என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் மரம், காடுகளின் பரப்பளவை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு 1.31 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்திய வரைபடத்தின் கடை கோடியில் உள்ள தமிழ்நாடு வளமான காடுகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கடற்கரைகளை இயற்கையாக பெற்றுள்ளது. மனிதனின் வாழ்க்கை முறை என்பது தாவரம், விலங்குகள் மற்றும் உயிர் சூழல் அமைப்பு ஆகியவற்றோடு தவிர்க்க இயலாதவாறு பின்னி பிணைந்துள்ளது.

    எனவே சூழலியல் சமன்பெறுவதற்கு நிலம், நீர், காடுகள் மற்றும் பல்லுயிரின பெருக்கம் ஆகியவற்றை பாதுகாத்து, மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும். பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் மரம் மற்றும் காடுகளின் பரப்பளவை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் செடிகள் நடவு செய்து வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர், தமிழ்நாட்டில் உள்ள மொத்த வனப்பரப்பு எவ்வளவு?, இது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம்? என்று கேட்டிருந்த கேள்விக்கு, "இந்த விவரம் தொடர்பாக எந்த அறிக்கையும் இல்லை" என்ற அதிர்ச்சி தகவலை பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.

    தீவிர காடு வளர்ப்பு திட்டத்துக்கு இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு, பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கு ரூ.37½ கோடி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ரூ.30 கோடி, தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.4.37 கோடி, கடற்கரைகளில் உயிரி கவச முறையை செயல்படுத்த ரூ.15.16 கோடி, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, இந்த ஆண்டு எவ்வளவு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது? என்ற வினாவுக்கு, 1.31 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.

    • கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.
    • ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் நேற்று, கூட்டுறவுத் துறையின் மூலம் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு வகையில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பணி செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசு ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடியில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது.

    மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரும் நிறுவனம்தான் கூட்டுறவு சங்கம். தற்போது புதிதாக அதிரசம், முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர்.

    மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக வழங்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரூ.199-க்கும், எலைட் ரூ.299-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகின்றோம். இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்கள் பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 மையங்களில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • விஜய் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதில் சில மகிழ்ச்சி தருகிறது.
    • ஒரு காலத்தில் மத்தியில் தனிக்கட்சி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் இருந்தது.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஜய் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதில் சில மகிழ்ச்சி தருகிறது. சில வாசகங்கள் மகிழ்ச்சி தரவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். தமிழக அரசியலில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும்?.

    ஒரு காலத்தில் மத்தியில் தனிக்கட்சி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் இருந்தது. 1996-க்கு பிறகு பல கட்சிகள் ஆட்சி செய்கிறது. சாத்தியமில்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் ஆகலாம். எனவே, இதுகுறித்து போகப்போகத் தான் சொல்ல முடியும். பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
    • தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

    "பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.

    நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அவரின் வெற்றி அமையும்.
    • விஜய் ஒரு தேர்தலை பார்த்தபிறகு முடிவு செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், தனது முதல் மாநில மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக பாஜக எம்.எல்., வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    "மாற்றத்தை நோக்கி மக்களை திருப்புவதற்காக விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். அதனால் அவர் திமுகவை பார்த்து கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான். ஏற்கெனவே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் ஆகியவற்றை எடுத்து விஜய் பேசியுள்ளார். இதற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அவரின் வெற்றி அமையும்.

    எத்தனை கூட்டம் வந்தாலும் வாக்கு பெட்டியில் என்ன விழுகிறது என்பதுதான் விஷயம். விஜய் ஒரு தேர்தலை பார்த்தபிறகு முடிவு செய்து கொள்ளலாம். ஆட்சியதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கருத்துகளை விஜய் கூறியது வரவேற்கத்தக்கது." என்றார்.

    • தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி தொழில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    பயணிகள் வசதிக்காக, தெற்கு ரெயில்வே சார்பில் 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதில், தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வழக்கத்தை விட, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    எனவே, பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில்  29, 30 ஆகிய தேதிகளில் பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • 234 தொகுதிகளிலும், ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும்.
    • கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

    2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.

    சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற உள்ளோம். 234 தொகுதிகள் என்றாலும் நாம் 200 தொகுதிகளை பெற வேண்டும். 234 தொகுதிகளிலும், ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை, அதை நான் பார்த்துக் கொள்வேன்" என்று பேசியுள்ளார்.

    மேலும், இக்கூட்டத்தில் பேசிய அவர், "நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை, இந்த இயக்கம் இது போன்ற பலரைப் பார்த்துள்ளது" என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கருத்து விஜயை மறைமுகமாக வைத்து அவர் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும்.
    • புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜயின் உரை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விஜயின் உரையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தி உள்ளார். சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார். தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை!"

    "'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள்."

    ""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர், 'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான "பிளவுவாதத்தை" ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது."

    "ஆனால், சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது."

    "அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடதுசாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா?"

    "பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா? தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது?"

    "பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?"

    " கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை.

    " திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது."

    "அவரது உரையில் வெளிப்படும் "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே!

    குடும்ப அரசியல் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே!

    ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை."

    "'பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல' ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது."

    "ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
    • நமது திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றியைப் பெற வேண்டும்.

    2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "காத்திருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டித்தர உழைப்பைச் செலுத்தவுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினேன்.

    'இலக்கு 200' என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தொய்வின்றி உழைக்க வேண்டும்! நமது திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றியைப் பெற வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்

    • கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.
    • தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

    விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வைத்து நடந்து முடிந்தது. இதில் மற்ற அரசியல் கட்சிகளை மறைமுகமாக விமர்சித்து விஜய் பேசிய விஷயங்கள் பேசுபொருளாகி வருகிறது. மேலும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.

    திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக சார்பில் சமீபத்தில் இந்த கோரிக்கை ஒலிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது விஜய் கூறியுள்ளது அதை மீண்டும் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி   பொதுச்செயலாளர் சரவணன் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

    தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.

    ஆகவே தாங்கள் தற்பொழுது நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

    எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தனது சொந்த கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தம்.
    • வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவைகள் நாளை முதல் தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில், 4வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.

    • மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
    • உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

    மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.

    ×