என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 7-ந்தேதி பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 7-ந்தேதி பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் தேசிய விரோதிகள். அவர்கள் 2 பேரையும் கண்காணிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விமான நிலைய போலீசார் எச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இருதரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான 'டைனிங் டேபிள்' அமைக்கப்பட்டு இருந்தது.
    • வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    திருமணம்...!

    வீடுகளில் எளிமையாக நடைபெற்ற காலம் மாறி, தற்போது மண்டபங்களில்தான் பெரும்பாலும் நடக்கின்றன. சிலர், நடுக்கடலிலும், நடுவானிலும் கூட திருமணத்தை நடத்துகின்றனர்.

    திருமண விழாக்களில் தங்களது வசதிக்கு ஏற்ப மண மேடை, உணவு அரங்கு உள்ளிட்டவற்றை அமைத்து கொள்கின்றனர். அப்படி ஓர் திருமண விழாதான், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று உள்ளது.

    அதாவது, பொள்ளாச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. வழக்கமாக உணவு சாப்பிட 'டைனிங் டேபிள்'தான் போடப்பட்டு இருக்கும். ஆனால், பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால், தேங்காய் வடிவில் 'டைனிங் டேபிள்' அமைத்து இருந்தனர். 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான 'டைனிங் டேபிள்' அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனை திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் தேங்காய் வடிவில் உள்ள 'டைனிங் டேபிளில்' மகிழ்ச்சியுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். அத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.



    • செல்போன்களில் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது.
    • நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் புதிய யு.பி.ஐ. மோசடி அரங்கேறி வருகிறது. இந்த மாதம் மட்டும் 7 புகார்கள் 'சைபர் கிரைம்' போலீசாருக்கு வந்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது?, பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? என்பது குறித்து 'சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் 'கிஷான் யோஜனா' என்ற திட்டத்தின் பெயரில் மோசடி செயலியை உருவாக்கி அதனை வாட்ஸ்அப் மூலம் மோசடி கும்பல் பகிர்கிறது. இந்த செயலியின் லிங்கை திறந்தால், பெயர், ஆதார் எண், பான் கார்டு, பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மோசடி கும்பல் கைவசம் சென்றுவிடுகிறது. இந்த தரவுகள் மூலம் யு.பி.ஐ. செயலிகளை பயன்படுத்தி மோசடி கும்பல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதலால் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகின்றனர். மேலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மீது தேவையில்லாத அச்சத்தையும் மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது.

    இதுபோன்ற புதிய வகை மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். செல்போன்களில் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்.
    • சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு/ வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, பினவரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 25.11.2024 முதல் 01.12.2024 வரை 07 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

    வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக. அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

    உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நீரில் மூழ்கி வனமாலி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது

    சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

    பள்ளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சித்தபோது, நீரில் மூழ்கி வனமாலி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருவல்லிக்கேணி தேரடி தெருவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
    • வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்!

    அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் அவர்கள் வென்றுள்ளார்.

    அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தக்கலை, திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 3 பேர் போலீசாரிடம் சிக்கினார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 3 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜோகன் (27), கேரளாபுரத்தை சேர்ந்த அபினேஷ் (30), அடப்பு விளையை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களது வங்கி கணக்கையும் முடக்கினார்கள்.

    கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜெயசேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர்.
    • கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.

    மீனம்பாக்கம் சுரங்கப்பாதையில் இருந்து மூவரசம்பேட்டை வரை செல்ல பி.வி. நகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஜி.எஸ்.டி சாலையில் இருந்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, நங்கநல்லூர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, திரிசூலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகவும், ஒரு மாற்றுப்பாதையாக உள்ளது.

    பழவந்தாங்கலில் பி.வி.நகர் காமராஜர் சாலை - என்.ஜி.ஓ காலனி சந்திப்பில் டி.ஜி.கியூ.ஏ. கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இதன் எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி சில வாரங்களுக்கு முன்பு பழுதடைந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு அதை குடிநீர் வாரிய ஊழியர்கள் புது மூடி அமைத்து சரி செய்தனர். மேலும் அதில் வாகனங்கள் எதுவும் சென்று விடாமல் இருப்பதற்காக அதன் பக்கவாட்டில் இருபுறமும் இரும்பு பலகை தடுப்பு அமைத்தனர்.

    இந்த பணிகள் முடிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாகியும் சாலை நடுவே இருந்து இரும்பு தடுப்பு அகற்றப்படாமல் இருப்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் மூவரசம்பேட்டை - திரிசூலம் பகுதியில் கல்குவாரி இருப்பதால் இச்சாலையில் லாரிகள், ஜே.சி.பி. உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் இந்த இரும்பு தடுப்புகளை அப்புறப்படுத்தும் படி அறிவுறுத்தினர். ஆனால் இதுவரை யாரும் இதை எடுக்கவில்லை. உடனடியாக கட்டிடக்கழிவுகள், இரும்பு தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பெண் போதை கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது.
    • பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் சுமார் 30 வயதுடைய பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, மறுநாளே இந்த விமானத்தில், சென்னைக்கு திரும்பி வந்துள்ளதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள், அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அந்த பெண் பயணியின் பையில் பார்சல் ஒன்று இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த பார்சலில், உயர் ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்தது. இந்த கஞ்சா போதை பொருளை பணக்காரர்கள், வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.

    அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 3 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனுடைய சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து இந்த கஞ்சா போதை பொருளை வேறு யாரோ ஒருவர் கடத்திக் கொண்டு வந்து, தாய்லாந்து நாட்டில் இந்த பெண் பயணியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த பெண் போதை கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சமீபத்தில் சென்னையில் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திரைப்பட துணை நடிகைக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது பிரபலமானவர்கள் யாருக்காவது இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சுங்கத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

    • பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் நங்கிலிகொண்டான அருகே புதிய சுங்கச்சாவடி சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தபடி சுங்கச்சாவடி சுற்றி 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் என செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைமையில் அனைத்து சங்கங்கள் இன்று செஞ்சி நகரில் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி செஞ்சி நகரில் டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 10 மணி அளவில் செஞ்சியில் இருந்து வாகனங்களுடன் ஊர்வலமாக சென்று சுங்கச்சாவடி முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

    இதனால் செஞ்சி நகரம் மற்றும் சுங்கச்சாவடி வரை செஞ்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒரு நாளில் 57.07 லட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர்.
    • அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவை அனைத்துப் பிரிவு மக்களாலும் பாராட்டப்படுகிறது.

    சென்னை:

    தமிழக போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021-ல் பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் புரட்சிகரமான பல திட்டங்களைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் முதன்மையான திட்டம் - முதன்முதல் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் "மகளிர் விடியல் பயணத் திட்டம்". மாநிலத் திட்டக்குழு, திருப்பூர், மதுரை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திரச் செலவில் சுமார் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மாபெரும் திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையில் (3½ ஆண்டுகளில்) 570.86 கோடி பயண நடைகள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஒரு நாளில் 57.07 லட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    8,682 புதிய பஸ்கள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதில், கடந்த மாதம் வரை 2,578 புதிய பஸ்கள் வரப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

    வார நாள்களில் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், "அதிர்ஷ்டசாலி பயணிகளை" ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.10,000 பரிசும், அடுத்த 10 பயணிகளுக்கு ரூ.2,000 பரிசுத் தொகையும் மொத்தமாக ரூ.50,000 பரிசு வழங்கப்படுகிறது.

    "சென்னை பஸ்" செயலிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசின் "சிறந்த நுண்ணறிவு போக்கு வரத்து அமைப்பு கொண்ட நகரம்" என்ற விருது வழங்கப்பட்டது. வாட்ஸ்அப் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் குறைகளைத் தீர்வு செய்வதற்கான பொறிமுறைகளை உருவாக்கி உடனுக்குடன் தீர்வு செய்வதற்காக பயணிகள் மத்தியில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றமைக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிருவாகத்தைப் பாராட்டி, 2022-ம் ஆண்டு மூலம் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுடெல்லியில் வழங்கப்பட்டது.

    மொத்தமாக இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட விருதுகளில் 25 சதவீத விருதுகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளன.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியின்போது இறந்த பணியாளர்களின் 766 வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவை அனைத்துப் பிரிவு மக்களாலும் பாராட்டப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
    • சென்னை அடையாறில் உள்ள அலுவலகத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இதை தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள அலுவலகத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத் தில் துணை பொதுச் செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், சண்முகவேல் மற்றும் ரங்கசாமி, கோமுகி மணியன் உள்பட தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி. தினகரன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணியிலேயே இணைந்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×