என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, பாம்புகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தாளவாடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனால் வனவிலங்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த செசன் நகர் அருகே டி.எம்.எஸ். தோட்டம் பகுதி யில் சுமார் 10 அடி நீள முள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது. இந்த மலைப்பாம்பு கோழிகள், ஆட்டை மிகவும் சுலமாக விழுங்கி விடும் அளவிற்கு பெரிதாக இருந்தது.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து உள்ளனர்.
- கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கின.
- கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.
அதன்படி கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கின.
இதையடுத்து பறக்கும் ரெயில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரெயில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் நிற்காததால் அங்கு காத்திருந்த மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது தொடர்பாக ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூறுகையில்,
பறக்கும் ரெயில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என்ற தகவலை முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும்.
வழக்கம்போல ரெயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. மீண்டும் ஆட்டோ பிடித்து சிந்தாதிரிப்பேட்டை வந்தோம். இதுபோன்ற தகவல்களை 2 நாட்களுக்கு முன்பே சொல்ல வேண்டும். ரெயில்வே துறை சரியான தகவலை கூறவில்லை என்று கூறினார்.
கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி - கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- கூடுதலாக 369 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
- பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,176 பேருந்துகளும், பிறஊர்களிலிருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகளும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 12,606 பேருந்துகள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் போக்குவரத்து துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப, அந்ததந்த பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் என 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 745 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதுதவிர வழக்கமாக இயங்கக்கூடிய 2092 பஸ்களுடன் கூடுதலாக 369 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
மேலும் பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
- உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.
- குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.
வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டு விடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் விஞ்சியது. இறுதியாக நேற்று திங்கள் கிழமை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தீப ஒளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீப ஒளி திருநாள் வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தீப ஒளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீப ஒளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீப ஒளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறு தான்.
தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது.
- அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 14 ஆயிரத்து 273 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 7-ந்தேதி காலை சுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும்.
பின்னர், அன்று மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெறும். இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
தொடர்ந்து, வருகிற 12-ந்தேதி யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தங்கம் விலை நேற்று குறைந்தது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,360-க்கும், ஒரு பவுன் ரூ.58,880-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை நேற்று குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59 ஆயிரத்தை தொட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
27-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880
26-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880
25-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,360
24-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-10-2024- ஒரு கிராம் ரூ. 107
27-10-2024- ஒரு கிராம் ரூ. 107
26-10-2024- ஒரு கிராம் ரூ. 107
25-10-2024- ஒரு கிராம் ரூ. 107
24-10-2024- ஒரு கிராம் ரூ. 110
- 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும்.
இந்தநிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக கோவில் கோபுரங்கள் புனரமைப்புபணிகள் நடைபெற்றது. தற்போது புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
வருகிற டிசம்பர் 12-ந்தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இதையடுத்து வரும் டிசம்பர் 12-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சியின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்க மணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர்கள் அர்ஜூன், புவனேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- எங்களது ஆட்சியில் முதலிடத்தைப் பிடித்த உயர்கல்வித்துறை, தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.
- உயர்கல்வி ஒன்றையே நம்பி கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இந்த ஆட்சியாளர்களால் பாழ்பட்டு நிற்பது வெட்கக்கேடானது.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டது. கடந்த 41 மாத கால ஸ்டாலினின்
திமுக ஆட்சியில் கல்வித் துறையைச் சேர்ந்த அனைவரும் வீதிகளில் இறங்கி போராடக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கழக ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா இண்டர்நெட் இணைப்புக்கான டேட்டா கார்டு வழங்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டது; காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டன. தற்போது இந்த ஆட்சியில் விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்படுவதில்லை; டேட்டா கார்டும் வழங்கப்படுவதில்லை.
ஆனால், ஸ்டாலினின் திமுக ஆட்சியில், இந்த ஆட்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகத் திகழும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், எங்களது ஆட்சியில் முதலிடத்தைப் பிடித்த உயர்கல்வித் துறை, தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. உயர்கல்வி ஒன்றையே நம்பி கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இந்த ஆட்சியாளர்களால் பாழ்பட்டு நிற்பது வெட்கக்கேடானது.
கழக ஆட்சியில் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வந்த நிலையில், அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உரிய விதிமுறைகளின்படி நிரப்பப்பட்டு வந்தன.
தற்போது, ஏறத்தாழ நான்காயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; இதில் சுமார் 1,000 கவுரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஸ்டாலினின் திமுக அரசு நிரப்ப உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்த கவுரவ உதவிப் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 25,000/- ரூபாய் வழங்க உள்ளதாகவும்; ஏற்கெனவே சுமார் 7,360 கவுரவ உதவிப் பேராசிரியர்கள் இதே ஊதியத்தில் பணியாற்றுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவச் செல்வங்களின் அறிவை விரிவாக்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள உதவிப் பேராசிரியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவது நடைமுறையில் ஒன்றாகும். அதேநேரம், அவர்களுடைய பணி மூப்பின் அடிப்படையில் உரிய விதிமுறைகளின்படி அவர்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும், வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்பி உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 12,500/- ரூபாய் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தீபாவளி போனஸ் போன்ற வேறு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. கல்விக் கண் திறக்கும் பகுதிநேர பள்ளி ஆசிரியர்கள் மனமகிழ்வுடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- லுஃப்தான்சா கார்கோவின் அறிமுக சரக்கு விமானத்திற்கு தண்ணீர் அடித்து மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- லுஃப்தான்சா கார்கோ நிறுவனம் ஒரு வாரத்தில் இரண்டு சரக்கு விமானங்களை இயக்குகிறது.
சென்னை விமான நிலையத்தில் லுஃப்தான்சா கார்கோவின் அறிமுக சரக்கு விமானம் LH8374 மீது தண்ணீர் அடித்து மாபெரும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
லுஃப்தான்சா கார்கோ நிறுவனம் ஒரு வாரத்தில் இரண்டு சரக்கு விமானங்களை சென்னையில் இருந்து நேரடியாக ஐரோப்பாவிற்கு இயக்குகிறது. இதன் மூலம் வர்த்தகம் மேம்படுத்தப்படுகிறது. கண்டங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து நேரங்களை குறைக்க உதவுகிறது.
- மெட்ரோ ரெயிலில் Non-Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழப்படும்.
- சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் Non-Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் தொடங்கிய 11 ஆண்டுகளில் முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ, சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு தொழில்முனைவோர் ஒரே இடத்தில் பணிபுரியும் தளம், படிப்பதற்கு ஒரு தளம், உணவு சாப்பிடுவதற்கு ஒரு தளம் கட்டப்பட்டு உள்ளது.
- தமிழக அரசின் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்' திட்டங்களின் நிதி உதவியுடன் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள 'முதல்வர் படைப்பகம்' மத்திய அரசின் திட்டம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
இது திரிக்கப்பட்ட தகவல் என்று தெரிவித்துள்ளது. 'முதல்வர் படைப்பகம்' சென்னை கொளத்தூரில் முதலமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில்முனைவோர் ஒரே இடத்தில் பணிபுரியும் தளம், படிப்பதற்கு ஒரு தளம், உணவு சாப்பிடுவதற்கு ஒரு தளம் கட்டப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே இடத்தில் பணிபுரியும் திட்டம் என்பது மத்திய அரசின் 'ஸ்டார்ட்-அப் இந்தியா' மற்றும் தமிழக அரசின் 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்' திட்டங்களின் நிதி உதவியுடன் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.






