என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் இன்று தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.

    தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார். தி.மு.க.வில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது.

    தி.மு.க.வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலையை தி.மு.க. பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது.

    மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.

    திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் தி.மு.க. அரசு, அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை.

    கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க. தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

    நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்தனர்.

    இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை.
    • கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைக்காமல் தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் வக்பு வாரிய சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும் பொழுதே பலத்த எதிர்ப்புகள் உருவானதை தொடர்ந்து இச்சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி.) அனுப்பப்பட்டது.

    அதன்படி ஜே.பி.சி. குழு அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்று வருகிறது.

    அதன்படி, நாளை (திங்கட்கிழமை), சென்னையில் ஜே.பி.சி. கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த உள்ளதாகவும், இக்கூட்டத்தை தி.மு.க. அரசின் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தி.மு.க. அரசு கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு இன்று வரை அதற்கு ஆதரவான ஒரு சில அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு, பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக, எஸ்.டி.பி.ஐ., ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜமாத் இஸ்லாமிய இந்த், தேசிய முஸ்லிம் லீக், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயகக் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இச்சட்டத் திருத்தம் இஸ்லாமிய மக்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள அடிப்படை உரிமையையே தகர்த்து எறிவதாக உள்ளதால், உடனடியாக இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பெரும்பாலான இஸ்லாமியர் நலம் காக்கும் அமைப்புகளை இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு அழைக்காமல் தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும். இந்த அரசின் ஓர வஞ்சனை செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கருத் துக்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வாய்ப்ப ளிக்காத தி.மு.க. அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.
    • துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.

    தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு... மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி.

    * நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.

    * துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.

    * எல்லா விமர்சனங்களையும், வரவேற்கிறோம், எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன் என்றார்.

    • இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்ககளாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் மேகக் கூட்டங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தினம் என்பதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர் நிலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பேரணி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (32), இவரது நண்பர் பூபாலன் (49). இவர்கள் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திண்டிவனத்தில் நிறுத்தி வைத்திருந்த தங்களது மோட்டார் சைக்கிளில் பேரணி கிராமத்திற்கு திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் விலங்கம்பாடி பெட்ரோல் பங்க் அருகே வரும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த காரானது ஏற்கனவே நடந்து சென்ற ஒருவர் மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த கார் அய்யப்பன், பூபாலன் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் இறந்த ஒருவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் மயிலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.
    • அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு திடீரென நீர்வரத்து 184 கனஅடியாக உயர்ந்தது.

    ஏற்கனவே மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி 30 நாட்களுக்கும் மேலாக அதே நிலையில் நீடிக்கிறது.

    அணைக்கு நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்தது. 184 கன அடி நீரை அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சளாற்று கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    இதேபோல் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்தது.

    இதனிடையே பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்தது.

    எ.புதுப்பட்டி, வடுகபட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை இரவு முழுவதும் பெய்தது.

    மேலும் சின்னமனூர், பாளையம், கோம்பை, கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணை 126.25 அடியாக உள்ளது. அணைக்கு 570 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    3888 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.25 அடியாக உள்ளது. 1441 கன அடி நீர் வருகிறது.

    மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3097 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17.4, தேக்கடி 12.6, கூடலூர் 8.4, சண்முகாநதி அணை 8.6, உத்தமபாளையம் 5.6, வீரபாண்டி 2, வைகை அணை 38, மஞ்சளாறு 61, சோத்துப்பாறை 12, கொடைக்கானல் 17 மி.மீ மழை அளவு பதிவானது.

    • கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
    • அவசர காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மின்தடை பிரச்சனை குறைகளை பெற்று சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் இலவச சேவை மையம் அமலுக்கு வந்தது. இது குறித்து மின்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:-

    மின்துறையின் 1912 மற்றும் 18004251912 ஆகிய எண்களுடன் கூடிய 24 மணிநேர மின் உபயோகிப்பாளர் இலவச சேவை மையம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் பொதுவான அல்லது தனிநபர் இணைப்புகளில் மின்தடை ஏற்படும் போது இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் யாரிடம் தகவல் தெரிவிப்பது என்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் மக்கள் தவித்து வந்தனர்.

    உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் போது அவர்களது செல்போன் இணைப்பு கிடைப்பதில்லை. அடுத்தபடியாக அலுவலகத்திற்கு நேரில் சென்று தகவல் சொல்ல சென்றால் அலுவலகம் பூட்டி இருக்கிறது.

    இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் விதமாக 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    சேவை மையத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் உடனடியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்-ஆப் வாயிலாகவும் எஸ்.எம்.எஸ். மூலமும் உரிய பகுதியை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு மின்தடை சரி செய்யப்படும். அவசர காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

    எனவே, மின்துறையின் 1912 மற்றும் 1800425191224 நேர மின்துறை சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு
    • உங்களை வாழ்த்துகிறேன். நானும் மகிழ்கிறேன்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    உங்கள்

    அன்னையைப் போலவே

    நானும் மகிழ்கிறேன்

    இந்த உயர்வு

    பிறப்பால் வந்தது என்பதில்

    கொஞ்சம் உண்மையும்

    உங்கள் உழைப்பால்

    வந்தது என்பதில்

    நிறைய உண்மையும் இருக்கிறது

    பதவி உறுதிமொழி ஏற்கும்

    இந்தப் பொன்வேளையில்

    காலம் உங்களுக்கு

    மூன்று பெரும் பேறுகளை

    வழங்கியிருக்கிறது

    முதலாவது

    உங்கள் இளமை

    இரண்டாவது

    உங்கள் ஒவ்வோர் அசைவையும்

    நெறிப்படுத்தும் தலைமை

    மூன்றாவது

    உச்சத்தில் இருக்கும்

    உங்கள் ஆட்சியின் பெருமை

    இந்த மூன்று நேர்மறைகளும்

    எதிர்மறை ஆகிவிடாமல்

    காத்துக்கொள்ளும் வல்லமை

    உங்களுக்கு வாய்த்திருக்கிறது

    உங்கள் ஒவ்வோர் நகர்வும்

    மக்களை முன்னிறுத்தியே

    என்பதை

    மக்கள் உணரச் செய்வதே

    உங்கள் எதிர்காலம்

    என் பாடலைப் பாடிய

    ஒரு கலைஞன்

    துணை முதல்வராவதை எண்ணி

    என் தமிழ் காரணத்தோடு

    கர்வம் கொள்கிறது

    கலைஞர் வழிகாட்டுவார்

    துணை முதல்வராகும் நீங்கள்

    இணை முதல்வராய்

    வளர வாழ்த்துகிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையில் தற்போது 60.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.19 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 556 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் தற்போது 60.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.

    இதற்கிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    அவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், அண்ணாபூங்கா, ஏரிபூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    காலை நேரத்திலேயே படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×