என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
    • பொதுக்கூட்டத்தில் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

    அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, " மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

    தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, "தேசியக் கட்சிகளுக்கு நிகராக இந்தியாவின் அரசியலை தன்வயப்படுத்தியுள்ள கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்" என்றார்.

    காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியளவில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழி காட்டக் கூடிய அரசியல் கட்சி திமுக. தேர்தல் அரசியலை முன்நிறுத்தி அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால்தான் 75 ஆண்டுகளாக வீரியத்தோடு வெற்றிநடை போடுகிறது.

    திராவிட அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3வது குழல். இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. இருமொழி கொள்கையில் இன்றும் திமுக திடமாக உள்ளது.

    புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து முதல்வர் உறுதியுடன் உள்ளார்.

    சமூக நீதிக்கு இந்தியா முழுவதும் வழிகாட்டும் இயக்கம் திமுக. திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு.

    பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்.. இந்தியாவில் யாரும் சிந்திக்காதது.. நான் அடிக்கடி சிலாகித்துப் பேசுகிற திட்டம் சமத்துவபுரம் திட்டம்..

    எந்தவொரு கூட்டணியும் தேர்தலுக்குப் பின் சிதறிப் போகும்.. ஆனால், இன்றும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • லப்பர் பந்து' திரைப்படம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இதில், கெத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தினேஷ் படத்தில் என்ட்ரி ஆகும்போது விஜயகாந்த்தின் பிரபல பாடல் ஒலிபரப்பப்படும்.

    இந்நிலையில், 'லப்பர் பந்து' திரைப்படம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்திருந்தார்.

    அதில் அவர்," திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து" என்றார்.

    • இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த பிறகு அவர் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்ச்சியான திமுக பவள விழா பொதுக்கூட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு வெளியிட்டுள்ளார்

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி, தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்டிக்காத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .

    புரட்சிக்கரமான கொள்கைகளால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தொண்டனாக கலந்துக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.
    • பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டம் விதிகளை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய் வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதை பதிவு செய்ய வேண்டும்.

    ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.

    பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும்.

    ஒரு சொத்தில் பல குடியிருப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம்.

    ஒவ்வொரு சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

    கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக திட்டமிடல் அதிகாரிகள் சான்றளித்தால், விரிவான மறுவடிவமைப்பு அறிக்கையைத் தயாரிக்க சங்கங்கள் அனுமதிக்கப்படும்.

    மறுவடிவமைப்பு திட்டம் முடிந்ததும், கட்டடத்தை காலி செய்யுமாறு உரிமைாயளர்களுக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்.
    • சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும்.

    ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

    இது தொடர்பாக ஈஷா நிர்வாகி தினேஷ் ராஜா கூறியதாவது:

    சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர் பியூஷ். இந்து கலாச்சாரம், ஆன்மீக மரபுகள் மற்றும் அதை சார்ந்து இயங்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவது தான் இவருடைய முழு நேர தொழிலாக உள்ளது.

    இவர், ஈஷாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    கோவையில் செயல்படும் சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். இந்த உதிரி அமைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு ஈஷாவிற்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்ததும், அவர்களை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, உள்ளூர் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

    பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள வீடியோவில், லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் வணங்கும் ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து மிக கொச்சையாக அவதூறு பரப்பி உள்ளார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் பேசியுள்ள கருத்துக்கள் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.

    இதன் அடுத்தக்கட்டமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஆர்ப்பாட்டம் என பல வழிமுறைகள் மூலமாக மக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    'ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் இயங்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்த உதிரி அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் வழியாக காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவில் கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் முன்னதாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி டிரைவர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்தனர். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சென்னை தி.நகரை சேர்ந்த நவஜோதி (வயது64), சுஜாதா (15), கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஈஸ்வரி (64) காரைக்காலை சேர்ந்த கார்த்திக் (34), மாதவரத்தை சேர்ந்த ஆண்டாள் (60), புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வம் (64) உள்பட 12 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    • போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
    • காரில் கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நிவாப் என்பது தெரியவந்தது.

    அருமனை:

    சமீபகாலமாக தமிழக கேரள எல்லையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதனை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் குமரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு கார் கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் சைகை காட்டியும் நிற்காமல் சென்றது. இதனால் அந்த காரை கேரளா போலீசார் துரத்தி சென்றனர். அப்போது கேரளா வெள்ளறடை தெக்கன்குருசுமலை பகுதியில் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்த 2 மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் போலீசார் மர்மநபர்கள் 2 பேரையும் அவர்கள் விட்டு சென்ற கார் அருகே அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் காரை சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூட்டைகளாக சுமார் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நிவாப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இருவரும் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாசா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம்.

    தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா ? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாசா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், துணை முதலமைச்சர் பதவி அறிவிக்கப்படுமா ? புதிதாக அமைச்சர்களாக யாரேனும் அறிவிக்கப்படுகிறார்களா ? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைக்குமா ? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    அதன்படி, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 20 கோடி ரூபாய் கடன்பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    • தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அனைவரும் மேல்முறையீடு செய்தனர்.

    சென்னை, செப்.28-

    2014-2019ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கே.என்.ராமச் சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமசந்திரன் விண்ணப்பித்துள்ளார்.

    அப்போது, விண்ணப் பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெ ரிக்கா சென்று வர விமான கட்டணமாக 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வா கியாக இருந்த ராமச் சந்திரன் உள்ளிட்டோர் மீது 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

    அதில், அ.தி.மு.க. முன் னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது.

    விமான செலவை லஞ்சமாக பெற்று கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது.

    20 கோடி ரூபாய் கடன்பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கட் டுள்ளது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அனைவரும் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித் தார். முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் சார்பில் வக்கீல் எம்.எப்.சபானா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "லண்டனில் உள்ள மெர்லின் சொகுசு குடியி ருப்பில் வங்கி அதிகாரி தங்கினார். இதற்கு பெருந்தொகை செலுத் தப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. தூதரகம் மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் விவரம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு சரியான பதிலும் லண்டன் குடியிருப்பில் இருந்து வரவில்லை.எனவே அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன், வங்கி அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நம்பும் படியா கவும், ஏற்கும் படியாகவும் இல்லை. அதனால் இவர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்ட னையை அபராதத்தையும் ரத்து செய்கிறேன். இவர்கள் யாராவது சிறையில் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செலுத்திய அபராத தொகையை உடனே திருப்பி கொடுக்க வேண்டும்"என்று தீர்ப்ப ளித்துள்ளார்

    • திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
    • தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்திட வேண்டும்.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் திமுக-வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். 27.9.2024 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒருசில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.

    சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு தீர்மானங்கள் மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியவைகளாகும்.

    * ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு. (சொத்து வரி உயர்த்தப்படும்போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது.

    * மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது.

    "பூமியில் பிறந்த மனிதன் நிம்மதி பெறுவது அவன் அடக்கம் ஆகும் போதுதான், பெரும் துயரம் கொள்வது உடனிருந்தவர்கள் காலமாகும்போது" என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் மனித வாழ்க்கை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம். தனியாருக்கு சம்பள உயர்வு என்பது அந்தத் தனியார் நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. ஆண்டுதோறும் சம்பள உயர்வு நிலையானதல்ல.

    அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம்தான் சம்பள உயர்வு. ஆனால், ஏற்கெனவே 100 சதவீதம் மின்கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்துள்ள ஸ்டானின் திமுக அரசு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன்மூலம் வரி, கழிவு நீர் அகற்றல் வரி என்று அனைத்து வரிகளும், சொத்து வரி உயர்வுக்கேற்ப தானாகவே உயர்த்தப்பட்டுவிடும். இத்துடன் குப்பைகள் அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொந்த வீடு, வணிக வளாகம் செய்பவர்கள் மட்டுமல்ல, வாடகைக்கு உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் தினசரி வாழ்க்கையையே தட்டுத் தடுமாறி நடத்திக்கொண்டிருக்கும் 90 சதவீத சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.

    இன்றைய சென்னை மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என்று காணப்படும் சென்னை மாநகராட்சி, இனி ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரியை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அரசின் சேவைகளில், பணிகளில் ஒருசிலவற்றை தனியார்மயமாக்குதல் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், வியாபார நோக்கில் மயானத்தை தனியார்மயமாக்கல் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இறப்பிற்குப் பின் நிம்மதியாக அடக்கம் செய்யப்படுவதை சேவையாகக் கருதி, அரசு மயானங்கள் தண்ணீர் வசதி, நவீன எரியூட்டுக் கூடம் போன்ற வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளை குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால், ஸ்டாலினின் திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது.

    மேலும், மயானத் தொகை வரைவோலை (DD) மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உறவுகள் மறைந்த 3 துக்கத்தில் இருப்பவர்கள் வரைவோலை எடுக்க வங்கிக்கு போய் வரிசையில் நிற்க வேண்டும்; ஆன்லைனில் செலுத்த இ-சேவை மையத்தை நாட வேண்டும் என்பது திராவக மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

    சென்னை மாநகராட்சியில் தற்போது பணிபுரிந்துவரும் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் 2007-2008ஆம் ஆண்டுகளில், அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்பு நடந்த 10 ஆண்டுகால அம்மாவின் அரசுகளில், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அந்நிறுவனம் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்தில் அண்டை மாநிலம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆட்களை நியமிக்க உள்ளதாகவும், இதை எதிர்த்து சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று போன்ற காலகட்டங்களில் தினசரி தூய்மைப் பணிகளை மேற்கொண்ட, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை ஸ்டானின் திமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று முறை மின்கட்டண உயர்வு, 100 சதவீதம் சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, பால் பொருட்கள் விலை பல தடவை உயர்வு, அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடந்த மார்ச் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படாமை என்று மக்கள் கடுமையான காலக்கட்டத்தில் வாழ்க்கை நடத்திவரும் வேளையில், சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வையும், மயான பூமியை தனியார் மயமாக்கும் தீர்மானத்தையும் உடனடியாக திரும்பப் பெறவும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடவும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர்.
    • வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    துபாயை சேர்ந்த முகமது யூசுப், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் என் மனைவி இந்தியாவில் இருந்தார். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் என் மனைவியை சந்தித்து வெளிநாடுகளில் செயல்படும் தங்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதை நம்பிய என் மனைவி, பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் ரூ.10 கோடி வரை செலுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியதை போல பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மோசடி நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்பாவி பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர். அந்த சொத்துகளை முடக்கவும், பணத்தை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான வழக்கின்பேரில் அவர்களின் சொத்துகளை முடக்குவதற்கு தமிழக உள்துறை செயலாளர் 2 மாதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களின் சொத்துகளை முடக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
    • கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பல் இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.களை கண்காணித்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    நாமக்கல்லில் பிடிப்பட்ட 5 பேரிடமும் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021-ம் ஆண்டு கொள்ளையடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அப்போது அவர்களின் பெயர், முகவரிகளை மாற்றி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் புகைப்படம், கைரேகை பதிவாகி உள்ளது.

    இவர்கள் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

    ×