என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது.
    • மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். அமைச்சர் ரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதைப் போல இருக்கிறது. மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் ரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.

    மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பேசும்போது அடுத்த காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த காந்தியடிகள் பிறந்தநாளுக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

    2016-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று பா.ம.க.வின் கொள்கை முழக்கத்தை காப்பியடித்து மு.க.ஸ்டாலின் முழங்கினார். 2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இப்போது அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் ரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, ரகுபதியா?

    தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் தான். அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் திமுக, மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும் மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல்கள்.

    மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார். ''பாதி கடையை மூடுங்கள்; பாதியை திறங்கள் என்றால், 1 கி.மீ., தூரம் சென்று குடியுங்கள் என்பது தான் அர்த்தம் என்பதால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது" என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதையும், திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் கஜானாக்களை நிரப்புவதற்காக மட்டும் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் முதல் இடத்தில் சட்டம்-ஒழுங்கு, பொதுஅமைதி ஆகியவையும், எட்டாவது இடத்தில் மது விலக்கும் உள்ளன. மக்கள் நலன் கருதி இவற்றை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு உள்ளன. அதனால் மதுவிலக்கை மாநில அரசுகள் தான் செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மது விலக்கு இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பது தோல்வியின் வெளிப்பாடு.

    தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்; அத்தகைய நிலை உருவானால் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஒழிப்பில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.

    தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகாதா? அப்போது கள்ளச்சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் திராவிட மாடல் அரசு தாரை வார்த்து விடுமா?

    அண்டை மாநிலத்தில் மது விற்பனை செய்யப்படும்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்பதெல்லாம் நகைச்சுவையான போலி சாக்குகள். தமிழ்நாட்டைச் சுற்றிலும் மது வெள்ளமாக பாய்ந்து கொண்டிருந்த காலத்தில் தான் உத்தமர் ஓமந்தூரார், குமாரசாமி இராஜா, இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினர்.

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச்சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். அதற்கான வழிமுறைகளை பாட்டாளி மக்கள் கட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    விருதுநகர்:

    காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த அரசு கள்ளச்சாராயத்தையும், போதை பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அரசுடன் காங்கிரஸ் கட்சி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மது இல்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும். தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தை வஞ்சிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

    விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து என்றைக்கு இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரியவில்லை.

    பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகின்றது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்துகின்றது என மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அறிவார்ந்த மக்கள் உள்ளதால் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் அது யூடர்ன் எடுக்கின்றது. அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றது. 2024 தேர்தலுக்கு பின்பு அந்த வீரவசனம் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவில் கடந்த ஆட்சியாளர்கள் திருப்பதி உண்டியலில் கை வைத்து விட்டார்கள் என பவன்கல்யாண் புகார் கூறியுள்ளார். பவன்கல்யாண் பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இருக்கின்றார். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூ.2,000 நிதி, படிக்கின்ற குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.6,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதனை மறக்கடிக்க மத அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஆந்திர மக்கள் புரிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

    பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, நாகேந்திரன். நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் தாராளமாகக் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது.
    • தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள அரசின் வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் எனப்படும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    சென்ற மாதம் ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிசன் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் தாராளமாகக் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

    இதை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்ச், 'போதுமான அளவு இதைத் தடுப்பதற்கான காவலர்கள் இல்லை' என்று கண்டித்ததுடன், 'உயர்நீதிமன்றமே போதைப் பொருளைக் கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்ததாகவும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை எதிர்க்கட்சிகள், உயர்நீதிமன்றம், நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' எனும் வார்த்தைகளை நிரூபிக்கும் வகையில் செயல்படும் இந்த அரசை நம்பி பயன் இல்லை. காவல் துறையின் நேர்மையான அதிகாரிகள் மனது வைத்து செயல்பட்டால் மட்டுமே வாரியக் குடியிருப்புகளில் உள்ள இளைஞர்களை, குறிப்பாக மாணவ, மாணவிகளை அழிவில் இருந்து காக்க முடியும். பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    அதிகார போதையில், தான் வைத்ததே சட்டம்,

    எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வேன்,

    என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை

    என்று அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.
    • இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினார்.

    இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக சுகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2015 இல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 தொகுதி செயலாளர் ஆகவும் 2020 இல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம்.

    இரண்டு பாராளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம். கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

    இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

    அண்ணன் கூறியது : இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார். ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில்

    அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை.

    எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன்.

    இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... என தெரிவித்துள்ளார். 

    தஞ்சாவூர்:

    பொதுமக்கள் எளிதாக புகார் செய்யும் விதமாக தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகம் உருவாக்கிய "உரக்கச்சொல் " என்ற செயலியின் சேவை தொடங்கப்பட்டது.

    மாவட்டக் காவல் அலுவலகத்தில் இந்தச் செயலியை அறிமுகம் செய்த தஞ்சாவூர் சரகக் டி.ஐ.ஜி. ஜியாஉல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள உரக்கச் சொல் என்கிற செயலியைக் செல்போனில் பிளே ஸ்டோர் ஆப் வழியாக பதிவிறக்கம் செய்து, பயனாளரின் பெயர், கைப்பேசி எண்ணைப் பதிவிட்டால், ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) வரும். அதைப் பதிவிட்டால் செயலி இயங்கத் தொடங்கும்.

    குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் பங்கேற்றால், அவற்றை விரைவாக தடுத்துவிடலாம் என்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், தங்களது பகுதியில் அல்லது செல்லும் வழியில் நிகழும் போதைப் பொருள்கள் புழக்கம், சூதாட்டம், லாட்டரி விற்பனை, கள்ளச்சாராயம், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், பொது இடத்தில் மது அருந்துதல், மணல் திருட்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ரவுடிகளின் நடவடிக்கை, தகராறு போன்றவை குறித்து புகார் செய்யலாம்.

    இதில், குற்றம் நிகழும் இடம், என்ன குற்றம், காவல் நிலையம் போன்றவற்றை குறிப்பிட்டால், அது தொடர்புடைய காவல் அலுவலர்களுக்குச் செல்லும். இதையடுத்து, உடனடியாக காவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.

    மேலும், அதில் நடவடிக்கை விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல் துறை உயர் அலுவலர்கள் கண்காணிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் பதிவு செய்யும் புகார்தாரர்கள் பெயர், கைப்பேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும். அதேசமயம் தவறான தகவலை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
    • தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய முடியும்.

    அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர். இது ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    தென் மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த நிலையில், வட கிழக்கு பருவ மழை 3-வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை (4-ந் தேதி) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    • கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்க உள்ளனர்.
    • 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இம்மாநாடு நடைபெற விதிக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி காவல்துறை அனுமதி அளித்தது.

    இதையடுத்து மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் கட்சியின் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று இரவு மாநாட்டிற்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை நேரில் சந்தித்து பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷி மோகன், துணைத்தலைவர் வடிவேல், வக்கீல் அரவிந்த், இளைஞரணி தலைவர் மோகன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • தண்டவாளத்தில் திடீரென சத்தம் கேட்டதால் பணியில் இருந்த ஊழியர் ரெயிலை நிறுத்தியதாக தகவல் கூறப்படுகிறது.
    • திருவனந்தபுரம்- சென்னை ரெயில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் திடீரென சத்தம் கேட்டதால் பணியில் இருந்த ஊழியர் ரெயிலை நிறுத்தியதாக தகவல் கூறப்படுகிறது.

    ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக திருவனந்தபுரம்- சென்னை ரெயில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின் தண்டவாளத்தில் உடைப்பு தற்காலிகமாக சீர்செய்யப்பட்டு நிறுத்திவைத்திருந்த திருவனந்தபுரம் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. 

    • நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் குலசேகரன்பட்டினம்.

    இங்கு வீற்றிற்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன். அம்மையும், அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோவில்களில் காண இயலாத காட்சியாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.


    இச்சிறப்பு மிக்க தசரா திருவிழாவையொட்டி நேற்று காளி பூஜையும், அன்ன தானமும் நடந்ததது. நேற்றுஇரவு 9 மணிக்கு அம்மனுக்குகாப்பு கட்டினர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர்.

    கோவில் கலையரங்கத்தில் சிவலூர் தசரா குழு சார்பிலும், கடற்கரையில் சந்தையடியூர் தசரா குழு சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் தினசரிமாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடியேற்றம் நடந்தவுடன் கோவில் பூசாரி விரதம் இருந்து வந்த பக்தர்களுக்கு காப்பு கட்டினார். இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

    நாளை (4-ந் முதல் வருகிற 11-ந்தேதி வரை தினசரி காலை முதல் இரவு வரைசிறப்பு அபிஷேக ஆரா தனையும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.

    2-ம் திருநாளில் அன்னை கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலம், 3-ம் நாள் திருவிழாவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், 4-ம் திருநாளில் அன்னை மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 5-ம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம், 6-ம் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலம், 7-ம் திருநாளில் அன்னை பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், 8-ம் திருநாளில் கமல வாகனத்தில் கச லெட்சுமி திருக்கோலம், 9-ம் திருநாளில் அன்னை அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு அன்னை வீதி உலாவரும்.

    வருகிற 8-ந்தேதி 6-ம் திருவிழாவில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி வேடம் அணிந்து மேளம், டிரம் செட், தாரை தப்பட்டையுடன் கரகாட்டம், டிஸ்கோ நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.

    அப்போது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா குழு வினர்கள் காட்சியளிப்பார்கள்.

    மிக முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி 10-ம் திருநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷே ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும்.

    காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் தெரு பவனியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • கே.கே. நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி பகுதிகளில் மின்தடை.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    டைடல் பூங்கா:

    தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம். ஜி.ஆர்.நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் மற்றும் கனகம்), வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர். எம்.இசட். மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.ஆர். பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்திநகர், அடையாறு பகுதி.

    ராஜகீழ்பாக்கம்:

    டெலஸ் அவென்யூ பேஸ்-1 மற்றும் 2, அப்துல் கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னையம்மன் கோவில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோவில் தெரு, அருள் நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷம் அவென்யூ, ஜெயந்திரா நகர் மெயின்.

    நாப்பாளையம்:

    மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதிநகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையான்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டக்கரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப்.நகர், சுப்ரமணி நகர்.

    மாங்காடு:

    கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு-மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே. நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அக்டோபர் 6-ந்தேதி பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 92-வது இந்திய விமானப்படை தினத்தையொட்டி, அக்டோபர் 6-ந்தேதி காலை 11 மணியளவில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

    இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

    இந்நிலையில் இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக அக்.6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

    ×