடாவின் பணியை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்.
* டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
* ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.
* உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய நிறுவனங்களுக்கும் தமிழகம் தான் முதல் முகவரியாக உள்ளது.
* தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம்.
* தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும்போது உங்களுடன் சேர்ந்து நாங்களும் பெருமைபடுகிறோம்.
* இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் முக்கியமான டாடா நிறுவனம் உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.
* டாடா நிறுவனத்திற்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டு கால தொடர்பு உள்ளது.
* உலகளவில் செயல்படும் டாடா நிறுவனம் தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைவது கூடுதல் மகிழ்ச்சி.
* பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
* எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.
- மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
பெரம்பலூர்:
மக்காச்சோள பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவே. மேலும், இந்தப் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது.
கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில், தற்போது மக்காச்சோளத்துக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.
இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனர். இந்த மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்ட ஆடிப்பட்டத்தில் 1.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
விதைத்து 2 மாதம் ஆகிய பயிர்கள் 2 அடி உயரம்வரை வளர்ந்து விட்டன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போதிய மழை பெய்யாததாலும், வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருந்த காரணத்தாலும் கடந்த ஓரிரு வாரங்களாக மக்காச்சோளப் பயிர்கள் கருகத் தொடங்கின.
இதனால் கவலையடைந்த விவசாயிகள் இனிமேல் மழை பெய்தாலும் மக்காச்சோளப் பயிரைக் காப்பாற்ற முடியாது எனும் சூழலில் வயல்களில் டிராக்டரை உழவு ஓட்டி மக்காச்சோளப் பயிர்களை அழித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயி ஒவர் கூறும்போது,
கை.களத்தூர், காரியனூர், நெற்குணம், பாதாங்கி, மரவநத்தம், பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிர்கள் இவ்வாறு உழவு ஓட்டி அழிக்கப்பட்டன.
மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
- க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு 2 பஸ்களில் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து வந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.
அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பஸ் கவிழ்ந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் கூச்சலிட்டனர்.
இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மற்றொரு பஸ்சில் வந்தவர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் முத்துமாரி, சரண்யா உள்பட 4 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மாணவர்களான சஞ்சனா (வயது 8), ஸ்டெபி (11), கிருஷ்ணரிஷி (13), சுர்ஜித் (9), ஆதிரா (13), அபிஷேக் (13), ஜெர்வின் ஜீனு (11), ரித்திக் (13), லிபிசா (10), ரோசிக் (11), டிரைவர் புரோசன் (30), ஆசிரியைகள் சுகன்யா (30), சரண்யா (38), தங்கம் (53), ஷோபா (36) உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு கிளம்பிய பஸ் டிரைவர் சரிவர தூங்காததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
- லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 1231 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வகையான வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா துறையூர், அகவலம், பெருவளையம் ,நெடும்புலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 470 ஏக்கர் பரப்பில் ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைகிறது.
புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
புதியதாக அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது மக்களுக்கு பிடித்தமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் சொகுசு கார்களை தயாரிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழி ற்சாலையை அமைக்கிறது.
இங்கு எலக்ட்ரிக் சொகுசு கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.இந்த வகையான கார்களுக்கு உதிரி பாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இங்கு அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டு விரைவாக தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் மட்டுமின்றி தொழில் வளர்ச்சியில் புதிய இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி உள்ளதால் அனைத்து தரப்பினரிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம். பி. எம். எல்.ஏ.க்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை யொட்டி வேலூர் சரக டிஐஜி தேவராணி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கிரண் சுருதி, மதிவாணன், ஸ்ரேயா குப்தா ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால், ஆழ்கடலில் இவர்கள் தத்தளித்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூயிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் படகு பழுதடைந்து, கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்து, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமன் தூதரகத்தை தொடர்ப்பு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன்.
அதன்படி அவர்கள் மீட்கப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்களது விசை படகும் இந்தியா வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.
- தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி அ.தி.மு.க. போராட்டம்.
- உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்;
அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி அ.தி.மு.க. புரட்சித்தலைவி பேரவை சார்பில், 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, ''மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், எம்.ஜி.ஆர்.திடலில்'' முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில், கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முடித்து வைப்பார்கள்.
தி.மு.க. அரசைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவில் பணியாற்றி வரும் புரட்சித் தலைவி பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 650 டன் கொண்ட தூக்கு பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை திறந்து மூட இருபுற எடையும் சமமாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தூக்கு பாலத்தில் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த சில நாட்களாக 600 டன் இரும்பு பட்டைகளை அதி நவீன கிரேன் மூலம் ஏற்றும் பணி கடும் சிரமத்திற்கிடையே நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
600 டன் இரும்பு பட்டை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என ரெயில்வே என்ஜீனியர்கள் தெரிவித்தனர். அதன்பின் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.
- தீ விபத்து காரணமாக வான் உயரத்தில் புகை மண்டலம் உருவாகியது.
- தீவிபத்து குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கூத்தனபள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தனியார் தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் யூனிட் பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியது.
இந்த தீ மளமளவென பரவியதால், தொழிற் சாலையில் கெமிக்கல் யூனிட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், அங்கிருந்த பொருட்கள் எரிந்து முழுவதும் நாசமானது.
தீ விபத்து காரணமாக வான் உயரத்தில் புகை மண்டலம் உருவாகியது. முதற்கட்டமாக தீயை அணைக்க தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தொழிலாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அப்போது தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால், தொழிலாளர்களால் அந்த தீயை அணைக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் 2 பணியாளர்களுக்கு மட்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்களை உடனே சக ஊழியர்கள் மீட்டு தொழிற்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக தெரிகிறது.
இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் அதிகாலை ஷிப்ட் முறைப்படி 1500 பணியாளர்களுக்கு பதிலாக 2000 பணியாளர்கள் பணியாற்றியதால், தீவிபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் உட்பட யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கெமிக்கல் யூனிட்டில் தீ விபத்து என்பதால், தீ விபத்தில் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
குறிப்பாக ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை 2-ந்தேதி வருகிறது. இதையொட்டி பக்தர்கள் வருகிற 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறை மற்றும் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருமங்கலம், மதுரை, விருதுநகர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை கோவிலுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. பாலித்தீன் கேரிப்பை மற்றும் மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு வரக்கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 30-ந்தேதி பிரதோஷத்தை முன்னிட்டும், 2-ந்தேதி அமாவாசை அன்றும் சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.






