என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
- விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி உற்பத்தி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
இதில் நீலகிரியில் விளையும் மலைப்பூண்டு மருத்துவ குணமும் அதிக கார தன்மையும் கொண்டதாகும்.
கடந்த வாரம் வரை மத்திய பிரதேசம, குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து இல்லாததால் நீலகிரி மலைப்பூண்டின் விலை மும்மடங்கு உயர்ந்து கிலோ ரூ.600 வரை கொள்முதல் விலையாக கிடைத்தது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டி வந்தனர்.
தற்போது மீண்டும் வெளிமாநில பூண்டு மேட்டுப்பாளையம் மண்டிக்கு வர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இமாச்சல் பிரதேச பூண்டு அதிகளவில் வர தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் ஏலத்தில் நீலகிரி பூண்டின் விலை வீழ்ச்சி அடைந்து பூண்டு கொள்முதல் மண்டிகளில் விலை பாதியாக குறைந்த ரூ.350 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
மாவட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்துறை, கேர் கம்பை, கப்பட்டி மற்றும் கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது பூண்டு அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு.
- மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
பொதுமக்களால் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும். விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலே முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அனைத்து கிராமத்திற்கும் சாலை வசதி, பஸ் வசதி, குடிதண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு. ஆனால் ஆட்சியில் பங்கீடு கிடையாது. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகள் சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது. மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு பத்மாவதி ராஜகணேஷ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, அருள் கலாவதி, ஆத்தூர் தாசில்தார் முத்துமுருகன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் காணிக்கைசாமி, பாப்பாத்தி, செல்வி காங்கேயன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 20-க்கும் அதிகமான சேவல்கள், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தது.
- நாய்கள் அங்கு இருந்த சேவல்கள், கோழிகளை கடித்து இறந்தது தெரிய வந்தது என்றார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா நெருஞ்சிப்பேட்டை குண்டாங்கல் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் குருவரெட்டியூர் அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ளது.
அங்கு சிறிய அளவில் கொட்டகை மற்றும் கம்பி வேலி அமைத்து அதில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு சேவல் மற்றும் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோழிகளை இரவு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று
விட்டார். இதையடுத்து காலை தோட்டத்திற்கு வந்தார். அப்போது, கோழிகள் ஆங்காங்கே உயிரிழந்த நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்ததுள்ளன. இதனை கண்டு விவசாயி முருகேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரியாகவுண்டனுார் வி.ஏ.ஓ. வீரமுத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறும் போது,
இந்த பகுதியிவல் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து சுற்றிலும் கம்பிவேலி போட்டு கட்டு சேவல், நாட்டுக்கோழி வளர்த்து வருகிறேன். இதை தொடர்ந்து கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 20-க்கும் அதிகமான சேவல்கள், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தது.
கம்பிவேலிக்கு அடியில், துளையிட்டு உள்ளே நுழைந்த நாய்கள் அங்கு இருந்த சேவல்கள், கோழிகளை கடித்து இறந்தது தெரிய வந்தது என்றார்.
மேலும் இதுகுறித்து கொளத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோழிகளை வெறிநாய் கடித்ததா அல்லது மர்ம விலங்குகள் ஏதேனும் கடித்ததா என்பது குறித்தும், சேலம் மாவட்டம் கொளத்தூர் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் நினைவுநாள்!
- மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்.
ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் நினைவுநாள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு - ஒப்பிலா அறிவுக்கூர்மை - மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை தமிழ் சமுதாயம் கொண்டாடும்.
- அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஆளுமையாக இருந்தார் கருணாநிதி.
கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா இறுதிப் போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் 100 வினாடிவினா போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை தமிழ் சமுதாயம் கொண்டாடும்.
தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார்.
பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி பாராளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் தங்கை கனிமொழி.
பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்க வேண்டும். உண்மை வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஆளுமையாக இருந்தார் கருணாநிதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது.
- அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி.
சிவகங்கை:
சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும். அக்கட்சியின் தலைமை அரசுக்கு தலைமைவகிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறி வருகிறார். அவரது கருத்து நியாயமானதுதான்.
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களால் ஆளுமை செய்த கட்சி. தற்போது அது போன்ற ஆளுமை இல்லாததால் அந்த கட்சி குழப்பத்தில் இருக்கிறது.
1967-ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. நாங்கள் வளர வேண்டும், கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதில் தான் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு பிறகுதான் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.
தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் தனிப்பட்ட விரோதத்தால் நடக்கும் குற்றங்களை காவல்துறை தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்தக்குற்றங்கள் பள்ளி வளாகம், நீதிமன்ற வளாகம், மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்துள்ளதுதான் கவலையளிக்கிறது. இது குறித்துதான் கேள்வி எழுப்பப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை கூறுவதில் எந்த கூச்சமும், தயக்கமும் எனக்கு இல்லை.
அதானி நிறுவனம் மீது அமெரிக்க அரசின் நீதித்துறை குற்றச்சாட்டு வைத்து வழக்குத் தொடுத்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் திரட்டிய நிதியை இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசும் பிரதமரும் எந்தக்கருத்தையும் கூறவில்லை. இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கம் குப்புசாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் சக்திவேல் கூலி வேலையும், இளைய மகன் மணிகண்டன் டிராக்டரும் ஓட்டி வந்தார். அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் சக்திவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மணிகண்டனிடம், சக்திவேல் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தம்பி என்றும் பாராமல் மார்பு, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் மணிகண்டனை சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேல் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 29-ந்தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 25-ந்தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூரில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 27-ந்தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 29-ந்தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வரும் 27 மற்றும் 28-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
- ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிகட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுதந்திர தினவிழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும். பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர் 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு (10sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது. வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப்பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்பட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிகட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாற அதில் கூறியுள்ளார்.
- மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார்.
- பனையூர் தவெக அலுவலகத்தில் விவசாயிகளுக்கு விஜய் விருந்து அளித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார்.
இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நில உரிமையாளர்களின் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
த.வெ.க. கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், இன்று விருந்து அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விருந்தளிக்க நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார்.
பனையூர் தவெக அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அவர் விருந்து அளித்தார்.
விஜய் விவசாயிகளுக்கு சைவ விருந்தளித்தார். சாதம், வடை, பாயாசம், பொரியல், வத்தக்குழம்பு, சாம்பார், ரசம், மோருடன் விருந்து அளிக்கப்பட்டது.
- மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதன் காரணமாக இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரிக்கும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் இன்று சபரிமலை சீசன் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
- தமிழ்நாட்டில் வரும் 26 முதல் 29-ந்தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதனால் தமிழ்நாட்டில் வரும் 26 முதல் 29-ந்தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






