என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681-20682) சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

    17 பெட்டிகளுடன் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வந்த நிலையில் அதில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்க தென்னக ரெயில்வே உத்தரவு வழங்கி உள்ளது.

    வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி வரை இந்த கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் திருப்பூர் நோக்கி வருவதற்காக தயாராகினர்.
    • வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    கடந்த 2 மாதத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


    இதனைத்தொடர்ந்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து காங்கேயம் பகவதிபாளையம் அருகே ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் திருப்பூர் நோக்கி வருவதற்காக தயாராகினர். அவர்களை மாநகர எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதற்காக திருப்பூர் மாநகர எல்லை பகுதிகளான பொல்லிகாலிபாளையம், காசிபாளையம், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
    • மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை.

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளையும் தாண்டி பாஜக முன்னிலை பெற்றதால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் பலம் பொருந்திய மாநிலம் மகாராஷ்டிரா. சின்ன இந்தியா என்றே சொல்லலாம். பலதரப்பட்ட மக்களும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள மக்களும் கணிசமான மக்கள்தொகையோடு வாழக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா. அதனால் பரவலாக பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி சரித்திர வெற்றி.

    ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அது நிருபிக்கப்பட்டு உள்ளது. சில நேரங்களில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும்போது கூட அது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிதான் அந்த மக்களிடம் எடுபட்டு இருக்கும்.

    ஹேமந்த் சோரன் ஏதோ தேர்தலுக்காக கைது செய்யப்பட்டது போல கூறுவது தவறு. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. குற்றம் நிருபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். குறைத்து மதிப்பிடவில்லை.

    உண்மையிலேயே பாஜக கட்சி போன தடவை இருந்ததைவிட தற்போது ஜார்க்கண்டில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது. 2 மாநிலங்களிலுமே மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை.

    இன்று யாராலும் வெல்ல முடியாதவராக பாரத பிரதமர் இருக்கிறார் என்பதையும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது என்று கூறினார்.

    • 3000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • கடலுக்கு செல்லாததால் வருமானம் இன்றி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும், கடலில் கடும் அலை சீற்றம் மற்றும் இடி மின்னல் ஏற்பட கூடும் என்பதாலும் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதனால் கடந்த 4 நாட்களாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் இன்று 5-வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அக்கரை பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். 3000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 5 நாட்களாக கடலுக்கு செல்லாததால் வருமானம் இன்றி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    • கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.

    இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழை தற்போது குறைந்துள்ளது.
    • நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக நீடித்து வருகிறது.

    தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழை தற்போது குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து நேற்று வினாடிக்கு 8500 கன அடியாக குறைந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு முற்றிலும் குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி செல்கின்றன.

    • எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர்.

    பல்லடம்:

    மத்திய அரசின் கெயில் நிறுவனம் கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதையடுத்து பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிகாற்று குழாய் பதிக்கப்பட்டது. இது குறித்து தாமதமாக விழிப்புணர்வு பெற்ற விவசாயிகள் எரிகாற்று குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்க கூடாது என கூறி தொடர்ந்து கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கெயில் திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிகாற்றுக்குழாய்களை கெயில் நிறுவனம் அமைத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவை மாவட்டத்தை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எக்காரணம் கொண்டும் எரிகாற்று குழாய்களை அமைக்க கூடாது. கெயில் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
    • விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கோவை:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால்.

    இவர் கடந்த 17-ந் தேதி கேரளாவில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு டெல்லி செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவரை வழியனுப்பி வைக்க கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். அந்த சமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களை சமாதானம் செய்து விட்டு, டெல்லி புறப்பட்டு சென்றார்.

    காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், அங்கு நின்றிருந்த காங்கிரஸ் ஐ.என்.டியூ.சி நிர்வாகி கோவை செல்வன் மீது மோதியதாக தெரிகிறது.

    இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆனது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி கோவை செல்வன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். விமான நிலையத்தில் மயூரா ஜெயக்குமாரும், அவருடன் வந்தவர்களும் வேண்டும் என்றே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் தாக்க முயன்றனர். எனவே அவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • கஸ்தூரி இன்று காலை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.
    • கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்தேன்.

    சென்னை:

    தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி எழும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான கஸ்தூரி தினமும் காலை 10.30 மணிக்கு எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி கஸ்தூரி இன்று காலை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், "கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்தேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி" என தெரிவித்தார்.

    • கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.
    • தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தான்.

    நான் எம்.எல்.ஏ.வாக திண்டுக்கலில் 22 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெற்று, கையெழுத்து போடப்போகும்போது துணை தாசில்தார் ஓடி வந்தார்.

    தபால் ஓட்டு எண்ணுகிறோம். கொஞ்ச நேரம் இருங்கள். கையெழுத்து போடாதீர்கள் என்று கூறினார்.

    சரி வரட்டும். 1000, 2000 ஓட்டுகள் அதிகமாக கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். 5000 ஓட்டு உங்களுக்கு குறைந்து போய் விட்டது என்றார்கள்.

    தபால் ஓட்டுகள் திமுகவிற்கு போய் விட்டது. 5000 குறைத்து 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று கூறினார்கள்.

    அதையாவது எனக்கு கொடுங்க... நான் ஜெயித்து விட்டேன்ல. அதுபோதும் என்றேன்.

    தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைவது போல மகிழ்ச்சி அடைந்தேன்.

    என் தொகுதியில் 1 தபால் ஓட்டு கூட எங்களுக்கு வரவில்லை. எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள். அடக்கொலைகாரப் பாவிகளா...

    தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஓட்டு 80 லட்சம் ஓட்டு. விளையாட்டு கிடையாது தோழர்களே என்று அவர் பேசினார்.

    • திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி., கே.என். அருண் நேருவின் அலுவலகத்தை திறக்கிறார்.
    • கடலூர் துறைமுகம் சங்கரன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    திருச்சி:

    திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.

    இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடையும் அவர் மாலை 4 மணிக்கு கார் மூலமாக துறையூர் புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு துறையூர் ஆஸ்பத்திரி சாலை ரத்னா காம்ப்ளக்ஸில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    மாலை 5.45 மணிக்கு துறையூர் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி., கே.என். அருண் நேருவின் அலுவலகத்தை திறக்கிறார்.

    மாலை 6 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.

    பின்னர் துறையூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செல்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் வி.பி.என். திருமண மண்டபத்தில் நடைபெறும் மீனவர் அணி துணை செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதன் பின்னர் காலை 11 மணிக்கு நாகப்பட்டினம் அவுரி திடலில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    மதியம் 12 மணிக்கு நாகப்பட்டினம் ஏ.எஸ்.ஏ. திருமண மஹாலில் திமுக சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மயிலாடுதுறை சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல் நிகழ்ச்சியாக கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி கம்மியம்பேட்டையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகிறார். காலை 11:15 மணிக்கு கடலூர் துறைமுகம் சங்கரன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக காலை 11. 45 மணிக்கு கடலூர் துறைமுகம் எம்.எம்.எம். திருமண மண்டபத்தில் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு கடலூர் அண்ணா நகர் சி.கே. பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குகிறார் பின்னர் மாலை 4:30 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் கலந்து கொள்கிறார்.

    • மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது கடலுக்கு நடுவே வீடு கட்டியது போல காட்சி அளிக்கிறது.
    • வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்களாக தவிப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவானது. ராமநாதபுரம் நகரிலும் விடாது பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஜினி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த பகுதியில் இடுப்பளவு மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது கடலுக்கு நடுவே வீடு கட்டியது போல காட்சி அளிக்கிறது.

    வீடுகளை மழை நீர் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்களாக தவிப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த குடியிருப்பு வாசிகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து உடனடியாக தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×